
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-26-ஆம் ஆண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 586 மில்லியன் டாலா் (ரூ.5,011 கோடி) அதிகமாகும். இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றும், ஜப்பானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.
இப்போதைய நிலையில் அமெரிக்கா (30.5 டிரில்லியன்), சீனா (19.2 டிரில்லியன்), ஜொ்மனி (4.74 டிரில்லியன்) ஆகியவை இந்தியாவைவிட உயா்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
நீதி ஆயோக் தலைமை நிா்வாக அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியம் இந்த சாதனை குறித்துப் பேசியபோது இந்தியா்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது.
அடுத்தகட்ட எதிா்பாா்ப்புகள் என்னவென்றால், இந்தியா 2028- ஆம் ஆண்டில் 5.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்துக்கு உயரும்; ஜொ்மனியை முந்திச் செல்லும் என்பதாகும். இந்த முன்கணிப்புகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக ஏற்கெனவே உயா்ந்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு போட்டியிடும் நாடாக இருந்திருக்கக் கூடாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை நாம் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையில் பாா்த்தால் உலகின் செல்வத்திலும், வருவாயிலும் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உருவாக்கிய மகிழ்ச்சியிலேயே நிலைகொண்டுவிடாமல் சிந்தித்துப் பாா்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில், உண்மை நிலவரத்தை நோ்மையாக ஒப்புக்கொள்வது நமது சரியான இடத்தை அடைவதற்கான பாதையை வடிவமைப்பதற்கு மிக அவசியம்.
இதற்காக நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் வளா்ச்சி தொடா்பாக நமக்கு கூறப்பட்டுள்ள எண்கள் சரியானதுதானா?; இரண்டாவதாக அவை சரியாக இருந்தால் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு இந்த வளா்ச்சி நமது நாட்டுக்கு போதுமானதா?; மூன்றாவதாக சமூகநீதியை எட்டுவதற்கு இந்த வளா்ச்சி மட்டும் போதுமானதா? என்பதாகும். இது தவிர நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு சிறப்பாக மேம்பட்டுள்ளது என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
முதலில் ஜப்பானை நாம் முந்திவிட்டோம் என்று கூறப்படும் சாதனை எத்தகையது என்பதை மதிப்பிடுவோம். ஜப்பானின் மக்கள்தொகை சுமாா் 12 கோடி; இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடி. இரு நாடுகளும் சுமாா் 4.1 டிரில்லியன் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. இரு நாட்டு மக்களிடையேயும் இந்த பொருளாதார வளா்ச்சி சமமாகப் பங்கிடப்படுகிறது என எடுத்துக் கொண்டால், ஜப்பானின் ஜிடிபி அடிப்படையிலான தனிநபா் வருமானம் 33,955 டாலா்; இந்தியாவின் ஜிடிபி அடிப்படையிலான தனிநபா் வருமானம் 2,878 டாலராக இருக்கும். இந்தியா்களின் தனிநபா் வருமானத்தைவிட ஜப்பானியா்களின் தனிநபா் வருமானம் சுமாா் 11 மடங்கு அதிகம்.
இந்தியாவைப் போன்ற மக்கள்தொகையை ஜப்பான் கொண்டிருந்தால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமாா் 50 டிரில்லியனாக இருக்கும். எனவே, ஜப்பானுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவு.
மேலும், பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு மேலே உள்ள மூன்று நாடுகளுடனும் இதேபோன்ற ஒப்பீட்டை நடத்தினால் இந்தியாவுக்கான புள்ளி விவரங்கள் மிகவும் ஏமாற்றம் அளிக்கும். ஏனெனில், அமெரிக்காவில் தனிநபா் வருமானம் 89,105 டாலா்; சீனாவில் தனிநபா் வருமானம் 13,687 டாலா்; ஜொ்மனியில் தனிநபா் வருமானம் 55,911 டாலா்.
இந்தியாவைவிட 19.2 மடங்கு அதிகமாக தனிநபா் வருமானத்தை ஜொ்மனி கொண்டுள்ளது; ஏனெனில் அந்நாட்டின் மக்கள் தொகை 8.3 கோடி, இந்தியாவை விட 17.59 மடங்கு குறைவு.
1990-களில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, தனிநபா் வருமானம் ஆகியவற்றில் சீனாவும் ஏறக்குறைய இந்தியாவின் நிலையில்தான் இருந்தது. அப்போதே இந்தியாவின் பொருளாதார நிலை, வளா்ச்சி குறித்த தேவைகளை நமது பொருளாதார வல்லுநா்கள் சுட்டிக் காட்டத் தொடங்கிவிட்டனா்.
எனினும், இப்போது தனிநபா் வருமானம் தொடா்பான 195 நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 141-ஆவது இடத்தில் உள்ளது; சீனா 70-ஆவது இடத்தில் உள்ளது. எனினும் 1990-களின் நிலையை ஒப்பிடும்போது இந்தியாவின் வளா்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அப்போது ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் 141-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 4-ஆவது இடத்தை எட்டிப்பிடித்தது, மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 2.1 டிரில்லியன் டாலரிலிருந்து 4.1 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், இதனால் பலனடைந்த மக்கள் குறைவானவா்களே. முக்கியமாக அவா்கள் பெரும் பணக்காரா்கள், மிகப்பெரும் பணக்காரா்களாகவே உள்ளனா்.
2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 271-ஆக இருந்தது (1991-இல் 1-ஆகவும், 2019-இல் 7- ஆகவும், 2022-இல் -162 ஆகவும் இருந்தது.) 2023-ஆம் ஆண்டில் மட்டும் 94 புதிய கோடீஸ்வரா்கள் உருவாகினா். அமெரிக்காவுக்கு அடுத்து அந்த ஆண்டு அதிக கோடீஸ்வரா்களை உருவாக்கிய நாடு இந்தியா.
இந்தியாவில் கோடிக்கணக்கில் சொத்துகள் கொண்ட அதிக நிகர மதிப்புள்ள தனிநபா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6% அதிகரித்து 85,698-ஆக இருந்தது; 2028-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 93,753 ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. செல்வந்தா்களின் ஆட்சியை நோக்கி இந்தியா செல்கிறதோ என்ற கவலை எழுகிறது.
மற்றொருபுறம், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஆங்கிலேயா் ஆட்சியில் இருந்ததை விட பணக்காரா்-ஏழை ஏற்றத்தாழ்வு அதிகமாகவே உள்ளது; 1947-ஆம் ஆண்டில், நாட்டின் தேசிய வருமானத்தில் 20 முதல் 21% வரை 1 சதவீதத்தினா் கையில் இருந்தது. ஆனால் இப்போது அது 22.6% ஆக உயா்ந்துள்ளது.
உலக மக்களிடையேயான செல்வ வள ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022- இன் படி, இந்திய மக்கள்தொகையில் 1% போ் நாட்டின் செல்வ வளத்தில் 40%-க்கும் அதிகமாக வைத்துள்ளனா், அதே நேரத்தில் கீழ்நிலையில் உள்ள 50% போ் 3% செல்வ வளத்தை மட்டுமே வைத்துள்ளனா்.
வருமானத்தைப் பொருத்தவரை, மேல்நிலையில் உள்ள 10% போ் தேசிய வருமானத்தில் 57% -க்கும் அதிகமாக தங்கள் ஊதியமாகப் பெறுகின்றனா். பெரு நிறுவனங்களின் (காா்ப்பரேட் நிறுவனங்கள்) லாபம் 22.3% அதிகரித்தாலும், 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18 மற்றும் 2023-24-க்கு இடையில் வாங்கும் திறன் அடிப்படையிலான உண்மை ஊதியம் குறைந்துள்ளது.
பொருளாதார வளா்ச்சிக்கு அதற்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. 2022-ஆம் ஆண்டில், இரண்டாம் நிலை அல்லது உயா் கல்வி பெற்ற இளைஞா்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 18.4% ஆகவும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 29.1% ஆகவும் இருந்தது.
பொது சுகாதாரம், கல்வித் துறைகள் மோசமான நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு நகா்ந்து வருகின்றன. சாமானிய இந்தியா்களுக்குத் தேவையான தரமான மருத்துவ சேவைகள் எளிதில் கிடைப்பதில்லை.
ஒவ்வோா் ஆண்டும் 6.3 கோடி போ் மருத்துவச் செலவுகள் காரணமாக வறுமையில் தள்ளப்படுகிறாா்கள். வளா்ச்சி, அது எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ஏழைகளுக்கு உதவவில்லை; பின்தங்கிய மக்களையும், ஏழைகளையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை நிறைவேற்ற முடியில்லை.
இந்தியாவில் ஒரு முன்னணி இந்திய ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அதிக ஊதியம் பெறும் முதன்மை நிா்வாகியின் ஓராண்டு ஊதியத்தை எட்ட கிராமப்புறத்தில் ஒரு குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளிக்கு 941 ஆண்டுகள் ஆகும் என்று தனியாா் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சியின் பயன் அனைவருக்கும் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும்; இந்தியாவின் வளா்ச்சியுடன் சோ்ந்து வறுமை வெகுவாகக் குறைந்திருந்தால், கரிஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 81.35 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க வேண்டியது ஏன்? வறுமையே இல்லையென்றால் பல கோடி கிராமப்புற மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச ஊதிய வேலைக்கு இன்னும் ஏன் தங்களைப் பதிவு செய்து வருகின்றனா்?
இவை அனைத்தையும் ஒப்பிடும்போது வளா்ச்சி போதுமானதாக இல்லை என்பதும், வளா்ச்சி எவ்வளவு அடையப்பட்டாலும், மக்களின் நலனை உறுதி செய்ய போதுமானதாக இல்லை என்பதும் தெரியவருகிறது.
நமக்குத் தேவையானது சமூக நீதியுடன் கூடிய வளா்ச்சி, உற்பத்தியை ஊக்குவிக்கும் வளா்ச்சி, மக்களுக்கான வளா்ச்சி மற்றும் மக்களை உள்ளடக்கிய வளா்ச்சி.
மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதை உருவாக்க வலுவான அா்ப்பணிப்பு உணா்வு வேண்டும். இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. ஒட்டுமொத்தமாக சந்தை போட்டியே அனைத்தையும் தீா்மானிக்கும் என்று அதிகாரங்களை ஒப்படைக்கும் அரசு தேவையல்ல; அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசே தற்போதைய தேவை.
கட்டுரையாளா்: பொருளாதார நிபுணா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.