
அதிகரித்துவரும் காலிப் பணியிடங்களை ஈடுசெய்ய, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை அரசுப் போக்குவரத்துக் கழகம் பணியமர்த்தி வருகிறது.
தனியாரிடமிருந்த பேருந்து சேவை, பொதுமக்களின் நலன் கருதி, கடந்த 1972-இல் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது சென்னை, விழுப்புரம், கும்பகோணம், திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி என எட்டு போக்குவரத்துக் கழக கோட்டங்கள் மற்றும் விரைவுப் பேருந்துகளுக்கான ஒரு தனிக் கோட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 22,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், மொத்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களில் 30 சதவீதம் காலியாக உள்ளதாகவும், இதனால், முதுநிலை ஓட்டுநர், நடத்துநர்கள் அதிகபட்சம் 16 மணிநேரம் வரை பணியாற்றும் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாவும் அவர்கள் வருந்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் ஓய்வின்றி பணியாற்றுவதால் பேருந்துகள் ஆங்காங்கே விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. "ஒன் டூ ஒன்' என்ற இடைநில்லா விரைவுப் பேருந்துகளில் பெரும்பாலும் தனியாக நடத்துநர் இல்லை. இவர்கள் பேருந்து புறப்படும் இடத்திலேயே பயணக் கட்டணத்தை வசூலித்துக்கொண்டு இறங்கிவிடுகின்றனர். பிறகு, ஓட்டுநர் மட்டுமே பயணிகளுக்கு பொறுப்பேற்று அவர்களைக் கொண்டு சேர்க்கிறார். இதுபோன்ற நேரங்களில் பேருந்தில் திடீரென பழுது ஏற்பட்டாலோ, விபத்து நேரிட்டாலோ, போக்குவரத்து நெரிசலில் சிக்கினாலோ ஓட்டுநரும், பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த 2023-இல் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் முயற்சியை நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு நிரந்தரப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதற்கு மாற்றாக பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஓட்டுநர், நடத்துநர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைத்தனர். நாள் ஒன்றுக்கு ரூ. 800 முதல் ரூ. 1,200 வரை ஊதியம் வழங்கியபோதும், அவர்கள் தொடர்ந்து பணிக்கு வரவில்லை. கடந்த ஓராண்டாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. ரூ. 20,000 முன்பணம் செலுத்திவிட்டு பணியில் சேர்ந்துகொள்ளலாம்; தினமும் ரூ. 1,400 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்கு இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் வருகின்றனர்.
தமிழக அரசின் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் நகரப் பேருந்துகள், விடுமுறைக் காலங்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் பெரும்பாலும் ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர்களே அதிகம் உள்ளனர். அவர்கள், பயணிகளின் பாதுகாப்பில் போதிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால், "2, 3 டூட்டி' தொடர்ந்து பார்க்குமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும், உணவு, உறக்கமின்றி நெருக்கடியான நிலையில் தாங்கள் பணியாற்றுவதாகவும் அவர்கள் வருந்துகின்றனர்.
அதுமட்டுமின்றி தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பணிக்குச் செல்லாமலே வருகையை பதிவுசெய்து ஊதியம் பெறுகின்றனர். ஒரு பணிமனையில், ஒரு தொழிற்சங்கத்துக்கு குறைந்தது 5 பேர் உள்ளனர். இவர்களை பணியில் முறையாக ஈடுபடுத்தினாலே காலியிடங்களை ஓரளவு குறைக்க முடியும் என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அதிகாரிகள் தரப்பில் "அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மாற்று நடவடிக்கையாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு நிரந்தர அடிப்படையிலும் பணியாளர் நியமனம் நடைபெறுகிறது'' என்றனர்.
ஓட்டுநர்களிடம் பணியின்போது பயணிகளிடம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாள்தோறும் தெளிவுபடுத்தி வருகிறோம். அண்மையில் போதையில் பேருந்தை இயக்கிய நாமக்கல் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ததுடன், மீண்டும் அவர் பணியில் இணையாதவாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
மொத்தத்தில் பெரும்பாலான அரசுத் துறைகளைப் போலவே பணியாளர் பற்றாக்குறை, தற்காலிக அல்லது ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் எனப் போக்குவரத்துக் கழக நிறுவனமும் இயங்கி வருகிறது. முந்தைய காலங்களைப் போல, பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர ஊழியர்களால் நிரப்பப்பட்டு, அவர்கள் சரியான வேலை நேரத்தில் பணியாற்றி, நஷ்டமில்லா, விபத்தில்லா பயணத்தை அரசு உறுதிசெய்யும் நாளை எதிர்நோக்கியிருக்கின்றனர் மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.