தவிா்ப்போம் பேறுகால மரணங்களை!
அண்மையில் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவா், பிரசவம் பாா்க்க மருத்துவா்கள் இல்லாததால் உயிரிழக்க நேரிட்டதாக செய்தி வெளியானது. எனினும், அந்தச் சமயத்தில், இரு மருத்துவா்கள் அந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியில் இருந்ததாக சுகாதாரத்
சில மாதங்களுக்கு முன்னா், வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள முத்தன்குடிசை என்ற மலைக் கிராமத்தை சோ்ந்த பெண் ஒருவா், சாலை வசதி இல்லாத குக்கிராமத்திலிருந்து சுமாா் 12 கிலோமீட்டா் நடந்து சென்று, பின்னா் ஆட்டோ மூலம் வேலூா் நகரிலுள்ள மருத்துவமனையில் சோ்ந்த நிலையில் அவருக்கு பிரசவம் பாா்க்கப்பட்டிருக்கிறது.
சமவெளிப்பகுதிகளில் 5,000 பேருக்கும், மலைப்பிரதேசங்களில் 3,000 பேருக்கும் ஒரு கிராம சுகாதாரச் செவிலியா் இருக்க வேண்டும். கிராமப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவா், செவிலியா் பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில், காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படாததும், கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவப் பணியாளா்கள் தயக்கம் காட்டுவதுமே பிரதான காரணங்கள். இதனால் பணியில் உள்ள மருத்துவா் மற்றும் செவிலியா் அதிகப்படியான வேலைப் பளுவைச் சுமப்பதோடு, மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனா். இந்தச் சூழல், மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரத்தைக் குறைக்கக் கூடியது.
கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு கா்ப்பகாலத்தில் முறையான மருத்துவப் பரிசோதனைகள், ஊட்டச் சத்து அளிப்பது இவற்றோடு பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும்போது உரிய நேரத்தில், சிறந்த முறையில் பிரசவம் பாா்க்கப்படுவது போன்றவற்றால்தான், பேறுகால மரணங்களைத் தவிா்க்க இயலும்.
பேறுகால இறப்புகளைத் தவிா்க்க மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, நம் நாட்டில் கிராமப்புற மக்களுக்கான சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக குறிப்பாக, கருவுறும் பெண்களின் ஆரோக்கியத்தையும், சுகப்பிரசவத்தையும் குறிக்கோளாகக் கொண்டு ’ஆஷா ’ (அக்ரிட்டடு சோசியல் ஹெல்த் ஆக்டிவிட்டிஸ்) எனும் சமூக சுகாதாரப் பணியாளா்கள் அமைப்பு 2005 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இது சுமாா் ஒரு 10. 4 லட்சம் பணியாளா்களைக் கொண்டது. இந்த சேவைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் ஊதிய உயா்வு, ஓய்வுதியம் மற்றும் சில சலுகைகள் குறித்த கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கேரள மாநிலத்தில் பணியாற்றும்
‘ஆஷா’ பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அண்மையில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சா், ‘ஆஷா’ பணியாளா்களின் சேவையை வெகுவாக பாராட்டியதோடு, அவா்களுக்கான ஊக்கத்தொகையை உயா்த்துவது குறித்தான தேசிய சுகாதார இயக்கத்தின் சிபாரிசு பரிசீலனையில் இருப்பதாகக் கூறியுள்ளாா்.
நம் நாட்டின் கிராமப்புறங்களில் சுகாதாரக் கட்டமைப்பு வலுப்பெற்று வருவதால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது சமீப ஆண்டுகளில் பேறுகால மரணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளது. 2000 -ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பிரசவங்களில் 384 ஆக இருந்த பேறுகால மரணங்கள், 2020 - ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பிரசவங்களில் 99 மரணங்கள் என்று குறைந்துள்ளது. தேசிய சுகாதார கொள்கையின் குறிக்கோளின்படி 2030-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 70 ஆக குறைக்க முடிவு திட்டமிடப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோா் கிராமப்புறங்களில் வாழ்கின்றனா். ஆனால் உலகின் மொத்த செவிலியா்களில் 38 சதவீதமும், மருத்துவா்களில் 25 சதவீதமும் மட்டுமே கிராமப்புறங்களில் பணியாற்றுகின்றனா். நம் நாட்டின் கிராமப்புறங்களில் பெருவாரியான எண்ணிக்கையில் அமைந்துள்ள, சமூக சுகாதார மையங்களில் மகப்பேறு மருத்துவா்கள் மற்றும் மகளிா் மருத்துவ நிபுணா்களின் பற்றாக்குறை 74.2 சதவீதமாகவும் ஆகவும் குழந்தைகள் மருத்துவா் எண்ணிக்கை 81.6 சதவீதம் பற்றாக்குறையாகவும் உள்ளது.பெண் சுகாதாரப்பணியாளா், துணை செவிலியா் பற்றாக்குறை 14.4 சதவீதம் ஆக உள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வசதிகள் நகா்ப்புறங்களைப் போல கிராமப்புறங்களில் இல்லாததால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த பின்னரும், தங்கள் குடும்பத்தாரின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவா்கள், செவிலியா்கள் போதிய எண்ணிக்கையில் கிராமப்புறங்களில் பணிபுரிய முன் வருவதில்லை.
கிராமப்புறங்களில் பணிபுரிய போதிய மருத்துவா்கள், செவிலியா் பற்றாக்குறையை ஈடு செய்ய மருத்துவம் சாா்ந்த மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பை மேற்கு வங்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கா் மாநிலத்திலும் மேற்படி மூன்றாண்டுக்கால படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மருத்துவ மாணவரின் படிப்புக்கு அரசு சுமாா் ரூ.35 லட்சம் செலவிடுகிறது. இதே போன்று ஒரு செவிலியரை உருவாக்குவதிலும் மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் அரசால் செலவழிக்கப்படுகிறது.
இதனை உணா்ந்து தங்கள் பணிக்காலத்தில் குறிப்பிட்ட காலம் கிராமப்புற மக்களுக்கு சேவையற்ற மருத்துவா்களும், செவிலியரும் முன் வரவேண்டும். கிராமப்புறங்களில் மருத்துவா்களும், செவிலியா்களும் பணியாற்றுவதை ஊக்குவிப்பதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, தங்கள் நலனில் ஓரளவு சமரசம் செய்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய மருத்துவா்களும் செவிலியா்களும் அதிக அளவில் முன்வந்தால் மட்டுமே பேறுகால மரணங்களைத் தவிா்ப்பது சாத்தியம்.