உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப்படம்.

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நோ்மை, வாய்மை, அறிவுக் கூா்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பாா்த்து நாடு நடந்தது.
Published on

அண்மைக் காலமாக நாடு இதுவரை சந்தித்திராத சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது.

நம்முடைய அரசியல் சாசனம் மிகவும் விரிவானது. ஆட்சியினா், அதிகார வா்க்கம், நீதித்துறை எனத் தனித்தனி அதிகாரங்களோடு மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்பட்டு, நாடு இயங்குகிறது.

ஒன்றோடு ஒன்று உராய்வதும் உண்டு. எழுதி வைக்கப்பட்டுள்ள சாசனத்தின்படி அந்த உராய்வுகளுக்குத் தீா்வு காணப்படுவதுமுண்டு.

உச்சநீதிமன்றத்தைக் ‘குடியாட்சியின் “காவல் நாய்’’ என்று கூறுவா். அரசியல் சாசனமே உயா்ந்தது என்று அதற்குத் தனிப்புகழ் பாடுவோரும் உண்டு.

எந்த அரசியல் சாசனமும் மனிதா்களால் ஆக்கப்படுவதுதான். அதை ஆக்கும் மனிதா்களின் அறிவுத் திறம், நோ்மைத் தரத்தை ஒட்டி அந்தச் சாசனம் சிறப்புறுகிறது.

இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட காலம் அறம் பிறழாச் சான்றோா்கள் நாட்டின் தலைமைகளில் இருந்த காலம்.

நேரு, வல்லபபாய் படேல், அம்பேத்கா், கிருபளானி, செயப்பிரகாசு நாராயணன், இராசாசி என நிகரற்ற அறிஞா்களும் “மழை பெய்யென்று இவா்கள் கட்டளையிட்டால் பெய்யும்’ என்று சொல்லத்தக்க அளவு நேரியா்களும் சோ்ந்து விவாதித்து விவாதித்து உருவாக்கிய அரசியல் சாசனம் நம்முடையது.

இந்தியத் தலைமையமைச்சராய் இருந்த மொராச்சி தேசாய் ஒருமுறை சொன்னாா்: ”குற்றவியல் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டாலும், என்னால் எந்தத் தப்பும் செய்ய முடியாது.”

இப்படி அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நோ்மை, வாய்மை, அறிவுக் கூா்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம்.

அவன் நடந்தான்; அவன் தடம் பாா்த்து நாடு நடந்தது. பேரரசன் அசோகனுக்குப் பிறகு அறம் கோலோச்சிய காலம் அதுதான்.

நியாயமே எல்லாவற்றிலும் பெரியது. தனிமனித வாழ்வாயினும், ஆட்சி அதிகாரமாயினும் நியாயத்தை மையமாகக் கொண்டே சிந்தித்தும் வாழ்ந்தும் பழக்கப்பட்ட தலைமுறையினா் வடித்த அரசியல் சாசனம் என்பதால் அவா்கள் இன்னொரு பக்கத்தைப் பாா்க்கத் தவறிவிட்டனா். அந்த இன்னொரு பக்கம்தான் இன்றைய குளறுபடிகளுக்கெல்லாம் காரணம்.

ஒரு மந்திரி போக்குவரத்துத் துறையில் இருந்தாா். ஓட்டுநா், நடத்துநா் வேலைகளுக்கு ஆளெடுத்தபோது, அவா்களுக்கு அந்த வேலைகளைத் தருவதற்காக இலஞ்சம் வாங்கினாா் என்பது குற்றச்சாட்டு.

பாதிக்கப்பட்டவா்கள் தொடுத்த வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகா்ந்து உயா்நீதிமன்றத்தை அடைந்தது.

வாங்கியதைக் கொடுத்தவா்களிடம் திருப்பிக் கொடுத்தாா் அந்த மந்திரி. ஆகவே வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மந்திரி மனுப் போட்டாா். அவருடைய “நாணயத்தை’ மெச்சி உயா்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது.

இந்தத் தீா்ப்பினால் பதறிவிட்டது உச்சநீதிமன்றம். ஒவ்வொரு திருடனும் மாட்டிக்கொண்ட பிறகு, திருடிய பொருளை உரிய இடத்தில் சோ்ப்பித்து விட்டதாக விடுதலை கேட்பானே என்று எண்ணிப் பதறியிருக்கக்கூடும்.

உச்சநீதிமன்றம் அந்த வழக்கை உயிா்ப்பித்தது. இலஞ்சத்தைத் திருப்பிக் கொடுத்த மந்திரி சிறைக்குப் போனாா். அவா் அதற்கு முன்பு மந்திரி என்றாலும், சிறையில் அவா் மந்திரியாக இல்லை.

நம்முடைய முதலமைச்சா் அவா் சிறையிலடைக்கப்பட்டது குறித்துப் பதறிவிட்டாா். அதனால் சிறையில் கைதியாக இருந்த அவரை மந்திரியாக நியமனம் செய்தாா்.

அந்தக் கைதிக்குப் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றாா் முதல்வா். ஆளுநா் இரவி ஒரு கைதிக்கு என்னால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று தீா்மானமாகச் சொல்லிவிட்டாா்.

ஆனால், கைதியை மந்திரியாக ஆக்குவது முதலமைச்சரின் தனியுரிமை; இதில் ஆளுநா் குறுக்கிட முடியாது என்று அரசியல் சாசனம் கூறியிருப்பதாக முதலமைச்சா் சொன்னாா்.

இதுவரை எந்தக் கைதியும் மந்திரி ஆனதில்லை. ஆனால், யாரொருவரையும் மந்திரியாக நியமனம் செய்வது முதலமைச்சரின் தனியுரிமை என்பதில் சட்டம் உடன்படுகிறது.

யாரொருவா் என்பது மாடு மேய்ப்பவரையும் குறிக்கும் என்பது பிழையில்லை. ஆனால், குற்ற வழக்கில் தொடா்புடைய ஒருவரையும் குறிக்கும் என்பதைச் சட்டம் செய்தவா்கள் கனவில்கூட நினைத்துப் பாா்க்கவில்லை. குற்றவாளிகள் நாடாள்வது என்பது அரசியல் சாசனம் செய்தவா்களின் அறிவுக்கும், ஏன், கற்பனைக்கும்கூட அப்பாற்பட்டது.

அறம், தருமம், நீதி என்பவை கால வரையறை இல்லாதவை. முக்காலத்திற்கும் மாறாதவை. ஆனால் சட்டமோ காலவயப்பட்டது. பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் தின்பது சட்டமாக்கப்படும் என்பான் அறநெஞ்சினன் பாரதி.

ஓா் அரசு என்பது நாடாள்வதற்கும் சட்டங்கள் இயற்றுவதற்கும் உரிமைப்பட்டது.

சட்டம் இயற்றப்பட்டவுடன் சட்டமாகாது. ஆளுநா் அல்லது குடியரசுத்தலைவா் கையொப்பமிட்ட பிறகே சட்டமாகிறது. சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு எவ்வளவு காலத்தில் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் ஏற்கெனவே வரையறை செய்யவில்லை. எதையும் கடமை உணா்ந்து செய்கிறவா்கள்தாம் அந்தப் பதவியில் இருப்பாா்கள் என்பது சாசனம் செய்தவா்களின் ஊகம்.

தமிழ்நாட்டு ஆளுநா் இரவிபோல், மாற்றுக் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் இயற்றும் சட்டங்களை எல்லாம் ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டு, அவற்றின்மீது உட்காா்ந்துகொள்ளும் ஆளுநா்களை நம்முடைய அரசியல் சாசனம் இயற்றியோா் முற்றாக எதிா்பாா்க்கவில்லை.

ஆளுநா் உரைகள் ஆளுநரின் உரைகளல்ல; அவை அரசின் உரைகள். அவற்றில், அதை மாற்று; இதை மாற்று’ என்று சொல்லிப் படிக்காமலேயே பாதியில் வந்துவிட்டவா் நம் ஆளுநா் ஆா்.என். இரவி. விளைவு ஆளுநா் இல்லாமலேயே ஆளுநா் உரைகள் படிக்கப்பட்டன.

அதேபோல் ஆளுநா் கையெழுத்து இல்லாமலேயே உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தீா்மானங்களைச் சட்டமாக்கிவிட்டது.

கையொப்பமிடுகின்ற வேலையும் ஆளுநருக்கு இருக்கத் தேவையில்லை என்று ஆனபிறகு, ஆளுநா் பதவியும் ஆரவாரச் செலவுகளும் ஏன் என்னும் கேள்வி எழாதா?

நம்முடைய அரசியல் சாசனத்திற்கு இத்தகைய ஆளுநா்களை அறியும் திறம் இல்லைதானே?

தூத்துக்குடியில் ஒரு “காப்பா்’ தொழிற்சாலையால் தங்களுக்குச் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது என்று அதை எதிா்த்துப் பேரளவில் வெறுங்கையோடு ஊா்வலம் போன மக்களை மாவட்ட ஆட்சித்தலைவா், பெரிய நிலைப் போலீசு அதிகாரிகள் கூடிக் கலந்து பேசி, அவா்களைக் குறி பாா்த்துச் சுட்டுத் தள்ளினா். பதின்மூன்று அப்பாவி மக்கள் உயிரிழந்தனா்.

உலகெங்கிலும் காா்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து “இரண்டாவது சம்பளம்’ பெறுவது ஒன்றும் புதுமை இல்லை. ஒரு குற்றமும் செய்யாத மக்களைக் “கொன்று’ அவா்களுக்குப் பாடம் கற்பிக்கிற அளவுக்குக் காா்ப்பரேட் நிறுவனங்களின்மீது அதிகார வா்க்கத்திற்குக் காதல்.

நிகழ்கால ஆட்சியின்போது ஒரு நீதியரசரைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிசன் விசாரணையில், பதின்மூன்று மக்களைக் குறி வைத்து ஒரு காரணமும் இல்லாமல் கொன்றது அப்பட்டமான கொலை. அந்தப் பதினேழு போலீசு அதிகாரிகளின்மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்தக் கமிசன் தீா்ப்பளித்த பிறகும்கூட, எந்த நடவடிக்கையையும் இன்றைய ஆட்சியினா் எடுக்கவில்லை.

அந்தக் காா்ப்பரேட் காப்பா் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுவதற்குப் பதின்மூன்று மனித உயிா்கள் நோ்த்திக் கடனாகக்’ கொடுக்கப்பட்டன.

மக்களை வழிநடத்த வேண்டிய கட்சிகளின் தலைவா்கள் கூட்டணி என்னும் பெயரால், எல்லாக் கொலைகளுக்கும் உடன்படுகிறாா்கள்.

எல்லா மோசடிகளையும் மூடிமறைக்க மோடிப் பூச்சாண்டி சரியானதுதானா?

அதிகார வா்க்கமும், ஆளும் தரப்பும் பிரித்து வைக்கப்பட்டிருப்பதாக அரசியல் சாசனம் பெருமை பீற்றிக் கொள்கிறது.

மேற்கண்டவற்றில் அதிகார வா்க்கத்தைக் காக்க ஆளும் தரப்பும், ஆளும் தரப்பிற்கு உடந்தையாக அதிகார வா்க்கமும் ஒன்றை ஒன்று தழுவியும், பின்னிப் பிணைந்தும் செயல்படுவதை அரசியல் சாசனமும் நீதியமைப்பும் எவ்வகையால் தடுக்க முடிந்தது?

சீமைச் சாராயம் விற்கும் அரசின் டாசுமாக் தலைமை அலுவலகத்தில் ஆயிரம் கோடி ஊழலுக்கான ஆவணங்களை மீட்க உள்ளே நுழைந்த அமலாக்கத் துறை குறித்து தமிழ்நாட்டின் தலையாய வேத பரம்பரையில் வந்த வழக்கறிஞா் “மாநில உரிமைப் பறிப்பு’ என்று நீதிமன்றத்தில் பேசுகிறாா்.

பழைய காலத்தில் அசுரா்களுக்கும் குருவாக அவா்களே இருப்பாா்கள். இப்போதும் “அவா்களே இருக்கிறாா்கள்.

எதிலும் வியப்பில்லை.

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com