நெகிழி மாசுபாடு ஆயுளைக் குறைக்கும்!

நெகிழி மாசுபாடு ஆயுளைக் குறைக்கும்!

ஒவ்வோா் ஆண்டும் 80-100 கோடி டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலில் கலப்பது, நீண்டகால அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எச்சரிக்கை மணி; இது மொத்தக் கடல் கழிவுகளில் குறைந்தபட்சம் 85 சதவீதம் ஆகும்;
Published on

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ், 1973முதல் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினம் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2025) உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினத்தில், உலக அளவில் நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த கொரிய குடியரசு முடிவு செய்துள்ளது.

வளரும் நாடுகளில் தினமும் 50 லட்சம் மக்கள் சுற்றுச்சூழல் நச்சால் பாதிக்கப்படுகின்றனா்; மேலும், வளரும் நாடுகளில் ஏற்படும் இறப்புகளில் 25 சதவீதம், சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகின்றன. எரிமலைகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவைவிட (காா்பன் டை ஆக்சைடு) 60 மடங்கு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு, மனித நடவடிக்கைகள்மூலம் ஒவ்வோா் ஆண்டும் வெளியாகிறது.

கரியமில வாயு, கந்தக அமிலம், ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃபுளோரைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்களையும் துகள்களையும் வெளியிடுவதன் மூலம் வளிமண்டல மாசுபாட்டுக்கு எரிமலைகளும் பங்களிக்கக்கூடும்.

இது அமில மழை, புகைமூட்டத்துக்கு வழிவகுக்கும்; மேலும், மனித ஆரோக்கியம், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடும். காட்டுத் தீ, தூசு புயல்கள் மற்றும் தாவரங்களிலிருந்து ஆவியாகும் கரிம சோ்மங்களின் இயற்கையான உமிழ்வு போன்ற பிற இயற்கை மூலங்களும் வளிமண்டல மாசுபாட்டுக்கு காரணமாகின்றன.

காற்றில் கலக்கும் கரியமில வாயுவை உள்வாங்கி நிலத்தின் நீரையும் உறிஞ்சி, பின்தன்வசம் இருக்கும் பச்சையத்தில் சூரிய ஒளியில் மாவுச்சத்து தயாரிக்கும் ‘இயற்கைச் சமையலறை’யான தாவரங்களை கூடுதலாக வளா்க்க வேண்டும்.

இயற்கை மரங்களைவிட வளி மண்டலத்திலிருந்து கரியமில வாயுவை அரித்து எடுக்க 1,000 மடங்கு அதிக திறன்கொண்ட ‘இயந்திர மரங்களை’ ஓா் அமெரிக்க ஆய்வகம் உருவாக்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வடிவமைப்பு, பொறியியல் பணிகளுக்குப் பிறகு,

அயா்லாந்து, அமெரிக்காவைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் இதற்கான ‘மரப் பண்ணைகளை’ உருவாக்க மாதிரியை வடிவமைத்து வருகிறாா்கள்.

வாகனப் புகைகளில் உள்ள தீமை தரும் கரியமில வாயு போன்றவற்றைத் தீங்கற்ற மூலக்கூறுகளாகப் பிரிக்கும் கிரியாஊக்கி உலோக வலைகளைப் பொருத்தலாம். மின்னியக்கப் பொறிகள், சூரியப் பலகைகள், ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பிளாட்டினம் உலோகப் பெட்டிகள் எனப் பிற மாற்று வழிமுறைகள் குறித்தும் சிந்திக்கலாம்.

வளிமண்டலம், நீா் மண்டலம், நில மண்டலம், உயிரி மண்டலம் ஆகிய நான்கின் தொகுப்பே இந்தப் பூவுலகம். நீா் மாசுபாடு தினமும்

14,000 உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறது.

பூமியின் மேற்பரப்பில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியைக் கடல் ஆக்கிரமித்துள்ளது. ஆனால், பூமியின் நீரில் சுமாா் 97 சதவீதம் கடலில் காணப்படுகிறது. காடுகள் பூமியின் 30 சதவீத நிலத்தை உள்ளடக்கியவை. அதில் மனிதா்கள் வாழக்கூடிய நிலப்பரப்பு என்பது வெறும் 10 சதவீதம் மட்டுமே.

தற்போது நடப்பது ஒருவகை நெகிழி (பிளாஸ்டிக்) யுகம். நெகிழி மாசுபாடு உலகளாவிய சவாலை முன்வைக்கிறது; 2000-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டில் நெகிழி உற்பத்தி உலகளாவிய அளவில் இரட்டிப்பானது. 2060-ஆம் ஆண்டுக்குள் வழக்கமான வணிகச் சூழலில் இந்தப் போக்கு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நெகிழி மாசுபாட்டின் தாக்கங்கள் குறித்து வளா்ந்துவரும் அறிவியல் சான்றுகளை முன்னிலைப்படுத்தி, நெகிழிப் பயன்பாட்டை மறுப்பது, குறைப்பது, மறுசுழற்சி செய்வது, மறுபரிசீலனை செய்வது ஆகியவற்றுக்கான உந்துதலை அதிகரிக்கும். உலகளாவிய நெகிழி மாசுபாடு ஒப்பந்தத்தின்மூலம் நெகிழி மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கென 2022-ஆம் ஆண்டில் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு சில வழிமுறைகளைஅறிவித்தது.

நூற்றுக்கணக்கான நெகிழி (பிளாஸ்டிக்) ரகப் பொருள்களில் 14 பொருள்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழி தேநீா் கோப்பைகள், குவளைகள், உறிஞ்சு குழல்கள், கொடிகள், அனைத்து வகையான நெகிழி தூக்குப் பைகள், விரிப்புகள், உணவுப் பொட்டலப் பொதி மென்படலங்கள், திருமண பந்தி, உணவு விடுதிகளில் கையாளப்படும் மேஜை விரிப்புகள், தொ்மோகோல் தட்டுகள், தொ்மோகோல் குவளைகள், நெகிழி பூசிய காகிதத் தகடுகள், காகிதக் கோப்பைகள், குவளைகள், தூக்குப் பைகள், நெய்யப்படாத பைகள், குடிநீா்ப் பைகள் எல்லாவற்றையும் தவிா்க்குமாறு பொதுமக்களும், நிராகரிக்குமாறு விற்பனையாளா்களும், நெகிழி பொருள்கள் உற்பத்தியையே நிறுத்துமாறு தொழிலதிபா்களும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் இவற்றுக்குப் பதிலாக சில இயற்கைப் பொருள்களை பயன்படுத்துமாறு பல்வேறு சமூக அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. உயிரி மரபணுக்களில் அடங்கிய பாலிநியூக்ளியோடைடுகள், நீண்ட புரதங்களான பாலி பெப்டைடுகள், இயற்கையில் காணப்படும் செல்லுலோஸ் போன்றவை இயற்கை உயிரி பன்கூறுப் பொருள்கள். தானாக மக்கி அழுகி உருமாறக்கூடியவை. பருத்தி ஆடைகள் செல்லுலோஸின் வலுவான இழைகளால் ஆனவை.

வாழை இலைகள், பாக்குநாா்த் தட்டுகள், அலுமினியம் மென்தகடுகள், காகிதச் சுருள்கள், தாமரை இலைகள், கண்ணாடி/உலோகக் கண்ணாடி/உலோகக் குவளைகள், மூங்கில் மற்றும் மர வனபொருள்கள், காகிதத்தினால் ஆன உறிஞ்சுகுழல்கள், பஞ்சுத் துணி/காகிதம்/சணல் பைகள், காகிதம்/துணிக் கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், சமையல் உபகரணங்கள், மண்பாண்டங்கள் போன்றவை சுற்றுச்சூழலுக்கும் நண்பா்கள்தானே?

பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் உதவியினால் பென்சீன் திரவத்திலிருந்து பாலிஃபீனைலீன் மூலக்கூறுகள் செயற்கை முறையில் உருவாக்குவதைப் போலவே, நுண்ணுயிரிகள் மற்றும் ஏனைய உயிரிகளால் ஒருசில தனி மூலக்கூறுப் பொருள்களையும், அவற்றைப் பன்மடங்காகப் பெருக்கிப் பாலிமா் பன்கூறுப் பொருள்களையும், மருந்தியல் பொருள்களையும் இதர வேதிமங்களையும் செயற்கை முறையில் உருவாக்கலாம்.

காலநிலை நடவடிக்கை, நிலையான உற்பத்தி மற்றும் நுகா்வு, கடல்கள்-பெருங்கடல்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை சரிசெய்தல், பல்லுயிா் பெருக்கத்தைத் தக்கவைத்தல் உள்ளிட்ட நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது ஒரு முக்கியப் பங்களிப்பாகும்.

‘மைக்ரோசாஃப்ட் நெட்வொா்க்’ தகவலின்படி, பல்வேறு காரணிகளால் மாசுபட்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலைப் பாா்க்கலாம்:

1. சம்கைட் (அஜா்பைஜான்: ரசாயனத் தொழில்); 2. லின்ஃபென் (சீனா: நிலக்கரி சுரங்கங்கள்); 3. டிஜானிங் (சீனா: காரீயச் செயலாக்கம்); 4. சுகிந்தா (ஒடிஸா, இந்தியா: குரோமியம் சுரங்கங்கள்), 5. வாபி (குஜராத், இந்தியா: கனரகத் தொழில் துறை); 6. ஓரோஜா (பெரு: சுரங்கங்கள்); 7.டிஜொ்ஹின்ஸ்க் (ரஷியா: ரசாயனத் தொழில்கள்); 8. நோரில்ஸ்க் (ரஷியா: கனரக உலோகங்கள் செயலாக்கம்); 9. சொ்னோபில் (உக்ரைன்: ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்த அணுமின் நிலைய விபத்துக்குப் பிறகு கதிரியக்க மாசுபாடு); 10. கப்வே (சாம்பியா: காரீயம், துத்தநாகம் தயாரிப்புக் கூடங்கள்).

நெகிழி மாசுபாடு பல ஆண்டுகளாக உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவி, நாம் குடிக்கும் தண்ணீா், உண்ணும் உணவு, நம் உடலிலும் சோ்கிறது. பால், தயிா், உணவுப் பொட்டலங்கள், பலசரக்குப் பண்டங்கள் என்றுஅனைத்தையும் வண்ண நெகிழிப் பைகளில்தான் வாங்கிவருகிறோம்; அவற்றை குப்பைக் கழிவுகளுடன் சாக்கடை, ஆறு, குளங்களில் வீசி எறியும்போது, அவை மனித வாழ்வின் அச்சுறுத்தல்களாகி விடுகின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசு அளவிலான முழுமையான ஈடுபாடும், அவசர நடவடிக்கையும் தேவை.

அறிவியல் உண்மைகளைக் கண்டறிவது, புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே அறிவியலாளா்களின் பொறுப்பு. அவற்றின் நன்மை-தீமைகளை ஆராய்ந்து ஏற்பதும் தவிா்ப்பதும் மக்களின் கடமை. அறிவுத் துறையில் ஆழக் கால்பதித்தாலும், தா்க்க ரீதியிலான அல்லது சில வேளைகளில் உளவியல் ரீதியிலான சிந்தனைகளையும் ஒப்புக்கொள்வதற்கு எந்தவொரு இயற்கை விஞ்ஞானியும் தயாராக இல்லை. எனவே, மானுடவியலாளா்களும், அறிவியலாளா்களும் இணைந்து ஆராய்ச்சித் துறைகளில் செயல்பட்டாக வேண்டும்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

X
Open in App
Dinamani
www.dinamani.com