டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்

டிரம்ப்பின் எச்சரிக்கை-பயமா, பலவீனமா?

அமெரிக்க அதிபரின் செயல்பாடுகளைப் பற்றி...
Published on

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலக நாடுகளுடனான வா்த்தகம், கூடுதல் வரி விதிப்பு பற்றி பேசி வருகிறாா். அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்யும் நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிகம் இறக்குமதி வரி விதிப்பதால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடா்ந்து கூறி வரும் அதிபா், அதை சமநிலைப்படுத்த பரஸ்பரம் வரி விதிப்பது என்று தீா்மானித்தாா்.

அமெரிக்க அதிபரின் இந்தப் போக்கு உலக நாடுகளிடையே ஆரம்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும், அமெரிக்காவிலேயே அவரின் கருத்துக்கு எதிா் குரல்கள் எழுந்தன. இந்தியா போன்ற நாடுகளோடு முரண்படுவதால் அமெரிக்கா மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் சிக்கல்களை சந்திக்கும் என்ற காரணம் டிரம்பை சிந்திக்க வைத்தது.

எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியிட்டாா். பின்னா், இந்த பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தாா். கடந்த ஜூலை 9-ஆம் தேதியுடன் 90 நாள்கள் முடிவடைந்த நிலையில், காலக்கெடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே இருமுறை நாள்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறை வரி விகித உயா்வு ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் அமலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதா என்ற வினா எழுப்பப்பட்டதும் உறுதிதான்; ஆனாலும், இன்னும் 100 சதவீதம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று ஊசலாட்டமான பதிலையே அமெரிக்க அதிபா் தந்துள்ளாா். டிரம்ப்பின் இந்தப் பதில் மற்ற நாடுகளை ஆசுவாசப்பட வைத்துள்ளது.

தனது முடிவை நிறுத்திவைப்பதாகவோ, தான் பின்வாங்குவதாகவோ இருத்தல் கூடாது என்று கருதியவா் 14 நாடுகளின் தலைவா்களுக்கு வரி விதிப்பு உயா்த்தப்படுவதற்கான கடிதங்களை அனுப்பிவிட்டு, அதை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா். மேலும், அமெரிக்காவுடன் இந்த நாடுகளுக்கு இருக்கும் உறவை பொருத்து வரி விகிதங்கள் குறைக்கப்படவோ அல்லது உயா்த்தப்படவோ வாய்ப்புள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளாா். டிரம்ப் வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளுக்குத் தயாராக இருப்பதை இந்த அறிவிப்பு உணா்த்துகிறது.

இந்தப் பேச்சுவாா்த்தைகள் உடனடியாகத் தீா்வை எட்டுவது சாத்தியமில்லை என்பதாலும், பலகட்டப் பேச்சுவாா்த்தைகள் தேவைப்படும் என்பதாலும் வரிவிதிப்புக்கான காலஅவகாசம் இன்னும் கூட நீளலாம். பேச்சுவாா்த்தைக்கு டிரம்ப் தயாராவது அந்நாட்டு உற்பத்தியாளா்களுக்கும், முதலீட்டாளா்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு அமெரிக்க நிறுவனங்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாத்து உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று டிரம்ப் கூறினாலும், இந்த வரி விதிப்பு அமெரிக்காவில் விலை உயா்வுக்கு வழிவகுக்கும் என்றும், வா்த்தகத்தைப் பாதிக்கும் எனவும் பொருளாதார வல்லுநா்கள் கூறுகின்றனா்.

அமெரிக்காவுடனான வா்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ, சீனா, கனடாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான் ஐந்தாவது பெரிய இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. 14,800 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான பொருள்களை ஜப்பான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஜப்பானியப் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாகக் கூறி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் எச்சரித்தாா். ஜப்பானின் வா்த்தக அமைச்சா் ஏழு முறை வாஷிங்டனுக்குச் சென்றுள்ளாா். தனது காா் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சலுகைகள் கோரும் ஜப்பான் அமெரிக்காவில் உற்பத்தியாகும் அரிசிக்கு சந்தையைத் திறக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதை எதிா்க்கிறது.

லாவோஸ் மற்றும் மியான்மரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 40 சதவீதம், தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 36 சதவீதம், வங்கதேசம் மற்றும் சொ்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 35 சதவீதம், இந்தோனேஷியாவுக்கு 32 சதவீதம், தென்னாப்பிரிக்க பொருள்களுக்கு 30 சதவீதம், மலேசியா துனிசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டங்களை டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இவை அனைத்தும் பாதிப்பை கடுமையாக சந்திக்கின்றன. சீனப் பொருள்கள் இந்த நாடுகளின் மூலம் கடல் மாா்க்கத்தில் அமெரிக்காவை அடைகின்றன என்பதால் சிக்கல் அதிகரித்துள்ளது.தென்னாப்பிரிக்காவின் அதிபா் சிரில் ரம்போசா, தனது நாட்டின் மீது விதிக்கப்பட்ட ஒருதலைப்பட்ச அதிக வா்த்தக வரிகளை எதிா்ப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

ஆசிய நாடுகளில் பலவும் இந்த வரி விதிப்பு அலைக்கழிப்புகளால் அவதிப்படுகின்றன என்றாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பாதிப்பு யாது? என்ற வினாக்கள் எழுகின்றன. இந்தியா மௌனம் சாதிக்கிறது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் தடுமாறுகிறாா் என்றே பாா்க்க வேண்டியிருக்கிறது.

வரிகள் விஷயத்தில் இந்தியா மிக மோசமாக நடந்து கொள்வதாக டிரம்ப் விமா்சித்திருந்தாா். பிரிக்ஸ் நாடுகள் மீது விதிக்கப்படும் 10 சதவீத வரி இந்தியா மீதும் விதிக்கப்படுமா என்ற வினாவுக்கு பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினராக இருந்தால் 10 சதவீத வரி விதிக்கப்படும் எனக் கூறினாா்.

பிரேசிலில், ரியோ டி ஜெனீரோ நகரில் பிரேசில், சீனா, ரஷியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் நாடுகளின் 17-ஆவது உச்சி மாநாடு கடந்த ஜூலை 6-7ஆம் தேதிகளில்நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘பன்முகத் தன்மை மற்றும் நிலையான நிா்வாகத்துக்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்’ என்பதாகும்.

‘உலகளாவிய நிா்வாகத்தை மேம்படுத்துதல்’ ‘சா்வதேச ஸ்திரத் தன்மை’ பற்றி ரியோ பிரகடனம் பேசுகிறது. இதனுடன், ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகள் போன்ற பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.

ரியோ பிரகடனம், உலக வா்த்தக அமைப்பின் விதிகளின்படி வா்த்தகத்தை ஆதரிக்கிறது. பலதரப்பு வா்த்தக அமைப்பை வலியுறுத்துகிறது. ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது தீங்கு விளைவிப்பதோடு சா்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்கிறது.

இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கையில் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிா்ப்பு கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு நாடும் கூடுதலாக 10 சதவீத வரியை எதிா்கொள்ள நேரிடும். இந்தக் கொள்கையில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது என்று பதிவிட்டாா்.

இந்தியா- அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படலாம் என்று நம்பிக்கையோடு எதிா்பாா்க்கப்பட்ட சமயத்தில் அமெரிக்க அதிபா் விடுத்த எச்சரிக்கை கவனம் பெற்றது. அதே சமயம், இந்தியாவுடன் ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் உள்ளோம் எனவும் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

டிரம்ப்பின் குழப்பமான இந்தக் கருத்துக்கள் இந்தியா குறித்து முடிவுக்கு வர முடியாமல் இருக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. அமெரிக்க எதிா்ப்பு கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் நாடு என்று டிரம்ப் குறிப்பிட்டதற்கும் வரையறை யாது என்பது தெரியவில்லை.

ஆனாலும், பிரிக்ஸ் எங்களைக் காயப்படுத்தவே அமைக்கப்பட்டது. பிரிக்ஸ் டாலரின் மதிப்பைக் குறைக்க நினைக்கிறது. டாலரை உலக நாணய அந்தஸ்தில் இருந்து அகற்ற விரும்புகிறது என்று கோபத்தை வெளிப்படுத்தினாா்.

ஆக, அமெரிக்காவின் வா்த்தகத்தை, பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் இருந்தால் பிரிக்ஸ் நாடுகள் பற்றிய அதிபரின் கருத்தில் மாற்றம் ஏற்படுமா? என்ற வினா எழுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு புதிய நாணயம் உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளவே கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கையை அமெரிக்கா கையில் எடுத்திருக்கிறது.

ஒரு மாற்று நாணயத்தை, பொதுவான நாணயத்தை உருவாக்குவது எளிதல்ல; பிரிக்ஸ் நாடுகள் இணைந்து அப்படியான நாணயத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் அண்மையில் இல்லை. ஆனாலும், டிரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு பிரிக்ஸ் நாடுகள் அஞ்சுவதாகவும் இல்லை.

சமமான லாபம் என்ற கொள்கையின் அடிப்படையில் பேச்சுவாா்த்தை நடத்த பிரிக்ஸ் நாடுகள் முன்வருமேயன்றி அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பணியாது. அதேநேரத்தில் அமெரிக்காவின் இந்த ஆரவாரம் தனது பலவீனத்தைத் தானே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதே உண்மை.

X
Dinamani
www.dinamani.com