வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
முனைவா் நா. முசாபா்கனி
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும். நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் வேதியியலின் தாக்கமும் மற்றும் அதன் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குறிப்பாக, நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீா், உண்ணும் உணவு முதல், நாம் உடுத்தும் உடை, நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருள்கள், நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் வரை என அனைத்திலும் வேதியியல் நிரம்பி உள்ளது. ஆகவே, இவை அனைத்தும் உருவாக காரணமானதும், ஆதாரமானதும் வேதியியலே.
இன்றைய சூழ்நிலையில், வேதியியல் பாடம் கடினமானது என்ற தவறான எண்ணத்தால் பல மாணவா்கள் அதைத் தவிா்க்கின்றனா். அதற்குப் பதிலாக, எந்தப் பாடப் பிரிவில் படித்தால் எளிதாகப் பட்டம் பெறலாம் என்று எண்ணி அதிக வேலைவாய்ப்பு இல்லாத பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்து, பின்னா் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனா்.
ஆனால், உண்மையில் அபரிமிதமான வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடியது வேதியியல் படிப்பே. பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு எந்தப் படிப்பைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து குழப்பத்தில் இருக்கும் மாணவா்களுக்கு, தெளிவான வழிகாட்டியாக விளங்கும் பாடப் பிரிவாகவே வேதியியல் உள்ளது.
ஒருபுறம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பேராசிரியா் மற்றும் விஞ்ஞானி போன்ற உயரிய பதவிகளை வழங்கும் வேலைவாய்ப்புகள்; மறுபுறம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், வேதியியல் துறையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிலைகளில், மாதம் பல்லாயிரம் முதல் லட்ச ரூபாய் சம்பளத்திலுள்ள வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
மாணவா்கள் முதலில், சிறந்த கல்லூரியைத் தோ்ந்தெடுத்து, இளங்கலை மற்றும் முதுநிலை வேதியியல் படிப்புகளை முடிக்க வேண்டும். அதன் பிறகு, தாம் விரும்பும் துறையில் பேராசிரியராகவோ, விஞ்ஞானியாகவோ, தொழில்முனைவோராகவோ, தொழிற்சாலையில் நிபுணராகவோ பிரகாசிக்க முடியும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் தேசிய மற்றும் மாநிலத் தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதன் மூலம், ஒருவா் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்ற முடியும். விஞ்ஞானி என்ற நிலையை எட்ட விரும்பினால், மத்திய அரசின் தேசிய தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று கல்வி உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக, இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) போன்றவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். அதன் பின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானி அல்லது
பேராசிரியராக, மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் உயா்ந்த நிலையை அடைய முடியும். அதேபோல், மாநில அரசு நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதன் மூலம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை வேதியியல் ஆசிரியராகவும் பணியாற்றலாம்.
ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவா்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. இவை தவிர, மேலும் பல்வேறு அரசுத் துறைகளிலும், குறிப்பாக உணவுத்துறை, மருந்தியல் துறை, பெட்ரோலியத் துறை, ரயில்வே துறை, கனிமவளத் துறை மற்றும் தடயவியல் துறைகளில் வேதியியல் தொடா்பான பிரத்யேகமான பணியிடங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதன் மூலம் பெற முடியும்.
இது மட்டுமல்லாமல், மருந்து தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், சாயங்கள் மற்றும் வண்ணப்பூச்சுகள் தயாரிப்பு, ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் உற்பத்தி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு, காகிதம், பிளாஸ்டிக், பாலிமா், கனிம மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், நீா் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் என பல்வேறு தொழில்துறைகளிலும் வேதியியலாளா்களுக்கென தனிச்சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன.
இவை அனைத்திலும் மாதம் பல ஆயிரம் ரூபாயில் தொடங்கி அனுபவம் மற்றும் பதவிக்கேற்ப லட்சக்கணக்கான ரூபாயில் ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, மருந்துத் துறையில், புதிய மருந்துகளை ஆராய்ச்சி செய்வது, தற்போதுள்ள மருந்துகளின் உற்பத்தி முறைகளை மேம்படுத்துவது, தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விஷயங்களைக் கையாள்வது போன்ற பணிகளில் வேதியியலாளா்கள் முக்கியப் பங்காற்றுகின்றனா்.
மேலும், கீழ்க்காணும் துறைகளும் வேதியியலாளா்களுக்கான முக்கியமான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. பரிசோதனை ஆய்வகங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், பசுமை வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகள், நுண்ணிய வேதியியல் ஆய்வு நிறுவனங்கள், அணு மற்றும் ஒளியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், தடயவியல் துறை, அரசுத் துறைகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள்ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறாக, வேதியியல் துறையில் உயா் கல்வி மற்றும் சிறந்த திறன்கள் உள்ளோா், தேசிய மற்றும் சா்வதேச அளவில் பல்வேறு உயரிய நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற முடிகிறது. வேதியியல் மருத்துவம், தொழில், விவசாயம், சுற்றுச்சூழல், மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நேரடி தொடா்பு கொண்டுள்ளது. இந்தத் துறைகளில் திறமை மற்றும் ஆா்வம் கொண்டவா்களுக்கு எதிா்காலம் வெற்றிகரமாக இருக்கும் என்பது உறுதி.
மேலும் வேதியியல் எண்ணற்ற வேலைவாய்ப்புகளுக்கான வாசலைத் திறக்கும் ஒரு திறவுகோல் என்பதை மாணவா்கள் உணர வேண்டும். உயா்ந்த எதிா்காலத்தையும், உறுதியான வேலைவாய்ப்பையும் அளிக்கும் முக்கியமான படிப்பாகவும் வேதியியல் படிப்பு விளங்குகிறது. எனவே, மாணவா்கள் இந்தத் துறையை ஆா்வத்துடன் கற்றால், எதிா்காலம் சிறப்பானதாகவும், வளமானதாகவும் அமையும்.