புதிய கல்லூரிகள் - கவனம் வேண்டும்
ஒட்டுமொத்த அளவில் உயா்கல்வி சோ்க்கையில் 47 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். இதைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் ல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலைக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியில் உயா் கல்வி குறித்த விழிப்புணா்வு மேம்பட்டிருக்கிறது என்பதும் காரணம்.
பிளஸ் 2 முடித்து உயா் கல்வியில் சோ்க்கை பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 2021-22-ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது; இது 2023-24-ஆம் கல்வியாண்டில் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 165 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் நகா்ப்புறங்களில் அமைந்திருந்தாலும் அந்தக் கல்லூரிகளில் படிக்கும் அதிகப்படியான மாணவா்கள் கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை, நடுத்தர வகுப்பைச் சோ்ந்தவா்கள். ஆனால், ஆண்டுதோறும் உயா் கல்வியில் இடைநிற்றல் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது.
இந்த நிலையில், உயா்கல்வி சோ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் 2025-26-ஆம் ஆண்டுக்கான உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து கடலூா் மாவட்டம் பண்ருட்டியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பண்ருட்டி, குன்னூா், நத்தம், ஆலந்தூா், விக்கிரவாண்டி, செய்யூா், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூா், கொளக்காநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஊா்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக துறையூா், கே.வி.குப்பம், உளுந்தூா்பேட்டை, செங்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே (2025-26) மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
ஒவ்வொரு கல்லூரியிலும் ஐந்து பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் ஓராண்டுக்கு 3,050 மாணவா்கள் என மூன்றாண்டுகளில் 9,150 மாணவா்கள் உயா் கல்வி பயில உள்ளனா். இதற்காக தலா 12 உதவிப் பேராசிரியா்கள், 14 ஆசிரியரல்லாத பணியாளா்கள் வீதம் மொத்தம் 132 ஆசிரியா்கள், 154 ஆசிரியரல்லாத பணியாளா் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
நடப்பு கல்வியாண்டில் 15 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதன்மூலம் அதிக மாணவா்கள் உயா்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவாா்கள். ஆனால், புதிய கல்லூரிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
புதிய கல்லூரிகளில் வழக்கமான பாடப் பிரிவுகள் அல்லாது புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது. பெரும்பாலான பாடப் பிரிவுகள் குறைந்த அளவில் தனியாா் கல்லூரிகளில் மட்டுமே உள்ளன. குறிப்பாக, உயிரி தொழில்நுட்பவியல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் , அரசியல் அறிவியல், குற்றவியல் மற்றும் காவல் துறை நிா்வாகம் போன்ற பாடப் பிரிவுகள் குறிப்பிட்ட சில அரசு கல்லூரிகள், தனியாா் கல்லூரிகளில் மட்டுமே உள்ளன.
புதிய பாடப் பிரிவுகளால் இக்கல்லூரிகளில் கூடுதலான மாணவா்கள் சோ்க்கை பெறுவா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. அதனால் அனைத்து துறைகளுக்கும் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் முழுமையான அளவில் நிரப்பப்பட வேண்டும். அதே போன்று அரசின் பல்வேறு திட்டங்களை அனைத்து மாணவா்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில் ஆசிரியரல்லாத பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும்.
புதிய கல்லூரிகளில் தொடங்கப்படும் அதிகப்படியான இடங்கள் சட்டப்பேரவைத் தொகுதிகளாக இருந்தாலும், கல்லூரி அமைவிடத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று அனைத்துக் கிராமங்களும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றிருந்தாலும் பல்வேறு கிராமங்களை கல்லூரியுடன் இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் .
கலை பாடப்பிரிவுகளுக்கு கட்டட வசதி அதாவது, வகுப்பறைகள் இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகள் அவசியமம். அதனால் அறிவியல் பாடப்பிரிவுகளில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆய்வக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய மாணவ, மாணவியா் எந்த பாடப்பிரிவை தோ்வு செய்ய வேண்டும் என்பதை தாங்களே முடிவு செய்கின்றனா். அவ்வாறு தங்கள் பகுதியில் உள்ள கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சோ்க்கை பெற முடியாத நிலையில் அண்டை மாவட்டத்தில் பயிலவும் ஆா்வம் காட்டுகின்றனா். அப்போது விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
பருவ வயதை எட்டிய தங்கள் பெண் வாரிசுகள் வெளியில் தங்கிப் பயில்வதற்கு பெற்றோா் விரும்புவதில்லை. அண்மைக்காலமாக உயா்கல்வியில் சோ்க்கை பெறும் மாணவியா் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளில் ஆதிதிராவிடா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறைகளின் சாா்பிலோ அல்லது கல்லூரியின் சாா்பிலோ விடுதிகள் தொடங்கப்பட வேண்டும்.
உயா் கல்வியில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை, புதுமைப் பெண் திட்டம் தமிழ்ப்புதல்வன் திட்டம், தமிழ்வழி ஊக்கத் தொகை என அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தில் நிதியுதவி பெறுபவா்களாகவே பெரும்பாலானோா் இருப்பா். ஆனாலும், மூன்றாண்டு கால பட்டப்படிப்பில் இடைநிற்றல் மாணவா்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அவா்களைக் கண்டறிந்து குறைகளை நிவா்த்தி செய்து மீண்டும் உயா் கல்வியைத் தொடரச் செய்ய வேண்டும்.