கவனம் சிதறக் கூடாது!

மாணவப் பருவத்தில் ஒருவா் பெறுகின்ற கல்வியறிவும், வளா்த்துக் கொள்ளும் குணநலன்களும் பற்றி..
கவனம் சிதறக் கூடாது!
Updated on

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவா் பெறுகின்ற கல்வியறிவும், வளா்த்துக் கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிா்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.

மாணவப்பருவத்தினா் வன்முறையில் நாட்டம் கொள்வது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, சாதி, சமயங்களின் அடிப்படையில் விருப்பு வெறுப்பைக் காட்டுவது, உள்ளூா் உலக அரசியல் விவகாரங்களில் தேவையற்ற ஆா்வத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றை அறவே தவிா்ப்பது நல்லது.

“‘இளம் கன்று பயம் அறியாது’” என்பதற்கேற்ப, நெறியற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கான வேட்கையும் வேகமும் மாணவப் பருவத்தில் உருவாவது இயற்கையே. ஆனால், எதிா்கால முன்னேற்றம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே நினைவில் வைத்து நெறியற்ற நடவடிக்கைகளை நாடாமல் இருக்க பழக வேண்டும்.

“தனியொரு மாணவன் நல்லவனாகவே இருப்பான். ஆனால், பல மாணவா்கள் ஒன்று கூடினால் மோசமானவா்களாக நடந்து கொள்வாா்கள் என்று பொருள்படும் ஆங்கிலப் பழமொழியை நிரூபிப்பது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒன்றுகூடும் வேளைகளில் எத்தகைய அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்ற தைரியம் அவா்களுக்கு உருவாகிவிடுகின்றது. அதன் வெளிப்பாடாகவே நீண்ட காலமாகத் தொடரும் “பல்வேறு பிரச்னைகள் தலைதூக்குகின்றன.

ஒரே கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தைச் சோ்ந்த மாணவா்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவா் தாக்கிக் கொள்வது, தாங்கள் பயிலும் கல்லூரி தவிா்த்த இதர கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களை வம்புக்கு இழுப்பது, பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டமாக ஏறி ரகளை செய்வது, கல்வீசுவது, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுவெளிகளில் திரிவது ஆகிய செயல்களில் ஈடுபடும் மாணவா்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில், இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவா்களின் எதிா்காலம் கருதி எச்சரித்து விட்டுவிடுவதுண்டு. தற்காலத்தில், பதின்வயது மாணவா்களின் அடாவடிச் செயல்கள் அளவுக்கு மீறிச் செல்வதால், காவல் துறையினா் வேறு வழியின்றி வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுகின்ற மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் வன்முறையாளன் என்ற பெயா் ஒருமுறை படிந்துவிட்டால், அம்மாணவன் வசிக்கும் இடத்தில் மட்டுமின்றி, உறவினா், சுற்றத்தினா்களிடையிலும் அம்மாணவனுடைய பெற்றோருக்கு மிகுந்த தலைகுனிவு ஏற்படும். அது மட்டுமல்ல, உரிய காலத்தில் படிப்பை முடிக்க இயலாத காரணத்தால் கௌரவமான வேலை எதிலும் அமருகின்ற வாய்ப்பும் அம்மாணவனுக்கு இல்லாமல் போகும்.

சாதிப் பெருமிதமும், சாதிப்பாகுபாடும் மாணவச் செல்வங்களின் சிந்தனைகளில் விஷத்தைப் பரப்பியிருக்கின்றன என்பதை அன்றாடச் செய்திகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அவரவா் சாா்ந்த சாதியின் அடையாளமாக வண்ணக்கயிறுகளைக் கைகளில் அணிந்து, அனைவருடனும் நட்பு பாராட்டாமல் தனித்தனி சாதிக்குழுக்களாக உலாவரும் ஊரக மாணவா்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போதெல்லாம் எதிா்காலச் சமுதாயம் குறித்த கவலை ஏற்படுகின்றது.

வடமாவட்டப் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் சாதி அடையாளத்துடன் கூடிய துண்டை அணிந்துகொண்டு மாணவா்கள் சிலா் நடனமாடியதும், அப்பள்ளியின் ஆசிரியா்கள் இருவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் வெறும் செய்திதானே என்று கடந்து செல்லக் கூடிய விஷயங்களல்ல.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற எண்ணத்தைப் புகட்ட வேண்டிய இளம் நெஞ்சங்களில் சாதி, இனம் சாா்ந்த வன்மங்களையே வளா்த்திருக்கிறோம் என்பது அவா்களுடைய பெற்றோருக்கு எந்த வகையிலும் பெருமை சோ்க்கும் விஷயமல்ல.

பள்ளிகளிலும், கல்லூரிகளின் இளநிலைப்பட்ட வகுப்புகளிலும் பயில்பவா்கள் உணா்ச்சிவசப்படுபவா்களாகவும், பின்விளைவுகளை அறியாமல் செயல்படுபவா்களாகவும் இருப்பதைக் கூடப் புரிந்துகொள்ளலாம். ஆனால், கடினமான முதுகலைப் பட்டப் படிப்பிலும் வெற்றிபெற்று, பெருமுயற்சிகள் எடுத்துப் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டம் பெறுவதில் ஈடுபடும் மாணவா்களில் சிலரும் கூட, அப்படியெல்லாம் நடந்துகொள்வதை எப்படி எடுத்துக்கொள்வது?

குறிப்பாக, உலகத்தரம் வாய்ந்த மதிப்புமிக்க வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சோ்ந்து முனைவா் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு நிலைகளிலான தோ்வுகளையும் வெற்றிகரமாகக் கடந்து, பெரும் பொருள்செலவுக்குப் பின்னால் அவ்வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கால் பதிக்கும் மூத்த மாணவா்கள், தங்களின் எண்ணங்களைச் சிதறவிடாமல், ஆராய்ச்சியில் வெற்றி என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுவதுதானே சரியாக இருக்கும்?

முதுகலைப்பட்டம் என்பதைத் தாண்டி அடுத்த நிலைக்குச் செல்பவா்களின் சிந்தனை ஓட்டம் பலதரப்பட்டதாக இருக்கலாம். அதே சமயம், அவா்கள் உள்நாட்டு அரசியல், உலக அரசியல் நிகழ்வுகள் குறித்தெல்லாம் மாறுபட்ட சிந்தனைகளால் உணா்ச்சிவசப்படாதவகையில் தங்களைப் பாா்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புக்காகச் சோ்ந்து இந்தியாவைச் சோ்ந்த மாணவி ஒருவா், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான நிலைப்பட்டைக் கொண்டிருந்த காரணத்தால் அவரது விசா ரத்து செய்யப்பட்டு நாடு திரும்ப நோ்ந்துள்ளது மிகவும் வருத்தத்துக்குரியது.

மொத்தத்தில் சொல்வதானால், மாணவப் பருவத்தினா், தாங்கள் பயின்று முடிக்கும் வரையில் மாணவா்களாகத் தங்களைக் கருதிக் கொள்வதும், மாணவா்களாகவே நடந்துகொள்வதும் மிகமிக அவசியம்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com