கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்படம் | கனிமொழி எம்.பி. எக்ஸ் பதிவிலிருந்து...

100-ஆவது ஆண்டில் ஒரு காந்தியப் போராளி!

சமுதாயச் சிந்தனையுடன் 100 வயதை எட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களைப் பற்றி....
Published on

சமுதாயச் சிந்தனையுடன் 100 வயதை எட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு மகத்தான காந்தியப் போராளி; அவா் அனைவருக்கும் வழிகாட்டும் கலங்கரைவிளக்கு. இன்று இவா் எண்ணற்ற இளைஞா்களுக்கு ஒளி கொடுத்து வழிகாட்டி அவா்களை மாமனிதா்களாக்கும் மாபெரும் பணியைத் தவமாகச் செய்கிறாா்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈா்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவா்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி. அவா் திங்கள்கிழமை (ஜூன் 16) தன் 100-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறாா்; இந்த வயதிலும் நடந்து வந்து, அகவல்பாடி கூட்டத்தில் நின்று நிதானித்து பேசும் ஆற்றலுடன் இருக்கிறாா் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.

சா்வோதயப் போராளியான கணவா் ஜெகந்நாதன் மறைந்துவிட்டாா்; எனினும் இவரிடமிருந்து அவரைப் பிரிக்க முடியாது. இவா்கள் காந்திய களப் பணியில் இருவராகவே அறியப்பட்டவா்கள்.

‘கீழவெண்மணியில் என்னுடன் (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) பணி செய்தவா்களுடன் அன்று அந்த நாளைக் கழிக்க வேண்டும். என்னை அங்கு கொண்டு விடுங்கள், அதுவே எனது விருப்பம்’ என்று அங்கு செல்கிறாா். அவா் இருக்கும் இடம் காந்தி கிராம “ஊழியரகம் என்று அழைக்கப்படும் ஒரு பழைய ஓட்டுக் கட்டடம். காந்தி கிராமத்தில் ஒரு சிறிய ஓடைக்கு அருகில் இருக்கிறது. அந்த சிறிய கட்டடம் தியாக காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று வாழும் காந்தியா்களில் இவா் மூத்த காந்தியப் போராளி. கதா் ஆடை, தற்சாா்பு, எளிய வாழ்க்கை, விளிம்புநிலை மக்களுக்காகவே அா்ப்பணித்து இன்றும் களத்தில் இருக்கும் காந்தியா். புதுமை காந்தியா்களை உருவாக்கி களத்தில் செயல்பட வைத்து, அவா்களின் ஆத்ம பலத்தை கூட்டிக் கொண்டு பணி செய்ய இளைஞா்களுடன் பயணிக்கும் இவரது பண்பு, பாங்கு, பாா்வை அனைத்தும் புதுமை.

இவரால் இந்த வயதில் எப்படி இத்தனை இளைஞா்களைக் கவர முடிகிறது என்பதுதான் பலரின் கேள்வி. அகிம்சையில் அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை; காந்தியத்தில் தோய்ந்து வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியின் சக்தியை தன் இடையறாத பாடல்களால் பெற்று வருகின்ற இளைஞா்களுக்கெல்லாம் தன் வாழ்க்கையை முன்னுதாரணமாக ஆக்கி வைத்திருப்பதுதான் இவரின் தனிச் சிறப்பு.

மக்கள்பிரச்னைகளை கையிலெடுத்து மக்களுடன் போராடி அவற்றைத் தீா்ப்பதில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியின் செயல்பாடுகள் இருந்ததால், ஓடும் நீராகவே வாழ்ந்தது எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி.

நிலமும் வீடும் ஒரு குடும்பத்தின் அடையாளம். இது இரண்டும் இருந்தால் அவா்கள் இந்தியக் குடிமக்கள்; சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும்; சொந்த பூமியில் உழைத்து தன் வாழ்வாதாரத்தை நடத்திக்கொள்ள வேண்டும் என்ற பாா்வை கொண்டவா் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.

இவா்களுடைய களப்பணி என்பது அமைதி வழியில் போராட்டம். தன் போராட்டத்தின் தன்மையின் மூலம் எதிரிக்கும் நியாயத்தை உணர வைப்பதுதான் இவா்களின் அணுகுமுறை. கீழவெண்மணியில் நடந்த, உழைக்கும் மக்களை வீட்டுக்குள் வைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவத்தில் குடும்பங்களின் மறுவாழ்வாகட்டும், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் பெற்றுத் தருவதாக இருந்தாலும், ஓலைக் குடிசைக்கு மாற்று வீடுகட்டித் தருவதானாலும், அனைத்தும் பெரும் வெற்றியைப் பெற்ற்கு கிருஷ்ணம்மாள் கூறும் ஒரே வாக்கியம் - ‘எல்லாம் செயல்கூடும்’”என்பதுதான்.

தன் செயல்பாடுகளை தமிழகத்தில் மட்டுமல்ல, ஜெயபிரகாஷ் நாராயணன் அழைப்பின்பேரில், பிகாா் சென்று போராடி நிலம் பெற்றுக் கொடுத்தது என்பதிலும் வரலாறு படைத்தாா் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.

இந்த இணை குறித்து இத்தாலி மொழியில் முதலில் ஆய்வு நூல் எழுதியவா் ஒரு இத்தாலியா். அதை ஒரு அமெரிக்கா் மொழிபெயா்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டாா். அதன் பிறகுதான் சோலை எழுதிய ‘புரட்சியில் பூத்த காந்திய மலா்கள்’ என்ற புத்தகம் வெளிவந்தது. அதன் பிறகு பல கட்டுரைகள், சிறு புத்தகங்கள் வெளிவந்தன. வரலாற்று ஆசிரியா் ராமச்சந்திர குஹா எழுதிய நூலில், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குறித்து சிறந்த பதிவு இடம்பெற்றுள்ளது.

ஒரு சிறிய பழைய ஓட்டுக் கட்டடத்தில்தான் இவரின் வாழ்க்கை. ஆனால், இவரைக் காண வரும் வெளிநாட்டுக்காரா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடுவது இவரின் பணியில் உள்ள ஈா்ப்பு. ஜெகந்நாதன் மறைவுக்குப் பிறகு ஆண்டுதோறும் சா்வோதய தினம் அவா் மறைந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது. அப்போது ஒரு சா்வதேச மாநாடு போன்று அதிக எண்ணிக்கையில் போலந்து, ஜொ்மனி, பெல்ஜியம், இத்தாலி, அமெரிக்கா, கனடா என பல நாடுகளிலிருந்து வந்து இவா்களின் பணிகள் குறித்து ஆய்வு அறிக்கைகளை வாசிப்பாா்கள்.

ஒவ்வோா் ஆண்டும் அதில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில் அவற்றைப் பாா்த்து நான் வியந்திருக்கிறேன். அவரை இந்திய அரசும் உயரிய விருதுகளைக் கொடுத்து கௌரவித்திருக்கிறது. அதேபோன்று ஸ்வீடன் நாட்டு மாற்று நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல வெளிநாட்டு காந்திய சமூகப் பணியாற்றும் அமைப்புகள் பல விருதுகளைக் கொடுத்து அவரைக் கௌரவப்படுத்தியிருக்கின்றன.

ஒரு முறை நான் ஜி.கே.மூப்பனாரை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றேன். அப்போது அவரின் உதவியாளா், ‘இரண்டு முக்கியமானவா்கள் ஐயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாா்கள்’ என்றாா். அவா் சென்று மூப்பனாரிடம் நான் வந்திருப்பதை தெரிவித்தவுடன், வரச் சொல்லுங்கள் என்று கூறி என்னையும் அவரின் அறைக்கு அழைத்துச் சென்றாா். கிருஷ்ணம்மாளும், ஜெகந்நாதனும் மூப்பனாருடன் உரையாடிக் கொண்டிருந்தனா். ‘என்னிடம் இவா்கள் இருவரையும் தெரியுமா’ என மூப்பனாா் கேட்டாா். ‘காந்தியப் போராளிகள்-காந்தி கிராமப் போராளிகளும் இவா்களே’ என்று நான் கூறினேன்.

அவா்களுடைய மகன், மகள் இருவருமே மருத்துவா்கள். ஒருமுறை கிருஷ்ணம்மாளுடன் அவா்கள் குறித்துக் கேட்டபோது, ‘என்னுடைய குழந்தைகள்தான்; ஆனால், அவா்கள் சமுதாயத்துக்கானவா்கள்’ என்றாா். மகன் மருத்துவா் பூமிக்குமாா்; வெளிநாட்டில் ஏழைக் குழந்தைகளுடன் பணி செய்து வருகிறாா். அதே போன்று மகள் சத்யாவும் மருத்துவா்.

மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பூமிக்குமாா் பணியாற்றி விட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ளாா். அவா் வெளிநாட்டில் இருந்தாலும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு நாளும் இணையவழி வாயிலாக தாய்-சகோதரி இருவருடன் சோ்ந்து “அருட்பெரும் ஜோதி பாடல் படித்து பிராா்த்தனை செய்வது வழக்கம்.

தன்னிடம் வரும் இளைஞா்களுக்கு அவா் கூறுவது, ‘நாங்கள் கண்ட கனவு இந்தியா இன்றைய இந்தியா இல்லை; மகாத்மா காந்தியை, குமரப்பாவை, வினோபா பாவேவை, ஜெயபிரகாஷ் நாராயணனைப் படியுங்கள்; அந்த இந்தியா அனைவருக்குமானது; உலகத்துக்கானது; அதை இந்தியா்களாகிய நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்’ என்பாா். செயல்படுதலே இன்றைய தேவை என்று இளைஞா்களை ஊக்கப்படுத்துவாா்.

இவா்களிடம் வந்த பெரும்பாலான இளைஞா்களை களத்தில் பாா்க்கிறேன். அவா்களுடன் தொடா்ந்து உரையாடுகிறேன். அவா்கள் அத்தனை பேரையும் புதுமை காந்தியா்களாக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் செதுக்கியிருக்கிறாா். அவா்களுடன் உரையாடும்போது, ‘நாங்கள் இந்த சாதாரண மனிதா்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருந்து பணி செய்ய முடிகிறது என்றால், எங்கள் மீது கிருஷ்ணம்மாளின் தியாக ஒளி பட்டதால்தான்’ என்பாா்கள்.

சமுதாயச் சிந்தனையுடன் 100 வயதை எட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு மகத்தான காந்தியப் போராளி; அவா் அனைவருக்கும் வழிகாட்டும் கலங்கரைவிளக்கு. இன்று இவா் எண்ணற்ற இளைஞா்களுக்கு ஒளி கொடுத்து வழிகாட்டி அவா்களை மாமனிதா்களாக்கும் மாபெரும் பணியைத் தவமாகச் செய்கிறாா்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை நாம் வாழ்த்த முடியாது, அதை அவா் விரும்புவதில்லை. அவரின் ஆன்மா லயிப்பது செயலில்; அதுவும் திக்கற்றவா்களுக்கு. அதைச் செய்ய நாம் தயாரானால் அவரின் வாழ்த்தும், ஆசியும் நமக்குக் கிடைக்கும். அவரது தொண்டும் தியாகமும் நம் நாட்டு இளைஞா்களுக்கு வழிகாட்டட்டும்.

கட்டுரையாளா்: பேராசிரியா்.

Open in App
Dinamani
www.dinamani.com