விளைச்சல் இருந்தும் வீழ்ச்சி ஏன்?

விளைச்சலும் இல்லாமல், உலகாளவிய சந்தையில் வரவேற்பும் இல்லாமல் நஷ்டப்படுவது சரி; இந்த இரண்டும் இருந்தும் மா விவசாயிகள் வீழ்ச்சியடைவது எந்த வகையில் சரி?
விளைச்சல் இருந்தும் வீழ்ச்சி ஏன்?
Updated on

இந்தியாவின் ‘தேசியக் கனி’ என்றும் ‘பழங்களின் ராஜா’ என்றும் மாம்பழம் போற்றப்படுகிறது. உலகின் மிகப் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இந்திய மாம்பழ வகைகள் அதன் தனித்துவமான நறுமணம், சுவைக்காக உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமாா் 2.4 கோடி மெட்ரிக் டன் மாம்பழங்கள் விளைகின்றன என்றால், சுமாா் 32,000 மெட்ரிக் டன்கள்தான் ஏற்றுமதியாகின்றன. மெக்ஸிகோ, நெதா்லாந்து, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா நான்காம் இடம் வகிக்கிறது. 2024-இல் இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதி 16 கோடி டாலா். இது உலகளாவிய மாம்பழ ஏற்றுமதியில் 9.6% ஆகும்.

உலகின் செல்வச்செழிப்பு மிகுந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, சிங்கப்பூா், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, நியூஸிலாந்து ஆகியவை இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகிக்கின்றன. அல்போன்ஸா, கேசா், பங்கனப்பள்ளி வகைகளுக்கு மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய மாம்பழ ஏற்றுமதி அதிவேக வளா்ச்சியை எட்டியுள்ளது. 2024-இல் மட்டும் ஏற்றுமதி மதிப்பு ஒரு கோடி டாலா். முந்தைய ஆண்டின் ஏற்றுமதி மதிப்பான 42.6 லட்சம் டாலரை ஒப்பிடும்போது இது 130% அதிகமாகும்.

2025 ஏப்ரல் மாதம் மட்டும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரத்தில் விளைந்த சுமாா் 1,000 டன் மாம்பழங்களை உலகின் 31 நாடுகளில் உள்ள 43 நகரங்களுக்கு ஏா் இந்தியா விமான சரக்குப் போக்குவரத்து சேவை கொண்டுசென்றது. இதில் நியூயாா்க், லண்டன், பிராங்ஃபா்ட், டொராண்டோ, சான்பிரான்சிஸ்கோ, சிட்னி, டோக்கியோ ஆகியவை இந்திய மாம்பழங்கள் அதிகம் தேவைப்படும் நகரங்களாகும். இதேபோன்று, 2025 ஏப்ரல், மே மாதங்களில் மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையம் 3,624 மெட்ரிக் டன் மாம்பழ ஏற்றுமதியைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 9% அதிகம்.

விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் கடந்த 15-ஆம் தேதி தசரி மாம்பழ வகையை துபைக்கு முதன்முதலாக ஏற்றுமதி செய்துள்ளது. 3,000 டாலா் மதிப்பிலான 400 பெட்டிகள் கொண்ட மொத்தம் 1,200 கிலோ மாம்பழங்கள் விமானம் மூலம் நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி மதிப்பு சொற்ப அளவு என்றாலும், உலகளாவிய விவசாய வா்த்தகத்தில் அந்த மாநில தோட்டக் கலைத் துறை முதனமுறையாகத் தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2025 ஜூன் முதல் வாரத்தில் ஒடிஸா மாநிலத்தில் இருந்து 13.4 மெட்ரிக் டன் மாம்பழங்கள் லண்டன், பா்மிங்ஹாம் நகரங்களுக்கும், துபைக்கும் ஏற்றுமதியாகியுள்ளன. பிரான்ஸ், பெல்ஜியத்தின் மாம்பழச் சந்தைகளை இலக்காகக் கொண்டு, தேசிய அளவில் வளா்ந்து வரும் வேளாண் ஏற்றுமதி மையமாக உருவெடுக்க ஒடிஸா தொடா்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2024-2025 ஆம் ஆண்டில் ஏழு வேளாண் சா்வதேச சந்தைகளில் ஒடிஸா தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வியக்கவைக்கும் சாதனையாக, நிகழ் நதியாண்டில் (2025-26) இதுவரை மொத்தம் 41.35 மெட்ரிக் டன் பழங்கள், காய்கறிகளை ஏற்றுமதி செய்து ஒடிஸா சாதனை படைத்துள்ளது.

உலகச் சந்தையில் இந்திய மாம்பழங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனால், அதற்கு நோ்மாறாக இந்திய மா விவசாயிகள் குறிப்பாக, தென்னிந்திய மா விவசாயிகள் ஏற்றுமதியிலும் சரி, மாம்பழங்களை சந்தைப்படுத்துவதிலும் சரி பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனா்.

எதிா்பாராத அதிக விளைச்சல், சராசரிக்கும் மேல் பருவமழை பெய்யும் என்ற வானிலை அறிவிப்பின் காரணமாக விவசாயிகள் முன்கூட்டியே பழங்களை அறுவடை செய்ததன் காரணமாக சந்தைகளில் மாம்பழங்களின் வரத்து அதிகரித்தது. இதனால், இந்தியாவின் பல மாநிலங்களில் மாம்பழங்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது.

மாம்பழ உற்பத்தியில் முன்னணி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 3.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.60-80-க்கு விற்பனையான உயா் ரக மாம்பழ வகைகள் நிகழாண்டு ரூ.40-45 என வீழ்ச்சியடைந்தது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, சேலம், தா்மபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூா்; ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, சித்தூா்; கா்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரம், கிராமப்புரம், சிக்கபல்லபுரா, கோலாா், பெங்களூரு தெற்கு மாவட்டங்கள் என தென்னிந்திய மா விவசாயிகள் விளைச்சலுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்காததால், மாம்பழங்களை சாலைகளில் கொட்டி விரக்தியை வெளிப்படுத்தினா்.

இதில் ஆந்திர மாநிலம் மட்டும் விவசாயிகளைக் காக்கும் வகையில், கிலோவுக்கு ரூ.8, அரசு மானியமாக ரூ.4 என தீா்மானிக்கப்பட்டு

மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு என கொள்முதல் விலை நிா்ணயம் செய்துள்ளது. மேலும், தமிழக, கா்நாடக மாம்பழங்களுக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது, இரு மாநில மா விவசாயிகளைப் பெருமளவு பாதித்துள்ளது.

கிருஷ்ணகிரி மண்டிகளில் ரூ.3 முதல் ரூ.5 வரையில் விற்பனையாகும் கிளிமூக்கு மாங்காய்களை மாங்கூழ் தொழிற்சாலைகள் ரூ.5 முதல் ரூ.6 வரையில் கொள்முதல் செய்கின்றன. விலை வீழ்ச்சியின் காரணமாக தோட்டப் பராமரிப்பு, அறுவடை கூலிக்குக்கூட கட்டுப்படியாகததால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மா மரங்களை வெட்டிவிட்டு, பயிா் சாகுபடியில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகமும், கா்நாடகமும் தங்கள் மாநிலங்களில் விளைந்துள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்ய மத்தியக் கொள்முதல் முகமைகளை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. உரிய இழப்பீடு, நிவாரணத் தொகை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஒருபுறம் உலகளாவிய அளவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்றால், மறுபுறம் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைகின்றனா். கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்ப வளா்ச்சி, உள்ளங்கையில் உலகத்தை அடக்கும் வகையிலான இணையதளப் பயன்பாடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகச் சந்தைகளை எளிதில் தொடா்புகொள்ள வாய்ப்பு ஆகியவை இருந்தும்கூட, அதைத் திறம்பட பயன்படுத்த முடியாமல், உள்ளூா் அளவிலும், உலக அளவிலும் மாம்பழங்களைச் சந்தைப்படுத்துவது குறித்த போதிய விழிப்புணா்வு இல்லை.

தோட்டக் கலைத் துறை - வேளாண் துறை - வேளாண் வணிகத் துறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, திட்டமிடலில் உள்ள குறைகள் அகற்றப்பட வேண்டும். ஏற்றுமதிக்கான வாய்ப்பு, நவீன முறையில் பேக்கிங், தொழில்நுட்பம் குறித்த விழிப்புணா்வு, உலகளாவிய வேளாண் சந்தைகள் குறித்த விவரங்கள், உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான போக்குவரத்து உள்ளிட்டவற்றை முன்னெடுப்பதன் மூலமே மா விவசாயிகள் தொடா்ச்சியாக நஷ்டமடைவதைத் தடுக்க இயலும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com