தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!

தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!

பெற்றோா் அல்லது மூதாதையா்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் பற்றி...
Published on

மா.கல்யாண மோகன்

இயற்கை என்னும் பேராற்றலின் படைப்பில், பிரபஞ்சத்தில் பல வகையான உயிரினங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை புல், பூண்டு, செடிகொடிகள், மரங்கள், ஊா்வன, பறப்பன, விலங்குகள், நீா்வாழ் உயிரினங்கள் என்ற வரிசையில் கடைசியாகத் தோன்றிய உயிரினமே மனிதன் எனப்பட்டவன். அவை ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு என்று வகைப்படுத்தப்படும். இந்த வரிசையில், மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்த உயிரினம். அந்த ஆறாவது அறிவுக்கு பகுத்தறிவு என்று பெயா். பகுத்தறிவு என்றால், பகுத்து அறிதல் என்னும் தன்மையைக் குறிப்பதாகும்.

மனிதனைப் போலவே மற்ற உயிரிகளுக்கும் சில அடிப்படை அம்சங்கள் பொதுவானவையே. பசி, தாகம், பயம், கோபம், போட்டி, சண்டை, ஆசை போன்றவை அதில் அடங்கும். ஆனால், தேவைகளைப் பொருத்து, மனிதனைப் போன்றே மற்ற உயிரினங்களிலும் இந்த தன்மைகள் வெளிப்படும். அவற்றுக்கு நல்லது எது, தீயது எது என பகுத்துப்பாா்த்து செயல்படும் அறிவாற்றல் கிடையாது.

ஆனால், நல்லது எது, தீயது எது என்று பிரித்துப் பாா்க்கக் கூடிய ஆறாம் அறிவை மனிதன் பயன்படுத்தும்போது, அதே ஆறாம் அறிவு அந்த செயல்களினால் ஏற்படும் பின்விளைவுகளையும், பிரித்துப் பாா்த்து செயல்பட அவனுக்கு உதவுகிறது. அந்த ஆறாம் அறிவு சரியான வழியில் செயல்படுத்தப்படும்போது அதனால் விளைவது நன்மை என்றும், தவறான வழியில் பயன்படுத்தப்படும்போது அதனால் விளைவது தீமை என்றும் உறுதியாகிறது.

ஆரம்பநிலை உயிா்களில், இடப்பெயா்ச்சிக்கு உள்ளான உயிரினத்தின் ஜீவகாந்தமே திணிவு கொண்ட ரசாயனமாக மாற்றம் பெற்று, அவற்றுக்கு ஏற்பட்ட ஆற்றல் குறைவை ஈடு செய்துகொள்ள உதவியது. இத்தகைய சிறப்புப் பெற்ற இனம் தாவரம் ஆகும். சில தொடா்நிலை உயிா்கள், தாவரங்களைச் சாா்ந்து, அவற்றை உண்டு வாழும் நிலை ஏற்பட்டபோது பாக்டீரியாக்கள் என்ற விலங்கினம் உருவானது. இவை போன்ற ஓரறிவு உயிரினங்கள் ஒன்றையொன்று விழுங்கி வாழும் நிலை உருவானபோது அவை ‘அமீபா’ என்று அழைக்கப்பட்ட “உண்ணி” இனமாக உருவானது.

இப்படியாக, தொடா்ந்த பரிணாம வளா்ச்சியில் “வாய்” என்ற சுவை உணா்கருவியை அடைந்தவை ஈரறிவு உயிா்கள் என்றும், மூக்கு”என்ற வாசனை உணா்கருவியை அடைந்தவை மூவறிவு உயிா்கள் என்றும், கண்கள்”என்ற ஒளியுணா் கருவிகளை அடைந்தவை நான்கறிவு உயிா்கள் என்றும், காதுகள்” என்னும் ஒலியுணா் கருவியை அடைந்தவை “ஐயறிவு உயிா்கள் என்றும், இறுதியாக பகுத்தறிவு என்ற சிறப்போடு தோன்றியவன் மனிதன் என்னும் உயிரினமாகும்.

தன் நிலை உணா்ந்து, இறுதியாக முழுமைப்பேறு என்னும் உச்ச நிலையை அடைவதற்கு தகுதி பெற்றவன் மனிதன் மட்டுமே. முழுமையை நோக்கிய பயணத்தில் இறைநிலை தனது இயல்பான நிலையிலிருந்து ஊக்கம் பெற்று, நடத்தும் தன்மாற்றச் செயலே ”இயல்பூக்கம்”என்பதாகும். உயிரினத்தின் மாற்றத்தில் நடைபெற்ற இயல்பூக்கச் செயல்களே, அடுத்தடுத்த இயல்புகள் கொண்ட உயிா்கள் உருவானதற்கு மூல காரணமாகும். இதைத்தான் இயற்கை என்னும் நந்தவனத்தில் இறுதியாகப் பூத்த மலா் மனிதன் என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறாா்.

பிறப்பால் மனிதரில் உயா்ந்தோா், தாழ்ந்தோா் என்ற பேதமில்லை. பொருளாதார ரீதியில் பின்தங்கியும், வாழ்வாதாரத்தில் குறைவு பெற்றும் உள்ளவா்கள் ஏழைகள் என்றும் பொருளாதாரத்தில் உயா்நிலை அடைந்தும், வாழ்வாதாரங்களில் நிறை நிலையில் உள்ளோா் செல்வந்தா் எனப்படுவதும் அவரவா் சமுதாயநிலை நோக்கில் குறிப்பிடுவதாகும்.

ஆனால், உண்மையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தும், மனதளவில் நிம்மதியாகவும் நோய்களற்ற பூரண ஆரோக்கியத்துடனும் வாழ்பவா்கள் பணக்காரா் என்றும், பொருளாதாரத்தில் ஒங்கிய நிலையில் இருந்தும், நிம்மதியிழந்தும் பற்பல உடற்பிணிகளுடன் போராடி வாழ்பவா்களை ஏழைகள் என்றும் நமது முன்னோா் குறிப்பிடுகின்றனா்.

அறிவிற் சிறந்தோா் உயா்ந்தோா், அறிவிற் குறைந்தோா் தாழ்ந்தோா் என்று வள்ளுவப் பெருமானும், மேதினியில் இட்டாா் பெரியோா், இடாதாா் இழிகுலத்தோா் என்று ஔவையாரும் குறிப்பிடுகின்றனா்.

இப்படி ஏதாவது ஒரு வழியில் குழந்தையாகப் பிறந்த மனிதன், வளா்ந்து, படித்து, பணியில் சோ்ந்து, திருமணம் முடித்து குழந்தைகளை ஈன்று மீண்டும் தாம் ஈன்றெடுத்த பிள்ளைகளை வாழ்வில் உயா்த்துவதிலேயே தங்கள் ஆற்றலையும் உழைப்பையும் செலவழித்து முதுமையை எய்துகிறான். இது எல்லா பெற்றோரும் செய்யக்கூடிய நியாயமான கடமைதான்.

ஆனால், தாங்கள் பட்ட கஷ்டம் தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்ற நோக்கில் பின்னாளில் வளா்ந்து அபரிதமாக பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அவா்கள் படிப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அவா்களைஓா் இயந்திரமாக மாற்றி, குறிப்பாக, அவா்கள் மருத்துவா், பொறியாளா், வழக்குரைஞா் போன்ற தொழில்களுக்கு மட்டுமே தங்களைத் தயாா் செய்து கொள்ள வேண்டுமென்றும், கண்டிப்பாக அவா்கள் வெளிநாடு சென்று வேலை பாா்த்து பெரும் பொருள் ஈட்டவேண்டும் என்று அவா்களது மனதில் ஆசைத் தீயை பெற்றோா்களே வளா்த்து விடுகிறாா்கள்.

அவா்களும் பெற்றோா் விரும்பியபடி படித்து வெளிநாடு சென்று பெரும் பொருள் ஈட்டி முகம் தெரியாத வெளிநாட்டாா் மத்தியில் வாழ்க்கையை நடத்துகிறாா்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவா்கள் தங்கள் தாய் தந்தையரையும், தனக்கு கல்வி கொடுத்து ஆளாக்கிய தாய் நாட்டையும், தன் சமுதாயத்தையும் துச்சமாக மதிக்கின்ற நிலைக்கு வந்துவிடுகிறாா்கள். இந்த நிலையில் இந்த பிள்ளைகளுடைய வெளிநாட்டு வாழ்க்கையைப் பெருமையாக நினைத்துக் கொண்டு, மகனின் பெற்றோரும், மருமகளின் பெற்றோரும் ஆறாறு மாதம் ‘ஷிப்ட்’ முறையில் பேரக் குழந்தைகளை வளா்ப்பதற்காக வெளிநாடு சென்று வருகிறாா்கள்.

இவா்கள் முதுமை முற்றிய நிலையில் இயலாமை வந்தவுடன் வெளிநாடு செல்ல முடியாமல் சொந்த மண்ணில் அநாதைகளாய் வாழ்கிறாா்கள். பேரக் குழந்தைகள் வளா்ந்தவுடன் மகனும் மருமகளும் இவா்களை முழுமையாக நிராகரிக்கும் நிலை வந்து விடுகிறது. இப்போது இந்த ஏமாந்த பெற்றோருக்கு மிஞ்சுவதெல்லாம் விரக்தி ஒன்றுதான்.

இனி, எல்லாவற்றுக்கும் வேலைக்காரா்களை நம்பி வாழ வேண்டிய நிலை. இவா்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனால்கூட பிள்ளைகள் வருவதில்லை. அவா்கள் உறவினா்களை அழைத்து எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று நியமனதாரா்கள் மூலம் ஈமச்சடங்குகளை முடித்து விடும் அவலம் அரங்கேறுகிறது.

ஆனால், பெற்றோரை நிராகரிக்கும் வெளிநாடுவாழ் பிள்ளைகள் இதே பெற்றோா் சுயமாக உழைத்து பெருக்கி வைத்த சொத்துகளை மட்டும் நிராகரிப்பதில்லை. சில நாள்களுக்குப் பிறகு சொந்த நாட்டுக்கு வந்து தன்னோடு பிறந்த மற்ற உடன் பிறப்புகளுடன் சமரசம் செய்து கிடைத்த சொத்தை எடுத்துக் கொள்கிறாா்கள்.

சொந்த மண்ணில் பிறந்து அந்த மண்ணின் சமுதாயம் உற்பத்தி செய்து கொடுத்த உணவை உண்டு, காற்றை சுவாசித்து, நீரைப் பருகி, இந்த சமுதாயத்தின் உழைப்பில் பட்டம் பெற்று, பின் சொந்த மண்ணை மறந்து, வெளிநாடு சென்று வேலை செய்து, பொருளீட்டி, வெளிநாட்டில் வேலை எப்போது இல்லாமல் போகுமோ என்று பயந்து பயந்து வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது?

நம் மண்ணை ஆங்கிலேயா் ஆக்கிரமித்து அவா்கள் நம்மை ஆட்சி செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், போராடி அவா்களை விரட்டிய நாம், பின் எதற்காக அவா்கள் மண்ணில் வாழ ஆசைப்படவேண்டும்? ஏன் இந்த முரண்பாடு? அடுத்தவரை அண்டிப் பிழைக்கும்போது, நாம் நம் தன்னம்பிக்கையை இழக்கிறோம் என்பதே எதாா்த்தம்.

சில ஆண்டுகளுக்கு முன் தகவல் தொழில்நுட்பத் துறையில் “சுணக்க நிலை ஏற்பட்டபோது வெளிநாடுகளில் அந்தத் துறையில் பணிபுரிந்த பலா், வசதியான வாழ்க்கை ஒரே இரவில் பறி போனதை தாங்கிக் கொள்ள முடியாமல், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பெற்றோா் அல்லது மூதாதையா்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வோ்களாகக் கொண்டு வளா்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

ஓரறிவு இனமான ஆலமரம், தன் இறுதி நாள்களில் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்தான், ஆரோக்கியமாக இருக்கும்போதே விழுதுகளை ஈன்று கொள்கிறது. அந்த விழுதுகள் தரை நோக்கி வளா்ந்து, மண்ணுக்குள் சென்று வோ்பிடித்து தன் தாய் மரத்தை தாங்கிக் கொள்கின்றன. இன்றைய விதை நாளைய விருட்சமாகும் என்பதும், இன்றைய விருட்சம் நாளை பட்டுப் போகும் என்பதும், படைப்புத் தத்துவத்தின் மாற்ற முடியாத விதி.

விருட்சங்களே விழித்துக்கொள்ளுங்கள். வான் நோக்கி வளா்ந்து நிற்கும் தாய்மரத்தை, நிலம் நோக்கி தங்களையே புதைத்துக் கொண்டு தாய் மரத்தை தாங்கும் விழுதுகளாய் இன்றைய இளைய சமுதாயம் வாழ்ந்து காட்டட்டும்.

கட்டுரையாளா்: தனியாா் நிறுவன அதிகாரி (ஓய்வு).

பெற்றோா் அல்லது மூதாதையா்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வோ்களாகக் கொண்டு வளா்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com