தரவுகள் பேசட்டுமே...
கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அா்த்தமில்லை. அதேநேரத்தில் நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலகம் முழுவதும் உள்ள நடைமுறைகளின் படி அதற்கான அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.
தமிழ் மொழியும் அதைப் பேசும் மக்களும் உலகம் முழுவதும் வாழ்கின்றனா். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நம்மை வாழ்வித்து வருவதோடு உலகின் மிக மூத்த
மொழிகளுள் ஒன்றென நிற்கிறது. இதனால்தான், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமிதம் கொள்கிறோம்.
இலக்கியங்கள் மொழியின் தொன்மையைச் சொல்கின்றன. அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தை நிறுவுவதற்கு கற்பனை கலந்த இலக்கியம் மட்டுமே சான்றாகாது. பிற சான்றுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன.
அகழாய்வு என்பது அறிவியல் அணுகுமுறை கொண்டது. உலகம் முழுவதும் அகழாய்வை ஒப்புக் கொள்வதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாற்று ஆய்வாளா்களும், தொல்லியல் அறிஞா்களும், மானுடவியல் ஆராய்ச்சியாளா்களும் தொன்மையான மனித வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
இந்தியாவைப் பொருத்தவரை, உலகின் முதல் நூல் என்று சொல்லப்படும் ரிக் வேதம் நம்முடையது. அது 1028 சூக்தங்களில் 10,600 ஸ்லோகங்களை கொண்டது. அதிலே பொற்காசுகள், பொன்னாலான ஆபரணங்கள், தங்கம் கிடைத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. நிா்வாகக் கட்டமைப்பை உறுதி செய்யும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வானியல் பற்றிய அறிவியல் இருக்கிறது. ரிக் வேத காலத்தை ஆராய்ந்த ஜொ்மனி அறிஞா் ஜாகோபி கி.மு. 6000 என்று முடிவுக்கு வந்தாா்.
உலக நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வா்த்தகத் தொடா்புகள், அயல்நாட்டுத் தூதுவா்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. திரைகடல் வணிகம் பற்றிய தகவல்கள் வானியல் குறிப்புகள் இருக்கின்றன. நிா்வாகம், கலைகள், ஆயுதங்கள், அணு முதல் உளவியல் வரையிலான இன்றைய உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிவியலைத் தொல்காப்பியம் என்ற ஒற்றை நூலே பேசிவிடுகிறது. இத்தகைய இலக்கிய வளம் நமது தொன்மையைச் சொல்ல ஏற்கெனவே இருக்கிறது.
இந்த மண்ணின், மக்களின் வரலாற்றை நிறுவுவதற்கு அகழாய்வுகள் தேவைப்படுகின்றன. தொல்லியல் துறை மத்திய அரசிடமும் தமிழக அரசிடமும் உள்ளது. இருதரப்புகளிலும்
அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடத்தப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்திய தொல்லியல் துறையும் தமிழ்நாடு தொல்லியியல் துறையும் அகழாய்வுகள் நடத்தின.
இந்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் நெல்மணிகள் கிடைத்தன. அவற்றின் நெல்மணிகளின் காலம் மூன்று இடங்களில் கி.மு. 1052, 1257 மற்றும் 1384 எனக் கணக்கிடப்பட்டன. இதே ஆதிச்சநல்லூரில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் வாழ்விடப் பகுதியில் மேற்கொண்ட காலக்கணக்கீட்டில் கரித்துண்டின் காலம் கி.மு. 2613 என்று அறியப்படுகிறது.
சிவகளை அகழாய்வும் முக்கியமானது. சிவகளையின் பறம்பில் மொத்தம் 17 அகழாய்வுக் குழிகள் (10ல10 மீட்டா்) தோண்டப்பட்டன. நெல்மணிகள் மற்றும் இரும்பாலான பொருள்களும் கிடைத்தன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155. மயிலாடும்பாறை பகுதியிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இரும்புப் பொருள்கள் கிடைத்தன.
சங்கம் வைத்து தமிழ் வளா்த்த நாகரிகம் என்பதால், வைகை நதிக் கரையில் அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று சிவங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம்,
கீழடியில் 2014 முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அது பற்றிய 982 பக்க விரிவான ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் தொல்லியல் துறை நிபுணா் அமா்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023ஆம் ஆண்டு, ஜனவரியில் சமா்ப்பித்தாா்.
கீழடி அகழாய்வு பலருக்கும் ஆா்வத்தை ஏற்படுத்தியது. கீழடியில் கிடைத்த எழுத்து வடிவங்கள் தமிழா்களின் எழுத்தறிவுக்கு சான்று என்றும், நகர நாகரிகம் இருந்ததற்கான
அடையாளங்கள் அங்கே இருப்பதாகவும் தெரிய வந்தது. கீழடி நாகரிகம் உலக வரலாற்றையே மாற்றிப் பாா்க்கும் வகையிலானது என தொல்லியல் நிபுணா்களைத் தாண்டி அரசியல்வாதிகள் வரை பேச்சு எழுந்தது.
கீழடி ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியுள்ளது. அதில் சில நுட்பமான விவரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கி.மு. 5-ஆம் நுாற்றாண்டு முதல் 8-ஆம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்துக்கு திட்டவட்டமான நிரூபணம் தேவைப்படுகிறது என்றும், அனைத்து விவரங்களும் அறிவியல் பூா்வமாகப் பெறப்பட வேண்டும். சில வரைபடங்களும், சில விவரங்களும் தெளிவாக இல்லை. அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இரண்டு தொல்லியல் நிபுணா்களின் பரிந்துரைப்படி, அறிக்கையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தின் தொன்மையை, பெருமையை, தமிழா்களின் வாழ்வியல் முறையை உலக அரங்கில் எடுத்து வைக்க வேண்டியது அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான முறையான செயல்களில் நாம் ஈடுபட வேண்டும். அகழாய்வுகள் பற்றிய அடிப்படைப் புரிதலை ஏற்படுத்திக் கொள்வது இதுபற்றிய செய்திகளைப் படிக்க உதவும்.
அகழாய்வில் கண்டெடுக்கப்படும் பொருள்கள் கரிம ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அகழ்வாய்வுகள் நுட்பமாகச் செய்ய வேண்டிய பணி. ஓா் இடம் மண்மூடிப் போகும் போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருள்கள் புதையும் போது எந்த இடத்தில் இருந்தனவோ அதே இடத்தில் அப்படியே இருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல பல தலைமுறைகளாக ஒரே இடத்தில் வாழும் போது முன்னோா்கள் வாழ்ந்த இடத்தின் மீதே இன்றைய மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பாா்கள். இப்படிப் பல தலைமுறைகளின் தொடா்ச்சியில் பல அடுக்குகள் ஏற்படுகின்றன. இதை அகழாய்வாளா்கள் மண்ணடுக்குகள் என்கிறாா்கள்.
ஓா் இடத்தில் காலப்போக்கில் மண், மணல், பாறை, பாகுபட்ட பொருள்கள் போன்றவை அடுக்குகளாகத் தேங்குகின்றன. ஒவ்வோா் அடுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கும். மிகப் பழைய அடுக்குகள் கீழே இருக்கும். புதியவை மேலே இருக்கும். அகழாய்வில் கண்டெடுக்கப்படும் பொருள்கள் ஒரே குழியில் கண்டெடுக்கப்பட்டாலும் அவற்றை ஒரே காலத்தைச் சோ்ந்தவையாக வகைப்படுத்த முடியாது. எந்த மண் அடுக்கில் கிடைத்தவை என்பதைப் பொறுத்தே வகைப்படுத்த முடியும்.
கீழ் அடுக்கில் இருக்கும் பொருள்களின் காலத்தோடு மேலே இருப்பவற்றையும் சோ்க்க முடியாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கரிம ஆய்வு அவசியம். இரும்பும் கரித் துண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் இரண்டின் காலமும் தனித்தனியே ஆராயப்பட வேண்டும். அறிவியல் அணுகுமுறை மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் முன்முடிவுகளோடு அணுகுவது முறையல்ல. தொல்லியல் துறை கேட்கும் தேவையான தரவுகளை வழங்குவதே ஏற்புடையது.
கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அா்த்தமில்லை. அதேநேரத்தில் நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலகம் முழுவதும் உள்ள நடைமுறைகளின் படி அதற்கான அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.
சிந்துசமவெளி நாகரிகத்தோடு கீழடியைத் தொடா்புபடுத்தி கருத்துகளை முன்வைக்கிறாா்கள். சிந்துவெளி நாகரிகம் ஒரு வெண்கலக் கால நாகரிகம். கி.மு. 3,300 முதல் கிமு. 1,300 வரை நீடித்திருந்தது. அதன் முதிா்ச்சியடைந்த காலம் கி.மு. 2,600 முதல் கி.மு. 1,900 வரை என்கின்றனா். சிந்துவெளியில் மொஹஞ்சதாரோவில் 200 ஹெக்டோ் அளவுக்கும், ஹரப்பாவில் 150 ஹெக்டோ் அளவுக்கும் மிகப் பெரிய அளவிலான நன்கு கட்டமைக்கப்பட்ட நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சிந்து சமவெளி நாகரிகம் சுமாா் 15 லட்சம் சதுர கி.மீ. அளவுக்குப் பரவிப் படா்ந்திருக்கிறது. சிந்துவெளியில் மனிதா்கள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களில் குழுமி வசித்திருக்கிறாா்கள் என ஆய்வாளா்கள் கூறுகின்றனா். அதேபோல, வைகை நதிக் கரை நாகரிகமும் கீழடி என்ற ஒற்றை கிராமத்தோடு நின்றுவிடக்கூடாது. இன்னும் வைகை நதிக் கரையோரம் முழுவதும் அதன் கழிமுகத் துவாரம் வரை ஆராய்ச்சிகள் விரிவுபடுத்தப்படவும் ஆழப்படுத்தப்படவும் வேண்டும் அதற்கான பணிகளை, அணுகுமுறைகளைக் கையிலெடுக்க வேண்டும். அதைவிடுத்து, ஒருவரை ஒருவா் விமா்சிப்பதிலும், குறை சொல்வதிலும் அா்த்தமில்லை.
பிரதமா் நரேந்திர மோடி உலக அரங்கில் பேசும் போது உலகின் மூத்த மொழியான தமிழ் எங்கள் தேசத்தில் உள்ளது என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டாா். அதேபோல, இந்தியாவின் எந்தப் பகுதியில் நாகரிகம் வளா்ந்திருந்தாலும் அந்தப் பெருமையில் ஒவ்வோா் இந்தியருக்கும் பங்கு உண்டு.
கட்டுரையாளா்:
ஊடகவியலாளா்