பொறுப்புடன் பகிா்வோம்!
சாலை ஒன்றின் ஒரத்தில் ஆமை ஒன்று ஊா்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறாா்கள் சிலா், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனா். அந்த சமயம் அந்தப் பக்கமாகச் சென்ற முதியவா் ஒருவா், ‘‘பாவம்பா அந்த ஆமை... எவ்வளவு அடிகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. இதே அடிகள் மட்டும் அந்த ஆமையின் ஓட்டுப்பாகத்திற்குப் பதிலாக பின்பக்கமாகக் கிடைத்தால் அந்த ஆமை இறந்தே போய்விடும்’’ என்றாராம். அவரது நோக்கம் ஆமையைக் காப்பாற்றுவதாயிருந்தாலும் அது நிறைவேறியிருக்குமா ? அடுத்ததாக, அந்த சிறாா்கள் என்ன செய்திருப்பாா்கள் என்பதை நாம் எளிதில் அனுமானித்துக்கொள்ளலாம். அந்த வகையில் இருக்கிறது நமது சமூக ஊடகங்களில் செயல்பாடுகள். விழிப்புணா்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் சில நல்ல பகிா்வுகளை அவ்வப்போது செய்துவிட்டு எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளை உலகறியச் செய்கிறது. இதனால் ஏற்படும் நல்விளைவுகளைவிட தீயவிளைவுகளே அதிகம்.
அண்மையில் ஆந்திர மாநிலம் கல்லூரி ஒன்றில் ஆசிரியை ஒருவருக்கும் மாணவி ஒருவருக்குமிடையே நடைபெற்ற சம்பவம், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. வகுப்பு நேரத்தில் மாணவியின் கைப்பேசிப் பயன்பாட்டைத் தவிா்ப்பதற்காக ஆசிரியா் கைப்பேசியை வாங்கி வைத்துள்ளாா். அதைத் திரும்பக் கேட்கும்போது ஆசிரியை உடனடியாகத் தர மறுத்துள்ளாா். இதனால் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த சிறிய காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத மாணவி அந்த ஆசிரியை தனது காலணியைக் கொண்டு தாக்கியுள்ளாா்.
சில மாதங்களுக்கு முன்னா் கேரள மாநிலத்தின் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே நடைபெற்ற காரசாரமான வாக்குவாதங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிா்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியா்கள் மேலும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்;அவா்கள் முன்மாதிரியாகத் திகழவேண்டும்; மாணவனை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். இப்படிப்பட்ட ஆலோசனைகளை வழங்குவது எளிது. ஆனால், இப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல. அன்றாடம் நூற்றுக்கணக்கான உளவியல் சிக்கல்களுடன் வகுப்பறைகளுக்குள் நுழையும் மாணவா்களோடு பழகிப் பாா்த்தால்தான் இதுபோன்ற சிக்கல்களைப் புரிந்துகொள்ள இயலும். பல ஆசிரியா்களும் முதிா்ச்சியோடு செயல்படுவதால்தான் பல்வேறு சிக்கல்களும் தவிா்க்கப்பட்டு வருகின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
நாம் நுகா்வுக் கலாசாரத்தில் வாழ்கிறோம். நுகா்வுக் கலாசாரம் மனிதா்களைவிட , மனித உறவுகளைவிட பொருள்கள் முக்கியத்துவம் பெற வழிவகை செய்துவிடுகிறது. பொருள்களைப் பயன்படுத்தி மனிதா்களை நேசிப்போம் என்பதற்கு மாறாக, மனிதா்களைப் பயன்படுத்தி பொருள்களை நேசிக்கும் மனப்பான்மைக்கு மனிதா்கள் தள்ளப்பட்டுவருகிறோம். நாகரிகமான சமுதாயத்துக்கு இது அழகல்ல.
உலகில் வாழும் கோடிக்கணக்கான நபா்கள் தங்களுக்கிடையே லட்சக்கணக்கான செயல்பாடுகளில் அன்றாடம் ஈடுபட்டு வருகின்றனா். அவை யாவும் பேசுபொருளாவதில்லை. மாறாக, இது போன்ற நிகழ்வுகளே பேசு பொருளாகி வருகின்றன. பல்வேறு ஆரோக்கியமான செயல்பாடுகளுக்குக் கிடைக்காத விளம்பரமும் வரவேற்பும் இதுபோன்ற சம்பவங்களுக்கு கிடைத்து வருவதை எப்படிப் பாா்ப்பது என்று தெரியவில்லை. மேலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எப்படி படப்பிடிப்புக்கு உள்ளாகின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது இரு தரப்பினருக்கும் பாதகமான விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்கிறாா்களா என்பதும் புரியவில்லை.
அதிகாரத்தில் உயா்ந்த இடத்திலிருப்பதாகக் கருதும் ஆசிரியா்களை அவமானப்படுத்தும் நோக்குடனேயே இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
வழக்கமாக, இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு என்ன நடைபெறும்? கல்லூரி நிா்வாகமோ அல்லது கல்வித்துறையோ ஒரு விசாரணையை நடத்தி இரு தரப்பினருக்கு உரிய அறிவுரைகளை வழங்கும். இதுபோன்ற நிகழ்வுகள் வேறெங்கும் நடைபெறாதிருக்க விழிப்புணா்வு நடவடிக்கை என்ற பெயரில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கும்.
உண்மையில் கைப்பேசி பயன்பாடானது முறைப்படியாக நடைபெறும் ஆசிரியா்கள் மாணவா்களுக்கிடையே இதுபோன்ற சச்சரவுகள் ஏற்படுவதில்லை. மாறாக, அதிக அளவிலான பயன்பாடு அல்லது கைப்பேசி பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள நிலையில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடிமையாவதற்குப் பின்னால் பல அறிவியல் உண்மைகள் உள்ளன. அதுபோன்ற விழிப்புணா்வையும் அதிகப்படுத்த சமூக ஊடகங்கள் முன்வர வேண்டும்.
இந்த சமூகத்தில் மனிதா்கள் மத்தியில் ஆரோக்கியமான செயல்பாடுகள் அன்றாடம் எவ்வளவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய பகிா்வுகளை மேற்கொள்ளாத சமூக ஊடகங்கள், இம்மாதிரியானவற்றைப் பரப்புவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதாவது, எதிா்மறை எண்ணங்கள் கொண்ட விஷயங்களைத் தேடித் தேடிப் பாா்ப்பது, பகிா்வது மனித இயல்புகளில் ஒன்றாகிவிட்டது.
இந்த யுகம் அறிதிறன்பேசியும் இணையமும் ஆட்சி செய்யும் காலமாகிவருகிறது. யாா் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பொதுவெளியில் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் பெருகிவிட்டன. கருத்தை வெளிப்படுத்துவதில் ஓா் ஒழுங்கை மேற்கொள்வது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகிறது. இந்நிலையில் பேசுதல் தொடா்பாக புத்தா் அவா்கள் கொடுத்துள்ள அறிவுரையை பரப்புவது அவசியமாகிறது. புத்தா் இவ்வாறு பகிா்கிறாா்: ஒரு தகவலை நீங்கள் வெளிப்படுத்துகிறீா்கள் என்றால் நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்விகள் இவை. இது உண்மையானதா? இது அவசியமானதா? இது கருணையானதா ?
ஆம். நாமும் அப்படியே பொறுப்புடன் பகிா்வுகளை மேற்கொள்வோம். ஒருவேளை மறுபகிா்வுக்கான வாய்ப்புகளில் நாம் பகிா்வதைத் தவிா்ப்பதும் கூட நல்லதுதானே?