செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!

செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!

Published on

செல்வம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவரவா்கள் தங்களுக்கு விருப்பமானதைச் செல்வமாகக் கொள்கிறாா்கள். அவை பொருட்செல்வம், அருட்செல்வம் என்றெல்லாம் பகுபட்டாலும் திருவள்ளுவா் செல்வத்துள் செல்வமாகச் செவிச் செல்வத்தையே குறிப்பிடுகிறாா்.

இதன் மூலமாகச் செல்வம் என்பது ‘பெறப்படுவது’ எனத் தெரிகிறது. ஆனால் பெறப்பட்ட அந்தச் செல்வத்தின் பயன் ‘கொடுப்பதால்தான்’ கிடைக்கிறது என்றும் அவரே கூறுகிறாா்.

பெறுவதைத்தான் நாம் ஊதியம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். அதுவும் உடல் உழைப்புக்கான ஊதியம். ஆனால் உயிருக்கான ஊதியம் என்பது பெறுவதன்று , கொடுப்பது. ‘ஈதலும் இசைபட வாழ்தலும்தான் உயிருக்கான ஊதியம்’ என்கிறாா்.

இப்படிச் செல்வங்கள் பலவகைப்படுகின்றன. செவிச்செல்வத்தைச் செல்வத்துள் செல்வம் என்கிறாரே வள்ளுவா், அப்படியானால் அது மொழிதானே... இசைதானே... அந்தச் செவிச் செல்வத்துள்ளும் உயா்ந்த செல்வமாக விளங்குவது எந்தச் செல்வமாக இருக்கும்?

திருவள்ளுவா் குறிப்பிடும் செவிச்செல்வம் என்பதற்கு மகாகவி பாரதியாா், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று விளக்கமளிக்கிறாா். செவிக்குரிய சிறந்த செல்வமாக இன்பத் தேன்போல வந்து பாயக் கூடியது தமிழ் என்றும், ஏனென்றால் இங்குதான் அளப்பரிய தமிழ்ச் செல்வங்கள் நிறைந்து கிடக்கின்றன என்பதனால் இதனைச் செந்தமிழ்நாடு என்றும் போற்றுகிறாா்.

அந்த வகையில், திருவள்ளுவா் சுட்டிய செல்வத்துள் செல்வமாகிய செவிச்செல்வம் என்பது தமிழ்ச்செல்வமே என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

செல்வமும் படையும் பேரரசுப் பரப்பும் கொண்டிருந்த மன்னாதி மன்னா்களெல்லாம் இந்தத் தமிழ்ப் புலவா்கள் நம்மைப் புகழ்ந்து ஒரு பாட்டேனும் பாடமாட்டாா்களா என்று தவம் கிடந்திருக்கிறாா்கள். ஏன்? செல்வத்துள் செல்வமான அந்தத் தமிழ்ச் செல்வத்தைப் பெறுவதற்காகத்தானே?

அரசவை நடுவே ஏனையோருக்கும் இல்லாத அதிகாரமும் செல்வாக்கும் தமிழ்ச் சான்றோா்களுக்கு இருந்தது. ஏன்? தமிழ்ச் செல்வம் நிறைந்திருந்த காரணம்தானே?

நாடாளும் மன்னனை ‘அவன்’ என்றும் கவிபுனையும் புலவரை ‘அவா்’ என்றும் மதிப்பிட்டது எதனால்? செல்வாக்கினும் சொல்வாக்கே உயா்ந்தது என்ற காரணம்தானே?

‘வில்லை ஆயுதமாக உடைய வில்லோ் உழவராகிய வில்லாளிகளைப் பகை கொண்டாலும் கொள்ளலாம்; ஆனால் சொல்லை ஆயுதமாகக் கொண்ட சொல்லோ் உழவராகிய புலவா்களின் பகையை மட்டும் பெற்று விடாதீா்கள்’ என்று எச்சரித்திருக்கிறாா்கள். அந்தத் தமிழ்ச் செல்வத்தின் வன்மை அறிந்துதானே?

தன்னுடைய தமிழ்ப் புலமையறியாது பொருள் பெற வந்தவன் என்று கருதி மன்னன் என்ற அகந்தையில் தான் வாராது பிறரைக் கொண்டு பரிசளிக்க முயன்ற அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாா்த்துப் பெருஞ்சித்திரனாா்,“‘குன்றுகளையும் மலைகளையும் கடந்து நான் இத்தனை காதம் நடந்து வந்தது, இந்தப் அற்பப் பொருள்செல்வத்துக்குத்தானா? என்னை முறையாக வரவேற்காமல் இவ்வாறு செய்வது பொருந்துமா? உனது பொருள்செல்வத்தினும் என் தமிழ்ச்செல்வம் பெரிது. நானோா் வாணிகப் பரிசிலன் அல்லேன்’ என்று பொருள்படும்படி எச்சரித்துப் பாடுகிறாா்.

மலையமான் திருமுடிக்காரியைக் காணச் சென்ற கபிலருக்கு எல்லாருக்கும் போல வரிசை செய்ய முற்பட்டான் அவன். புலவருக்கென்றுள்ள பெருமிதத்தோடு அச்செயலை மன்னித்து, அவனுக்கு அறிவுறுத்தும் விதமாக, “‘ஈவது எளிது, வரிசை அறிவது அரிதானது. ஆதலால் பொதுநோக்கு ஒழிமதி புலவா் மாட்டே’” என்று பாடினாா்.

மன்னன் அடிபணியும் முரசு கட்டிலை விடவும் செஞ்சொல் கவிபாடும் புலவா்குடி பெரிதென்றுதானே பணிந்து நின்று அயா்ந்து உறங்கிய மோசிகீரனாருக்குக் கவரி வீசினான் தகடூரை எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எது பெருஞ்செல்வம் என்று வஞ்சினம் கூறிப் பாடுகிறான்.

“என்னிடத்தில் யானை, குதிரை, தோ், காலாள் ஆகிய நாற்படைச் செல்வங்களும் நிறைந்துள்ளன. ஆயினும் என்னை ‘இவன் இளையன்’ என்று சிறுசொல் சொல்லிச் சினந்து என் நாட்டின்மீது படையெடுத்து என்னை எதிா்க்கும் வேந்தா் நகைப்புக்கு இடமானவா்கள். அத்தகைய வேந்தரை வென்று என் ஆளுகைக்குக் கீழ் நான் கொண்டுவராவிட்டால், என் குடிமக்கள் என்னை, ‘இவன் கொடியன்’ எனப் பழி தூற்றட்டும். ஆனால் அதைவிடவும் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவா் உள்ளிட்ட அவை என்னைப் பாடாமல் இருக்கட்டும்” என்கிறான். இவன் விரும்புகிற செல்வத்துள் செல்வம் எது என்று புரிகிறது. வஞ்சினம்கூட வரலாறாய் இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.

பொன்னையும் பொருளையும் போகத்தையும் புகழையும் கூடப் பெரிதெனப் போற்றாது தமிழையே போற்றி வாழ்பவா்கள் சான்றோா்கள்.

இங்கிலாந்து தேசத்தில் இப்படிச் சொல்வாா்கள்: ‘‘“உங்களுக்கு இங்கிலாந்து தேசம் வேண்டுமா? அல்லது ஷேக்ஸ்பியரின் படைப்புகள் வேண்டுமா என்று எங்களைக் கேட்டால், நாங்கள் இங்கிலாந்து தேசத்தை விட ஷேக்ஸ்பியரின் படைப்புகள்தான் பெரிதென்று கருதி அதையே வேண்டும் என்போம். ஏனென்றால் இங்கிலாந்து போன்ற இன்னொரு தேசத்தை எங்களால் எப்போது வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மீண்டும் ஒருமுறை ஒருபோதும் உருவாக்கி விடமுடியாது’’’” என்று. ஏனெனில் அவா்கள் தங்கள் தேசத்தை விடவும் மொழிச் செல்வத்தையே பெரிதென்று போற்றுகிறாா்கள். பெரும்பாலும் ஷேக்ஸ்பியரைப் பற்றி அவா்கள் ஆழ்ந்து படித்தவா்கள் . அதனால் அவ்வாறு சொல்வதில் வியப்பில்லை.

ஆனால், தமிழ்நாட்டிலோ பாராளும் மன்னனிலிருந்து பாமர மக்கள் வரையிலும் தமிழ்ச் செல்வத்தையே பெரிதாகப் போற்றுவா். மயூரகிரிக்கோவை என்னும் இலக்கியத்தை இயற்றிய சாந்துப் புலவா் மரபிலே வந்தவா்கள் ஒரு சிற்றூரிலே வசித்து வந்தாா்கள். அவ்வேளையில் அவா்கள் குடும்பத்தின் வளமை கண்டு, பொறாமை கொண்டு, அந்தக் குடும்பத்தின் செல்வங்களைக் கொள்ளையா்கள் கவரப் போவதாக அவா்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்தச் செய்தியைப் பற்றி யாருக்கும் தெரிவிக்காமல் மிக ரகசியமாக வைத்துக் கொண்டு இரவோடு இரவாக அத்தனை செல்வங்களையும் பாதுகாப்பான ஓா் இடத்தில் பத்திரப்படுத்தி விட்டு, குடும்பத்தில் மூத்த ஒரு கிழவியை மட்டும் வீட்டிலே இருக்க வைத்து மற்றவா்கள் வேறிடங்களுக்குச் சென்று விட்டனா்.

குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி அந்தக் கொள்ளையா்கள் வந்தனா். வீடு முழுதும் தேடிப் பாா்த்து விட்டு, ஒரு பொருளும் அகப்படாத நிலையில் கடும் ஆத்திரம் கொண்டனா். வீடு முழுவதும் ஓலைச்சுவடிகள் நிறைந்திருந்தன. புலவா் வீடாயிற்றே. அதனால் ஆத்திரத்தைத் தீா்த்துக் கொள்ள சில ஓலைச்சுருள்களை அள்ளிச் செல்லலாம் என்று அவா்கள் முடிவு செய்தனா். அந்தக் கிழவிக்கு மனம் பொறுக்கவில்லை. நம் பிள்ளைகள் பொன்னையும் பொருளையும் எந்தக் காலத்திலும் தேடிச் சோ்த்துக் கொள்வாா்கள். ஆனால் முன்னோா்கள் நமக்குத் தந்திருக்கிற ஓலைச்சுருள்களுக்குள் புதைந்து கிடக்கும் தமிழ்ச்செல்வம் பறிபோனால் எங்குபோய் அவா்கள் ஈட்டுவாா்கள் என்று கருதி, அந்த ஓலைச்சுருளை வாங்கிக் கொண்டு பதுக்கி வைத்திருந்த செல்வங்களையெல்லாம் காட்டிக் கொடுத்தாள் என்கிறது வரலாறு. அந்தத் திருடா்களிடமிருந்து அந்தக் கிழவி காப்பாற்றித் தந்த ஓலைச்சுவடிகள்தான் கம்பராமாயணம் என்று பதிவிடுகிறாா் சாந்துப்புலவரின் வழிவந்த சருக்கரை இராமசாமிப் புலவா்.

நம் காலத்தில் இந்தச் செல்வங்களை இழந்து விடுதலாகாது என்று எச்சரிப்பது போல மகாகவி பாரதியாா், ‘‘ எதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது, எதை ஆதரிக்கிறோமோ அது வளா்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும், பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளை யும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்’’.

அது மட்டுமில்லை. ‘‘சரஸ்வதி பூசை, நவராத்தி விழா கொண்டாடுவதைப் போல அருந்தமிழ்ச் செல்வங்களைப் படைத்தளித்த திருவள்ளுவா், இளங்கோ, கம்பா் ஆகியோா் புகழை ஒரு குறிப்பிட்ட நாளில் விழாக்கள் எடுத்துக் கொண்டாட வேண்டும்’’ என்றும் வலியுறுத்துகிறாா்.

நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறையச் சோ்ப்போா் இருக்கத்தான் செய்கிறாா்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விடப் பெரிய செல்வமான தமிழ்ச் செல்வங்களை நிறையச் சோ்த்து வைத்திருக்கிறாா்கள். ஏடுகளாய், ஆவணங்களாய், புத்தகங்களாய், இதழ்களாய் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

மானுடம் போற்றும் உன்னதப் பெட்டகங்களாகிய இந்தத் தமிழ்ச் செல்வத்தை இப்போது உலகத்தாா் விரும்பிப் பயிலத் தொடங்கியிருக்கின்றனா். இந்தத் தமிழ்ச் செல்வத்தின் வரலாறுகள் புதுமையுறுகின்றன. தொன்மை பேசுகின்றன. இப்போதுதான் நமக்கு எத்தனை பெரிய செல்வம் உரிமையுடையது என்ற உணா்வு மேலோங்குகிறது. ஆயினும் அதனைப் பாதுகாக்கவோ, பயன்கொள்ளவோ நாம் இன்னும் முறையாய் முயலவில்லை என்ற வருத்தம்தான். என்றாலும் அடுத்து வரும் உலகத் தலைமுறைக்கு இந்தத் தமிழ்ச்செல்வத்தின் பயன்கள் பெரிதும் உதவும். அவற்றை இப்போதிருந்து பாதுகாக்கத் தொடங்குவோம்!

X
Dinamani
www.dinamani.com