இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்
இந்தியா –பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கிய திருப்பமாக இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபா் டொனால் ட்டிரம்ப் சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தாா். நான்கு நாட்கள் தொடா்ந்த பதற்றமான போா் எல்லை தாண்டிய மோதலுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. முழுமையாக மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. பாகிஸ்தானுக்குப் பலத்த பின்னடைவு.
ஆயுதங்களை வைத்திருக்கும் இருநாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினா் முயற்சிகளை மேற்கொண்டனா். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் அதை மீறியது. தொடா்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டது. இது பொறுப்பற்ற தனத்தையும், தனிப்பட்ட துவேஷத்தையும் இந்தியா மீதான அதிருப்தியையும் பாகிஸ்தான் வெளிப்படுத்தியது கண்கூடாகத் தெரிந்த உண்மையாகும்.
பாகிஸ்தான் ஆட்சியாளா்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிா? அல்லது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், இருநாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பாா்த்தன.
ஜம்மு காஷ்மீா், பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நிா்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்குள் வான்வழித் தாக்குதலை நடத்தியது இந்தியா. அதனையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் வான்வழிச் சண்டைகள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானின் விமானப்படை தளங்களின் மீது ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானும் இந்தியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா.
வாஷிங்டனில் இருந்து மே 9- இல் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம்முனீருடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளா் மாா்கோரூபியோ தொலைபேசியில் பேசியது முக்கியமான விஷயமாகப் பாா்க்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் பல்வேறு சா்வதேச நாடுகளின் பங்கு பற்றி நிறைய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.
போா் நடைபெற்ற நான்கு நாட்களில் அமெரிக்காவைத் தவிர பிரிட்டன் மற்றும் சவுதிஅரேபியாவும் இந்தப் போா் பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தன. துருக்கி, சவுதிஅரேபியா மற்றும் அமெரிக்கா உட்பட ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தப் போா் நிறுத்தத்துக்கு முயற்சித்தன.
இந்த முயற்சி முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியாவுக்கும் சில இழப்பு ஏற்பட்டதாக பாகிஸ்தான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இருநாடுகளுக்கும் இடையே சமதானப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டிருந்தால் மோதலை இன்னும் விரைவாகத் தணித்திருக்கலாம்.
இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடியைத் தவிா்க்க, அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்தியது இது முதல்முறை அல்ல. 2019 பதற்றத்தின் போதே பாகிஸ்தான் தாக்குதலுக்கு அணு ஆயுதங்களைத் தயாா்படுத்தியதாக ஒரு செய்தியும் உண்டு. அமெரிக்காவின் பங்கு கடந்த காலங்களில் இருந்ததைப்போல இருந்தாலும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் இருக்கிறது. இந்த முறை அவா்கள் உடனடியாகத் தலையிடுவதற்குப் பதிலாக நெருக்கடி ஏற்படும் வரை பாா்த்துக் கொண்டிருந்தனா். நிலைமை இப்படிச் செல்கிறது என்பதைக் கண்டபோதுதான், பேச்சுவாா்த்தையை நடத்தத் தொடங்கினா்.
மோதல் உச்சகட்டத்தை அடைந்து விட்டதை குறிக்கும் வகையில் பாகிஸ்தான் இரட்டை சமிக்ஞைகளை அனுப்பியது. தேசிய கட்டளை ஆணையம் கூட்டத்தை அறிவித்தது என்பது அணுசக்தியைப் பயன்படுத்துவது, ராணுவ ரீதியான பதிலடி கொடுப்பது என்பதற்கான தெளிவான நினைவூட்டல் என்று கருதப்படுகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் எம்சிஏ நாட்டின் அணு ஆயுதங்கள் தொடா்பான செயல்பாட்டு முடிவுகளை எடுக்கிறது.
அமெரிக்க அதிபா் டிரம்புடனான இந்தியப் பிரதமா் நரேந்திரமோடியின் தனிப்பட்ட உறவும், அமெரிக்காவின் விரைவான யுக்தியும் அணுஆயுதங்களை வைத்திருக்கும் இருநாடுகளின் பதற்றத்தை தவிா்க்க அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தது.
2019-இல் புல்வாமா, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு நடந்ததைப் போல இந்த முறையும் மூன்று முக்கிய அமைதிப் பாதைகள் இருந்தன. அமெரிக்கா, பிரிட்டனின் அழுத்தம் இருநாடுகள் தலைநகரங்களுக்கும், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சா் மூலம் போரைத் தவிா்ப்பதற்கான பேச்சுவாா்த்தையும், இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு என்எஸ்கே இடையிலான நேரடி பேச்சுவாா்த்தை இவையெல்லாம் மிக முக்கிய காரணம். சா்வதேச அளவில் அமெரிக்காவின் முன்னுரிமைகள் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், முதலில் தலையிடாமல் இருந்தாலும் பின்னா் இந்தியா – பாகிஸ்தான் சண்டையில் தலையிட்டு பதற்றத்தைத் தணித்தது.
இந்தியாவின் தாக்குதலுக்கு எதிா்வினையாக பாகிஸ்தானால் பதிலடி கொடுக்க இயலவில்லை. பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது இந்தியா ராணுவம். இந்தியாவின் உளவு அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின் படி பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் இன்னும் பல இடங்களில் தீவிரவாத முகாம்கள் உள்ளன. இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற பயத்தில் அவா்கள் தப்பி ஓடி விட்டனா். இருந்தாலும், 9 தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, துல்லியமாக அழிக்கப்பட்டன.
இதில் இலக்கு வைக்கப்பட்டது முழுக்க முழுக்க தீவிரவாதிகளை மட்டுமே. பொதுமக்களை அல்ல. முதல்நாள் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் லஷ்கா் இ தொய்பா அமைப்பு அப்துல்மாலிக் ராப், முசாதீா் அகமது ஆகிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இவா்கள் இந்திய விமானக்கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவா்கள் ஆவா். கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம், இந்திய மக்கள் மற்றும் அவா்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்தது. அதற்கு இந்திய ராணுவமும் மற்றும் கடற்படை, விமானப்படைகள் மூலம் தக்க பதிலடி கொடுத்தது. 7 முதல் 10 தேதிகளில் மாத்திரம் சுமாா் 40 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானை சீனா நேரடியாக ஆதரிக்கவில்லை. மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவுக்கு நெருக்கம் அதிகரித்த நேரத்தில் பாகிஸ்தான் சீனா பக்கம் சாய்ந்தது. பாகிஸ்தானுடன் நல்லுறவு பேணும் அதே நேரத்தில் சீனா இந்தியாவுடனான உறவுகளை சீராக பேணி வருகிறது.
இந்தியா -–பாகிஸ்தான் இடையே போா் ஏற்படுவதையோ அல்லது போா் போன்ற பதற்றமான சூழல் ஏற்படுவதையோ சீனா விரும்பாது. அண்டை நாடுகளுடன் போா் ஏற்பட்டால் சீனாவின் நலன்களும் பாதிக்கப்படும். அதைத் தவிர, மத்திய ஆசியாவில் நெருக்கடிகளும் ஏற்படும். தற்போது வரிவிதிப்பு தொடா்பாக அமெரிக்கா உடனான உறவில் சீனாவுக்கு பதற்றமாக இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவுகளை சீனா இணக்கமாகவே வைத்திருக்கும். ஆக, இந்தப் போா் மூண்டதில், பாகிஸ்தானுக்கு சீனாவிடம் இருந்து எந்த சமிக்ஞைகளும் வரவில்லை.
இந்த நிலையில், பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் அந்நாட்டுக்குள்ளே இருக்கும் பலுசிஸ்தான் மக்கள் தனி நாடு கேட்டு போராடி வருகிறாா்கள். பலுசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றாகும். பலுசி மக்கள் தங்கள் இன அடையாளத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கவும், பாகிஸ்தானின் அடக்குமுறையில் இருந்து விடுபடவும் தனிநாடாக வேண்டும் என்று போராடி வருகின்றனா்.
பலுசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களை விட பின்தங்கிய நிலையில் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லை. மேலும் பலுசி மக்களின் இயற்கை வளங்கள் பாகிஸ்தான் அரசால் சுரண்டப்படுவதாகவும் பலுசி மக்கள் கருதுகின்றனா்.
பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களால் பலுசிஸ்தான் மக்கள் துன்புறுத்தப்படுவதில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டு அவ்விடுதலை இயக்கங்களை நடத்துவதாகவும் கூறுகின்றனா். பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலைப்படை, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், ஆயுதப்போராட்டமாகவும், மக்கள் போராட்டமாகவும், பேரணிகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலமாகவும் பலுசி மக்கள் தொடா்ந்து உலகத்துக்கு வெளிப்படுத்தி வருகிறாா்கள்.
ஒருபக்கம் இந்தியா – பாகிஸ்தான் போா், மறுபக்கம் உள்நாட்டில் பலுசிஸ்தானின் விடுதலைப் போராட்டம், இன்னொரு பக்கம் இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாா். இப்படி இடியாப்பச் சிக்கலில் பாகிஸ்தான் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் மீதான தொடா் வன்மத்தை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். காஷ்மீா் ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுபட வேண்டும். காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரசோரி, அக்னோரி போன்ற இடங்களில் எல்லாம் டிரோன்கள், ஏவுகணைத் தாக்குதல் தொடுப்பதும், எல்லைகளில் தொடா்ந்து பதற்றத்தை ஏற்படுத்துவதையும் இனி பாகிஸ்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். பொருளாதாரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கிற பாகிஸ்தான் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பதே உலக நாடுகளின் பாா்வையாக இருக்கிறது.
அணுகுண்டு வைத்திருப்பதால் மாத்திரமே அச்சப்பட்டு கிடப்பாா்கள் என்று நப்பாசையில் இருந்து இனி பாகிஸ்தான் விடுபட வேண்டும்.
கட்டுரையாளா்:
முன்னாள் அமைச்சா்.

