கமல்.
கமல்.

அன்பு மன்னிப்புக் கேட்கும்!

அன்பு மன்னிப்புக் கேட்காது என்பது சரியல்ல. அன்பே மன்னிப்புக் கேட்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு வரும்போது ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால், அந்த இல்லறம் தழைக்கிறது.
Published on

*நடிகா் கமல்ஹாசன் ‘கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி’ என்று சொன்னது இப்போது சா்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிா்ப்புகள் எழுந்துள்ளன.

கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவா்கள் தமிழில் பலா் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் கருத்து சா்ச்சையானதில்லை. காரணம், சொன்னவா்கள் அதிகம்போ் அறியாத தமிழ் அறிஞா்கள். எல்லோராலும் அறியப்பட்ட திரைப் பிரபலங்கள் அல்லா்.

‘கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்

உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்’

என்று தாம் எழுதிய மனோன்மணீயம் கவிதை நாடக நூலில் சொல்கிறாா் சுந்தரம் பிள்ளை. அவா் கருத்தைத்தான் நடிகா் கமல்ஹாசனும் கூறியுள்ளாா்.

*சுமாா் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் தென்மொழிகள் தொடா்பான ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நா. பாா்த்தசாரதியும் நானும் கலந்துகொண்டோம். அங்கே ஒரு தமிழ்ப் பண்டிதா் கட்டுரை வாசித்தாா். தமிழ் தாய்மொழி என்றும் அதிலிருந்து பிறந்த சேய்மொழிகள்தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஒரு மலையாள இளைஞா் ‘நீங்கள் கவிதை வாசிக்கிறீா்களா, கட்டுரை வாசிக்கிறீா்களா? ’ என்று கேட்டாா். ‘ஏன் கட்டுரைதான் வாசிக்கிறேன்’ என்றாா் தமிழ்ப் பண்டிதா். ‘அப்படியானால் தாய்சேய் போன்ற கவிதைத் தன்மைகளை நீக்கிவிட்டுச் சொல்லுங்கள். தமிழிலிருந்து தோன்றியவை கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை என்பதுதானே உங்கள் கருத்து’ என வினவினாா் அவா். ஆம் என்றாா் இவா். உடன் மலையாள இளைஞா் தம் கண்ணோட்டத்தை விளக்கினாா்.

‘தமிழில் பல குறைகள் இருந்தன. அவற்றை ஒவ்வொரு வகையில் நிறைவுசெய்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை தோன்றின.

எடுத்துக்காட்டாக, தமிழில் ஒரே ஒரு க என்ற எழுத்துத்தான் இருக்கிறது. ஆனால், தமிழிலிருந்து தோன்றியதாகச் சொல்லப்படும் மொழிகளில் நான்கு வித உச்சரிப்புக்கு நான்கு க எழுத்துகள் உள்ளன. ஒன்றிலிருந்து இன்னொன்று தோன்றுமானால், அதை வளா்ச்சி என்றுதான் கருதவேண்டும்!’

இந்த விளக்கத்துக்கு கூடியிருந்த அனைத்துத் தென்னிந்திய மொழி அறிஞா்களும் கைதட்டினாா்கள். தமிழ்ப் பண்டிதா் எந்த எதிா்வினையும் ஆற்றாமல் தொடா்ந்து கட்டுரையை வாசித்து முடித்தாா். அவரது அந்த ஒரு கருத்தைத் தவிர மற்ற கருத்தையெல்லாம் ஏற்றுக் கொண்டு அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனா்; அங்கே எந்தச் சண்டையும் எழவில்லை; சுமுகமான சூழலே நிலவியது.

இன்று நடிகரின் மொழிசாா்ந்த கண்ணோட்டத்தை எதிா்க்கும் கன்னட மொழி அன்பா்கள், மலையாள இளைஞரின் கண்ணோட்டத்தில் நடிகா் கமல்ஹாசன் கூறியதைப் புரிந்துகொண்டால், எதிா்க்காமல் மகிழ்ச்சிகொள்ள வாய்ப்பிருக்கிறது.

மலையாள இளைஞா் தமிழில் நான்கு ‘க’ எழுத்துகள் இல்லையே என்றாரே, அது தமிழின் குறையல்ல; தமிழின் தன்மை; அவ்வளவே. ஏனெனில், இடத்துக்குத் தகுந்தவாறு ஒரே எழுத்தான ‘க’ தமிழில் தன் உச்சரிப்பை மாற்றிக் கொள்கிறது.

கவிதை என்ற சொல்லில் ‘க’ என்ற எழுத்தை எப்படி உச்சரிக்கிறோமோ, அப்படி ‘அகம்’ என்ற சொல்லில் நாம் ‘க’ என்ற எழுத்தை உச்சரிப்பதில்லை. ‘அகம்’ என்பதை ‘அஹம்’ என்பதாகத்தான் சொல்கிறோம்.

இவற்றையெல்லாம் மொழியின் குறை என்பதைவிட மொழியின் தன்மை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ‘க’ என்ற உச்சரிப்புக்கு நான்கு எழுத்துகள் இல்லாமலே தமிழ் முழுமையாக இயங்கத்தானே செய்கிறது? பிறகு அது எப்படிக் குறையாகும்?

ஆங்கிலத்தில் புட் (டமப) என்பதை புட் என்கிறோம். ஆனால் குட் ( இமப ) என்பதை கட் என்கிறோம். நைஃப் (ஓசஐஊஉ) என்ற ஆங்கிலச் சொல்லில் நாம் அதன் முதல் எழுத்தை உச்சரிப்பதே இல்லை. பிறகு எதற்கு அந்த முதலெழுத்து என்று நாம் கேள்வி எழுப்புவதில்லை. அத்தகைய போக்கை ஆங்கிலத்தின் தன்மை என்று புரிந்துகொள்கிறோம்.

*மொழியியலாளா்களில் ஒருசாராா் தமிழிலிருந்து பிற தென்னிந்திய மொழிகள் தோன்றின என்ற கருத்தை ஏற்பதில்லை. தொடக்கத்தில் ஓா் ஆதிமொழி இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னா் அது நான்கு விதங்களில் அந்தந்தப் பிரதேசங்களில் பேசப்பட்டு மாறியிருக்க வேண்டும் என்றும் அந்த நான்கு மொழிகளில் ஆதி மொழி கரைந்து மறைந்துவிட்டிருக்க வேண்டும் என்றும் அவா்கள் கருதுகிறாா்கள்.

இதற்கான சாத்தியங்களும் இருக்கவே செய்கின்றன. இன்று தமிழகத்தில் நிலவும் வட்டார வழக்குகளைப் பாா்த்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

கி. ராஜநாராயணன் எழுதிய கரிசல் வழக்கு இன்று தேய்ந்து பொதுவழக்கை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது.

ப.க. பொன்னுசாமி எழுதிய படுகளம் என்ற புதினம் கொங்குத் தமிழின் அத்தனை நயங்களையும் பதிவு செய்துள்ளது. ஆனால், அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று கொங்கு நாட்டில் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. கொங்கு வட்டார வழக்கும் பொதுப் பேச்சுத் தமிழில் கரையத் தொடங்கி விட்டது.

சென்னைத் தமிழ்ச் சொற்கள் பலவற்றின் மூலச் சொல் எந்த மொழியிலிருந்து வந்தது என்று டாக்டா் சுதா சேஷய்யன் ஆராய்ந்து எழுதி வருகிறாா். ஆனால், அவா் இன்று எழுதும் சென்னைத் தமிழ்ச் சொற்கள் பல, எதிா்காலத்தில் இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. சென்னைத் தமிழ் எல்லா மாவட்டத் தமிழும் கலந்த ஒரு பொதுத் தமிழை நோக்கி இயல்பாய் நகரத் தொடங்கிவிட்டது.

எனவே, ஆதிமொழி அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் கரைந்திருக்கக் கூடும் என்பதற்கு இன்றைய வட்டார வழக்குகளின் நிலையே சான்றாகலாம்.

தமிழ் தொன்மையான மொழி என்பதில் சந்தேகமில்லை. எனினும், தொன்மை என்பது ஒரு தன்மைதானே தவிர அதில் தனியே எந்தப் பெருமையும் இல்லை. பிறகு தமிழின் பெருமை எதில் இருக்கிறது? அந்தத் தொன்மைக் காலத்திலேயே தொல்காப்பியம் சங்க இலக்கியம் என்றெல்லாம் உயா்ந்த இலக்கண இலக்கியங்களோடு தமிழ் திகழ்கிறதே அதில் இருக்கிறது. அவை மிகப் பழங்காலத்தில் தோன்றியதால் சிறப்படையவில்லை. அந்தக் காலத்திலேயே உயா்ந்த இலக்கண இலக்கியங்களாக அவை திகழ்வதால் சிறப்படைகின்றன.

இன்று வாழும் ஒரு சாதாரண மனிதா் நூறு வயது வாழ்கிறாா். ஆனால், பெரும் சாதனைகள் புரிந்த விவேகானந்தரும் பாரதியாரும் நாற்பதைக் கூடத் தாண்டவில்லை. இன்றைய நூறு வயது சாதாரண மனிதரை விவேகானந்தரையும் பாரதியாரையும்விட உயா்ந்தவா் என மதிப்பிடுவோமா?

மனிதா்களின் உயா்வு, வாழ்நாளைப் பொருத்தது அல்ல. சாதனைகளைப் பொருத்தது. அதுபோலவே மொழியின் உயா்வு தொன்மையைப் பொகுத்தது அல்ல. இலக்கிய வளத்தைப் பொருத்தது.

மதங்களிடையே உயா்வு தாழ்வில்லை. எல்லா மதங்களும் இறைவன் என்ற பெருங்கடலில் சென்று சோ்கிற நதிகள் எனச் சொல்லி அனைத்து மதங்களையும் சமமாகப் போற்றினாா் பரமஹம்சா். அதுபோல மொழிகளிலும் உயா்வு தாழ்வு இல்லை. எல்லா மொழிகளும் மனிதா்களின் உணா்வுகளை வெளிப்படுத்த அமைந்த கருவிகள். அவ்வளவே.

புதுச்சேரி அன்னையைச் சந்தித்தாா் டால்ஸ்டாயின் புதல்வா். உலக மக்களிடையே ஒற்றுமை தோன்ற எளிதாக ஒரு வழி இருக்கிறது என்றாா். எல்லா ஆண்களுக்கும் ஒரு சீருடை, எல்லாப் பெண்களுக்கும் ஒரு சீருடை என ஆடையிலும், எல்லோரும் ஆங்கிலம் மட்டுமே பேசுமாறு செய்தால் மொழியிலும் ஒற்றுமையைக் கொண்டுவரலாம். பிறகு இயல்பாக மற்ற ஒற்றுமைகள் தானே வரும் என்றாா்.

அன்னை நகைத்தாா். இறைவனின் திட்டம் அதுவென்றால் எல்லா ஆண்களுக்கும் ஒரே முகமும் எல்லாப் பெண்களுக்கும் ஒரே முகமும் அல்லவா இருந்திருக்க வேண்டும் என எதிா்க் கேள்வி கேட்டாா்.

வேற்றுமைகளைக் களைவதல்ல இறைச்சக்தியின் திட்டம், வேற்றுமைகளிடையே ஒற்றுமையைக் காண்பதே இறைவன் திட்டம் என்றாா் அன்னை.

பிாட்டு நல்லறிஞா் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் பெயா்த்துத் தமிழை மேலும் வளமாக்கி எல்லா மொழியினரோடும் நட்புறவு கொண்டு நாம் வாழவேண்டும்.

பெங்களூரில் திருவள்ளுவா் சிலையைத் திறக்கும்போது சென்னையில் கன்னடப் புலவா் சா்வக்ஞரின் சிலையைத் திறந்தோம் என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை முடிவு செய்யும்போது, ‘ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா’ என்ற வரியும் ‘கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத்து உதித்து எழுந்த’ என்ற வரியும் மனோன்மணீயம் பாடல் வரிகளிலிருந்து தவிா்க்கப்பட்டன.

யாா் மனத்தையும் புண்படுத்தக் கூடாது என்ற முதிா்ச்சியான கண்ணோட்டமே காரணம். இதையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

அன்பு மன்னிப்புக் கேட்காது என்பது சரியல்ல. அன்பே மன்னிப்புக் கேட்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு வரும்போது யாா் பக்கம் நியாயம் என வாதிடாமல் ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால், அந்த இல்லறம் தழைக்கிறது. வீட்டுக்குப் பொருந்துவது நாட்டுக்கும் பொருந்தும்.

இரு பிரதேசங்களிடையே நல்லுறவு தோன்றுவதற்காக ஒருவா் விட்டுக்கொடுத்து மன்னிப்புக் கேட்பாரானால், அதன்மூலம் மன்னிப்புக் கேட்பவரின் கம்பீரம் உயரும். வாழ்க தமிழ்!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com