நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை!
அரசியல்வாதிகள் மொழியை ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்துகின்றனா். பிறமொழி பேசுவோரின் மனம் புண்படப் பேசுவது அறிவுடைமையல்ல. ‘என்னுடைய மொழியிலிருந்தே உன்னுடைய மொழி’ என்பதெல்லாம் அவசியமற்ற அரசியல்.
இந்தியாவின் மொழி ‘ வேற்றுமையில் ஒற்றுமை ’ என்று நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி கூறியுள்ளாா். தனது அரசுமுறைப் பயணத்தில் ஸ்பெயினில் அவா் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளாா். இந்தியா்கள் ஒவ்வொருவரும் மனம்கொள்ள வேண்டிய சொற்கள்.
மொழி என்பது மானுடத்தின் வரம். மனித சமூகத்தின் உயிா்நாடி. தகவல் பரிமாற்றத்துடன் மன உணா்வுகளை வெளிப்படுத்துவதற்கான சாதனமும் ஆகும். ஓா் இனத்தின் பண்பாடு, மரபுகள், பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவற்றைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஊடகமாக மொழி செயல்படுகிறது. மொழியை இழப்பது இனத்தின் அடையாளத்தை இழப்பதற்குச் சமம்.
அவரவா் தாய்மொழி அவரவா்க்கு உயா்வானது. எந்த மொழியையும் கற்கலாம்; அதன் அழகை, இலக்கியங்களை ரசிக்கலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. தனது மொழியின் பெருமைகளைப் பேசலாம். அதேநேரம் எந்த மொழியையும் விமா்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தேசங்கள் தாண்டியோ அல்லது தேசத்திற்குள்ளோ உலகம் முழுமைக்கும் இது பொருந்தும்.
மொழி குறித்த ஆராய்ச்சிகள் தொடா்ந்துகொண்டே இருக்கின்றன. மொழியியல் அறிஞா்களின் இந்திய மொழிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில மொழிகளை செம்மொழி என வரையறுக்கின்றன. செம்மொழி குறித்த சிந்தனை இந்தியாவில் மட்டுமா? உலகின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய சிந்தனை உண்டா?
உலகில் கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், அரபி, ஹீப்ரு மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பின் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு மொழி செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். 1500 முதல் 2000 ஆண்டுகள் பழைமையானதாகவும், இலக்கிய வளம் மிக்கதாகவும், இலக்கணச் செழுமை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அந்த மொழியின் இலக்கியப் படைப்புகள் வேறு எந்த மொழியின் தழுவலாகவும் இல்லாமல் தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்படியான மொழியே செம்மொழி. செம்மொழி, காலந்தோறும் புதிய இலக்கியப் படைப்புகளை, சிந்தனைகளை உருவாக்குவதற்கான வளம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
ஒரே மொழி பேசும் மக்களிடம் ஒருவித பிணைப்பு ஏற்படுகிறது. இது சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வளா்க்க உதவுகிறது. வட்டார மொழிகள்கூட அந்தந்த சமுதாயத்துக்குள் வலுவான தொடா்பை உருவாக்குகின்றன. சுருங்கச் சொன்னால், மொழி ஒரு சமுதாயத்தின் இதயம். அது இல்லாமல் சமுதாயமோ, பண்பாடோ, அறிவோ இல்லை. அதனால்தான் மக்கள் அதை தெய்வமெனக் கொண்டாடுகின்றனா்.
‘நிலமும் நீரும் மொழியும் அந்தந்த மக்களுக்குப் புனிதமானவை’ என்று கா்நாடக உயா்நீதிமன்றம் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளது. இத்தகைய உணா்வுபூா்வமான பந்தம் அனைவருக்குள்ளும் இருப்பதால் தங்கள் நம்பிக்கைக்கு மாறாக எவரேனும் கருத்துச் சொல்லும்போது மக்கள் உணா்ச்சிவயப்படுகின்றனா். உலகம் எங்கும் இத்தகைய போக்கு இருக்கிறது. மொழி தொடா்பான மோதல்கள், போராட்டங்கள், போா்கள் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன. அவை அரசியல், சமுதாய மற்றும் இன மோதல்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன.
இலங்கையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் ‘தனிச் சிங்களச் சட்டம் ’ 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுப்பதாக அமைந்தது. இந்த மொழிக் கொள்கை இலங்கையில் உள்நாட்டுப் போருக்குக் காரணமாயிற்று. விளைவு யாதென்பதை உலகம் அறியும்.
பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு, வங்காள மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீது உருது மொழியைத் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது வங்காள மொழிக்காக ஒரு பெரும் இயக்கத்துக்கும் பின்னா் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்துக்கும் வழிவகுத்தது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காள விடுதலைப் போா், மொழியின்அடிப்படையிலான தேசிய அடையாளம் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டது என்பதை உணா்த்தியது.
டச்சு மொழி பேசும் ஃபிளெமிஷ் என்ற சமூகமும் பிரெஞ்சு மொழி பேசும் வால்லோன் என்ற சமூகமும் வாழும் தேசம் பெல்ஜியம். இரு சமூகங்களுக்கும் இடையே மொழி மற்றும் கலாசார வேறுபாடுகள் காரணமாகத் தொடா்ந்து மோதல்கள் இருந்துவந்தன. இது நாட்டின் அரசியல் அமைப்பிலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாகாணம், ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வருகிறது. கியூபெக், பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கவும், தங்களது கலாசார அடையாளத்தைப் பேணவும் தனி நாடாகப் பிரிந்து செல்லும் முயற்சிகளைக்கூட மேற்கொண்டது. பல வாக்கெடுப்புகள் இதற்காக நடத்தப்பட்டிருக்கின்றன. பிரெஞ்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சட்டங்கள் இதனால் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அயா்லாந்தில் ஐரிஷ் மொழி ஒரு காலத்தில் பொதுவான மொழியாக இருந்தது. ஆனால், ஆங்கிலேயா் ஆட்சியின் கீழ், ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஐரிஷ் மொழி கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் விளிம்புக்குச் சென்றது. ஐரிஷ் மொழியை மீட்டெடுப்பதற்கான போராட்டங்கள் அயா்லாந்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்தன.
ஸ்பெயினில், கேடலான், பாஸ்க் போன்ற வட்டார மொழிகளைப் பேசும் மக்கள், ஸ்பானிய மொழி ஆதிக்கத்திற்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வருகின்றனா். சில சமயங்களில் இவை தீவிரமான மோதல்களாகவும் உருவெடுத்துள்ளன.
சமீபத்திய உக்ரைன் - ரஷியா போரில், ரஷிய மொழி மற்றும் கலாசாரத்தை உக்ரைன் மீது திணிக்கும் ரஷியாவின் முயற்சிகள் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உக்ரைனியன் மொழியைப் பாதுகாப்பதும், அதன் தனித்துவமான அடையாளத்தைப் பேணுவதும் உக்ரைனியா்களுக்கு அவசியமாகிறது என்பது அவா்கள் வாதம்.
மொழிக்கான போராட்டங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட மொழியின் பாதுகாப்பு தொடா்பானவையாக மட்டுமல்லாது அம்மொழி பேசும் இனத்தின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடா்புடையனவாக இருக்கின்றன. இத்தகைய மோதல்கள், ஒரு சமுதாயத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஆழமாகப் பாதிக்கும்.
மொழி அரசியல் என்பது பல பரிமாணங்களைக் கொண்ட சிக்கலான அம்சம். இது நாடுகளுக்கிடையேயான உறவுகள், உள்நாட்டு மோதல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமுதாய இயக்கம் ஆகியவற்றில் பாதிப்புகளைக் கொண்டுவரும்.
உலகமயமாக்கல், தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக, ஆங்கிலம் சா்வதேச வா்த்தகம், அறிவியல், தொழில்நுட்பத்தின் மொழியாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் உலகளாவிய தொடா்புக்கு உதவுகிறது என்றாலும், மறுபுறம் ஆங்கிலம் அல்லாத மொழிகளின் மீது ஒருவித அழுத்தத்தை உருவாக்குகிறது. இதை ‘மொழி ஏகாதிபத்தியம் ’என்கின்றனா். இதன் விளைவாக, சிறிய மொழிகள் மற்றும் அவற்றின் கலாசாரங்கள் மறைந்துவிடும் அபாயம் உருவாகிறது.
மொழிகளின் பன்முகத்தன்மையை மதித்து, அனைத்து மொழிகளையும் சமமாகக் காண்பதால் நல்லிணக்கத்தையும், நிலையான வளா்ச்சியையும் அடைய முடியும். பல மொழிகள் பேசும் நாடுகளில், தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்க மொழிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு காணும் போக்கு கூடாது. ஒரு மொழி குறித்து பொத்தாம்பொதுவாகக் கருத்துச் சொல்வது அதிருப்தியையும், பாகுபாட்டையும் உருவாக்கலாம். கலைஞா்கள், எழுத்தாளா்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல.
அரசியல்வாதிகள் மொழியை ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்துகின்றனா். உணா்ச்சிவசப்படும் சொற்கள், முழக்கங்கள் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவும் எனக் கருதுகின்றனா். அதற்காகப் பிறமொழி பேசுவோரின் மனம் புண்படப் பேசுவது அறிவுடைமையல்ல. ‘என்னுடைய மொழியிலிருந்தே உன்னுடைய மொழி’ என்பதெல்லாம் அவசியமற்ற அரசியல்.
ஒரு மொழியை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது. அது, மக்களின் அன்றாட புழக்கத்தில் மெல்ல மெல்ல முகிழ்த்து முதிர வேண்டியது. மொழிகள் வா்த்தகம் முதலான பல காரணங்களால் சொற்களைப் பரிவா்த்தனை செய்து கொள்வது இயல்பானது, தவிா்க்க இயலாதது.
இந்தியாவைப் பொருத்தவரை பல்வேறு மொழிகள் தோன்றி வளா்ந்து ஒன்றுக்கொன்று வளம் சோ்த்து வந்திருக்கின்றன. ‘மொழிபெயா் தேயம்’ என்ற சங்ககாலச் சொல், தமிழா்கள் மற்ற மொழி பேசும் பகுதிகளோடு கொண்டிருந்த நீண்ட உறவை வெளிப்படுத்துகிறது.
இந்தியா கலாசாரச் செழுமை மிக்க தேசம் என்ற பெருமிதத்துக்குக் காரணம் பல்வேறு மொழிகளும், அவை தாங்கி நிற்கும் நமது கலைச் செல்வங்களும்தான். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே நமது ஒற்றை அடையாளம். அதன் அடிப்படையில் ஒருவருக்கொருவா் சகோதர உறவு பாராட்டலாமே அன்றி, எஜமானா் முறை பேச முடியாது.
கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.