
முனைவர் அ.முஷிரா பானு
"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ' }சீராட்டி, பாராட்டி வளர்த்த பெண் பிள்ளைகளை வரதட்சிணைக்கு பலி கொடுத்து விட்டு நிற்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த வரிகள் பொருந்தும்.
"திருமண மேடை' என்பது இரண்டு மனங்களும், இரு குடும்ப உறவுகளும் இணையும் ஆனந்த மேடையாக இருக்க வேண்டுமே தவிர, பெண்களை விலை பேசும் வியாபார மேடையாக மாறி விடக்கூடாது.
"வரதட்சிணை' என்பது மரபல்ல; அது ஒரு சமுதாயத்தின் அவலமாக அல்லவா கருதப்பட வேண்டும். இன்றைய நவநாகரிக யுகத்தில் எத்தனையோ விஷயங்களெல்லாம் காணாமல் போய்க் கொண்டிருக்கும் போது, இத்தகைய பழக்க வழக்கங்கள் மறையாமல் இருப்பது ஆச்சர்யமே!
நம் நாட்டில் கல்வி, பண்பாடு, நாகரிகம் என்பவையெல்லாம் வளர்ந்துள்ள நிலையில், வரதட்சிணை கொடுமை இன்னும் நீங்காமல் தொடர்கிறது என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். பெண் குழந்தையைப் பெற்ற பெற்றோர், அவர்கள் திருமண வயதுக்கு வந்தவுடன் மனஅழுத்தம், பொருளாதாரச் சுமை, சமுதாய நியாயங்களை மீறிய கொடுமைகள் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.
சமுதாயத்தில் தங்களது கெüரவத்துக்காகவும், அந்தஸ்துக்காகவும் நடைபெறும் ஆடம்பரத் திருமணங்கள் பெருகிவிட்டன. மாப்பிள்ளை வீட்டாரின் குணாதிசயங்களையும், மாப்பிள்ளையின் அடிப்படை பண்புகளையும் ஆராயாமல், வசதிக்காக மட்டும் செய்யும் திருமணங்கள் பெருகிவிட்டன.
வரதட்சிணை மரணங்கள் நடைபெறும் போதெல்லாம் சமுதாயத்தின் மீது பழியைப் போட்டு விட்டு, எங்கோ உட்கார்ந்து பரிதாபப்பட்டு விட்டு நான்கு நாள்களில் மறந்து விட்டு அடுத்த மரணம் வரை அதைச் சிந்திப்பதில்லை.
சமுதாயம் என்பது நான்கு பேர் என்றால், அந்த நான்கில் ஒருவர் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது வீட்டில் என்ன நடக்கிறது? நாம் நமது மகனுக்கு, மகளுக்கு என்ன செய்கிறோம்? அல்லது என்ன செய்யப் போகிறோம்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
கல்வியில் முன்னேற்றத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் வேளையில், இத்தகைய மரபுகளால் அந்தக் கல்வியைச் சிதைக்கிறோம் என்பதே உண்மை.
இந்த வரதட்சிணை பிரச்னையில் ஆண்களை மட்டும் கைகாட்டி சென்று விட முடியாது. பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திலும், அநீதி இழைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும், மறைக்கவும் முடியாது. பெண்களுக்கு பெண்களே செய்யும் கொடூரமான செயல் அது.
பெற்றோர்களும் தங்கள் பெண்களுக்கு பிரச்னை என்று வரும் போது, அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கையாள வேண்டும். அவர்களுக்கு பக்கதுணையாக இருந்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவ வேண்டும். 'விட்டுக் கொடுத்து வாழு' என்று கூறுவது "உயிரை விடுவது' என்ற அர்த்தமில்லை. பெண்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்து வாழும் பக்குவமுடையவர்களாக மாற்றத்தான் கல்வி உதவுகிறது.
சுற்றி உள்ளவர்கள் என்ன பேசுவார்கள்?, நம் குடும்ப உறுப்பினர்களின் நிலை என்ன? என்று எண்ணி தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது.
பெண்களின் பாதுகாப்புக்காக அரசும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அடிப்படைச் சட்டங்களைத் தெரிந்துகொண்டு, அதை பெற்றோருக்கு புரியவைத்து, அவர்களின் துணையுடன் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மகளை வளர்க்கிறீர்கள் என்றால், தன்னிலை உணரும் மனதையும், தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் கொடுத்து வளர்க்க வேண்டும்.
பெண்களை வரனாகப் பார்க்காமல் வரமாக பார்க்கும் சமுதாயமே முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதை உணரவேண்டும். நான் ஒரு பெண்ணை அன்புக்காக திருமணம் செய்கிறேன்; அவளது நகைக்காக அல்ல என்று சொல்லும் ஆண்கள்தான் நம் சமுதாயத்தின் நம்பிக்கை.
திருமணத்துக்கு முன்பாக வரதட்சிணையை நிராகரிக்கும் எண்ணம் இளைய தலைமுறையில் தோன்ற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கல்லூரிகள், பள்ளிகள், நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருச்சி ஜமால் முகமது கல்லுரியில் "கைக்கூலி கைவிட்டோர் சங்கம்' என்ற அமைப்பு பல ஆண்டுகளாக இயங்கி, அதிலுள்ள மாணவ, மாணவிகள் வரதட்சிணையால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், வரதட்சிணை வாங்காமலும், கொடுக்காமலும் திருமணம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களது வாழ்விலும் கடைப்பிடித்து தனது திருமணத்திலும் செயல்படுத்த முனைகின்றனர்.
இத்தகைய அமைப்புகளை பல கல்லூரிகளில் உருவாக்கவும், இடைவிடாது செயல்படுத்த அரசும், மக்களும் ஊக்குவிக்க வேண்டும். அடிப்படைச் சட்ட அறிவை அனைவருக்கும் வழங்குவது அவசியமானது. அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது அத்தியாவசியமாகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் வரதட்சிணைக்கு எதிராக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வரதட்சிணை என்பது ஒரு மனித உரிமை மீறலாகும். இந்த கொடுமையைத் தடுக்க, சமுதாய மாற்றமும், சட்ட கடைப்பிடிப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அன்பு, பரஸ்பர மதிப்பு மற்றும் சமநிலையான உறவுகளால் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே இன்றைய இந்திய சமுதாயத்தின் குறிக்கோளாக மாற வேண்டும்.
மாற்றத்தைத் தேடுவதை நிறுத்திவிட்டு நாமே அதை உருவாக்குவோம்! மீண்டும் ஒரு விதி செய்வோம்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.