
சந்தனமரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் குறைந்திருந்த யானைகள் வேட்டை, இப்போது மீண்டும் தலைதூக்கி வருகிறது. இதனால், இப்பகுதியில் புதிதாக வீரப்பன்கள் உருவாகி உள்ளனரா என்ற கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்ட வனப் பகுதி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வனப் பகுதிகளுடன் தொடர்புடையது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 1.66 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதியை உள்ளடக்கியது. இந்த வனப் பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. அதேநேரம், மற்ற மாவட்ட, மாநில வனப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான யானைகள் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப் பகுதிகளுக்கு அதிக அளவில் வந்துசெல்வது வழக்கம்.
வீரப்பன் இருந்தபோது சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதுடன், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களையும் வெட்டி கடத்திவந்தார். தொடக்கத்திலேயே வனத் துறையினர் அவரை பிடிக்காமல் விட்டதால், வீரப்பன் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக மாறினார்.
2004 இல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதும், யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்துவதும் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் யானை வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட ஏமானுôர் வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டு, அதன் தந்தங்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். யானையைக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் வெடிபொருள்களைப் பதுக்கிவைத்த இடத்தைக் காட்டுவதாக வனத் துறையினரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வனத் துறையினர் அவர்களை கைவிலங்குடன் வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்றபோது, அவர்களில் ஒருவர் வனத் துறையினரை தாக்கிவிட்டு வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றார். இந்த நிலையில், அவரது உடல், அழுகிய நிலையில் வனப் பகுதியில் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது உறவினர்கள் புகார் அளித்த நிலையில், வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2023 மார்ச் மாதத்தில் மாரண்டஹள்ளி வனப் பகுதியில் இருந்து உணவுதேடிச் சென்ற யானை கூட்டம், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியதில், 2 பெண் யானைகள் உள்பட மொத்தம் 3 யானைகள் இறந்தன. அடுத்து உணவு தேடிவந்த ஆண் யானை ஒன்றும், கம்பைநல்லூர் அருகே ஏரிக்கரைக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது.
இவ்வாறு, அந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 7 காட்டு யானைகள் இறந்தன. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் வனத்திலிருந்து உணவுதேடி வந்தபோது மற்றும் உடல்நலக் குறைவால் 10-க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளன.
மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலக்கோடு வனச்சரகத்தில் 6 அதிநுட்ப செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் சோலார், இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. பென்னாகரம் வனச்சரகத்தின் முக்கிய பகுதிகளில் ஏ.ஐ. மற்றும் தெர்மல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வன அலுவலர்கள் கூறுகின்றனர்.
பென்னாகரம் வனச்சரகம் ஏமானூர் வனப் பகுதியில், கடந்த வாரம் யானை வேட்டையாடப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் எரிக்கப்பட்ட நிலையில் தனியாகவும் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய வனத் துறை அதிகாரிகள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட ஏமானூர் அருகே சிங்காபுரம் வனப் பகுதியில் கடந்த மார்ச் 1இல், யானை மர்மமான முறையில் இறந்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. வனத் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, யானையின் முகம் சிதைக்கப்பட்டு, அடையாளம் தெரியாதவாறு தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது.
இதனால், ஆண் யானையை தந்தத்துக்காக கொன்றிருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தை தடுக்கத் தவறிய நெருப்பூர் பிரிவு வனவர், ஏமானூர் பீட் வனக் காப்பாளர் இருவரையும், பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் வனத் துறையினர் போதிய கண்காணிப்பு பணிகளில் ஈடுபடாமல் உள்ளதால், வனப் பகுதிகளில் புதிய வீரப்பன்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளது. இந்த விவகாரத்தில் காவல் துறையினர், வனத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசும், வனத் துறையும் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட்டு யானை உயிரிழப்புகள் மற்றும் அதன்மூலம் விலை உயர்ந்த தந்தங்கள் கொள்ளைபோவது உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.