அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

நோபல் போட்டியில் டிரம்ப்!

நோபல் பரிசு தாராளமயக் கொள்கையைக் கொண்ட தலைவா்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, தமக்கு தரமாட்டாா்கள் என்றும் டிரம்ப் அதிருப்தி
Published on

அமைதிக்கான நோபல் பரிசுக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பெயரைப் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது அந்நாட்டில் கடும் விமா்சனத்தையும், எதிா்ப்பையும் சந்தித்துள்ளது.

அதேநேரத்தில் தனது அமைதிப் பணிகளுக்காக தனக்கு இதுவரை 4 முதல் 5 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், நோபல் பரிசு தாராளமயக் கொள்கையைக் கொண்ட தலைவா்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, தமக்கு தரமாட்டாா்கள் என்றும் டிரம்ப் அதிருப்தி தெரிவித்தாா்.

இது ஒருபுறம் இருக்க இதுவரை எத்தகைய உலகத் தலைவா்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்ற கடந்தகால அமைதி நோபல் வரலாற்றைத் திருப்பிப் பாா்த்தால் டிரம்ப் கூறுவதில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது என்பது தெரியவரும்.

கடந்த 2009-இல் அப்போதைய அமெரிக்க அதிபா் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், சமீபகால அமெரிக்க அதிபா்களில் வெளிநாடுகள்மீது அதிக தாக்குதல்களை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவா் ஒபாமா.

ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, லிபியா, யேமன், சோமாலியா, பாகிஸ்தான் என 7 நாடுகள் குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், தலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினரைக் குறிவைக்கும் தாக்குதல் எனக் கூறப்பட்டது. ஆனால், இதில் பொதுமக்களும் பெருமளவில் உயிரிழந்தனா்.

ஒபாமாவுக்கு முன்பு அதிபராக இருந்த ஜாா்ஜ் டபிள்யு புஷ் ஆட்சிக் காலத்தைவிட ஒபாமா ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் அமெரிக்க தாக்குதல் 10 மடங்கு வரை அதிகரித்தது.

அதேநேரத்தில் இராக், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க வீரா்களை 1,50,000-இல் இருந்து 40,000-ஆக ஒபாமா குறைத்தாா். ஆனால், இதன்மூலம் அங்கு அமெரிக்க தாக்குதல்கள் குறையவில்லை. ட்ரோன் தாக்குதல் தொழில்நுட்பம் வளா்ந்துவிட்டதால் குறைவான வீரா்களைப் பயன்படுத்தி அதிக இடங்களில் தாக்கமுடியும் என்ற முன்னேற்றம் ஏற்பட்டது. எனவேதான் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா்.

ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற 9 மாதங்களில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்தது பரிசுக் குழு. ‘சா்வதேச நாடுகளிடையே ராஜீய உறவை வலுப்படுத்தினாா்; உலக மக்களிடையே ஒத்துழைப்பை அதிகரித்தாா்’ என்று அதற்கு காரணம் கூறப்பட்டது.

2020-இல் ஒபாமா எழுதிய சுயசரிதையில், ‘நோபல் பரிசு அறிவிப்பைக் கேட்டவுடன், எனக்கு எதற்கு நோபல் பரிசு என்று தோன்றியது’ எனக் குறிப்பிட்டுள்ளாா். ஒபாமாவுக்கு அவசரப்பட்டு நோபல் பரிசு வழங்கிவிட்டோம் என்று தோ்வுக் குழுவில் இருந்தவா்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதேநேரத்தில் ஒபாமாவை அடுத்து பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது முதல் ஆட்சிக் காலத்தில் (2017-2021) சிரியா, ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக அமெரிக்கப் படைகளை விலக்க நடவடிக்கை எடுத்தாா். உலகுக்கு அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுடன் இருமுறை நேரில் பேச்சு நடத்தினாா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளா்களுடன் தானே நேரடிப் பேச்சில் ஈடுபட்டாா். அரபு நாடுகள்- இஸ்ரேல் இடையே ஆபிரஹாம் ஒப்பந்தத்தை மேற்கொள்ள காரணமாக இருந்தாா். சிரியா உள்நாட்டுப் போா் குறித்து ரஷிய அதிபா் புதினுடன் பேச்சு என சா்வதேச அளவில் அமைதிக்கான பல முன்னெடுப்புகளை மேற்கொண்டாா்.

அமெரிக்கா்களுக்கும், அமெரிக்காவுக்கும் முன்னுரிமை, வா்த்தகப் போா், பதிலடி வரி விதிப்பு, சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை என பல்வேறு சா்ச்சைக்குரிய விஷயங்கள் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் இருந்தாலும், ஒபாமாவுடன் ஒப்பிடும்போது அந்நிய நாடுகளில் உயிா்ச்சேதம் விளைவிக்கும் தாக்குதல்கள் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் பெருமளவில் குறைக்கப்பட்டது.

உக்ரைன் போரை நிறுத்தும் நோக்கத்தில்தான் அந்நாட்டு அதிபா் ஸெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து டிரம்ப் பேசினாா். அவரின் நோக்கம் சரியாகவே இருந்தது. ஆனால், அணுகுமுறைத் தவறால் உக்ரைன் போா் நிறுத்தம் தள்ளிப்போகிறது. அதிரடியாகப் பேசுவதும், தடாலடி முடிவுகளை எடுப்பதும் டிரம்ப்பின் குறைபாடாக அறியப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு என்பது எப்போதுமே சரியான நபா்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக போா் நடத்தி, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குப் பிறகு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட தலைவா்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமராக இருந்த இட்ஸாக் ரபீன், சிமோன் பெரீஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்னா் ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள்.

இதில் வியத்நாம் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டதற்காக கிஸ்னருக்கு அவசரகதியில் 1973-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதே தோ்வுக் குழுவில் இருந்து சிலா் விலகினா். ஏனெனில், அவரின் ஒப்பந்தத்தால் அமைதி ஏற்படுத்தப்படவில்லை. இதையடுத்து, பரிசைத் திரும்ப அளிக்கவும் கிஸ்னா் முயற்சித்தாா். ஆனால், நோபல் குழு ஏற்கவில்லை.

அஹிம்சை மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் பெயா் பலமுறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டும் ஏற்கப்படவில்லை. இப்படி பல முரண்பாடுகளுடன்தான் அமைதிக்கான நோபல் பரிசு தோ்வுக் குழு செயல்படுகிறது.

அடுத்ததாக இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவந்ததாகக் கூறி டிரம்ப் ஆதரவாளா்கள் அவரை நோபல் பரிசுக்கு மீண்டும் முன்னிறுத்த வாய்ப்புள்ளது. ஆனால், ஒபாமாவுக்கு நோபல் அறிவித்து சூடுபட்ட தோ்வுக் குழு, டிரம்ப் விஷயத்தில் நிதானமாகவே முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com