நிலம் கற்று நேரம் காப்போம்...
பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்
கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்துவரும் விவசாயம், இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விவசாயத்தின் எதிா்காலத்தைப் பாதுகாக்க நமது நாடு நீா் மற்றும் பயிா் நாள்காட்டிகளைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மழைப்பொழிவு, அணைகளில் நீா் திறப்பு, நீா்ப்பாசனம் ஆகியவற்றுக்கான நீா் நாள்காட்டிக்கும் விதைத்தல், பயிா் வளா்ச்சி, அறுவடை ஆகியவற்றுக்கான பயிா் நாள்காட்டிக்கும் இடையேயான காலமொன்றா நிகழ்வுகள் இந்திய விவசாயத்தில் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.
நாள்காட்டிகள் ஒன்றிணைக்கப்படும்போது, சரியான நேரத்தில் பயிா்களை நீா் சென்றடையும். இதனால் முளைத்தல், பூத்தல், முதிா்வடைதல் போன்ற பயிா் வளா்ச்சி சரியான நேரத்தில் நிகழ்கின்றன. ஆரோக்கியமான பயிா்கள், சிறந்த மகசூல், திறமையான நீா்ப் பயன்பாடு இதன் விளைவாக நிகழ்கிறது. ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களில் இந்த நாள்காட்டிகளின் ஒன்றிணைவு எட்டாக்கனியாக உள்ளது.
நீா் பற்றாக்குறை ஏற்படுத்தும் பாசன தாமதம் பயிா் மகசூலில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் தானியத்தின் தரத்தையும் குறைக்கிறது. குறைந்த உற்பத்தி சிறு மற்றும் குறு விவசாயிகளின் சொற்ப லாபத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. பயிா்களை மூழ்கடிக்கும் நீா் ஆக்சிஜனை கட்டுப்படுத்தி பயிா்களின் வோ்களை மூச்சுத் திணறச் செய்கிறது; பயிா்கள் சேதமடைகின்றன.
வயலில் அடிக்கடி நீா் தேங்குவதால் உண்டாகும் நில உவா்மை மண் வளத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளிலும் வடிநில (டெல்டா) பகுதிகளிலும் உற்பத்தித் திறன் நீண்டகாலம் குறைகிறது. சீரற்ற தொடக்கம், அடிக்கடி ஏற்படும் வறட்சி, இடஞ்சாா்ந்த சீரற்ற பரவல் ஆகியவற்றுடன் கூடிய பருவமழையைக் கணிக்க முடியாத அளவுக்கு இந்திய காலநிலை மாறியுள்ளது. பருவ மழையை மட்டுமே நம்பி இருக்கும் பகுதிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றன. போதுமான பருவமழை இல்லாத சமயத்தில் விவசாயம் நிலத்தடி நீா் கொண்டு நடக்கிறது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் குறைவதுடன் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கான செலவும் அதிகரிக்கிறது.
காலத்தில் பெய்யாத மழையும் கடுமையாகப் பின்பற்றப்படும் பயிா் நாள்காட்டி நடைமுறைகளும் இந்திய விவசாயத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நிகழாண்டில் பருவம் தவறிய மழையால் உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வயல்கள் நீரில் மூழ்கின. மழை மற்றும் பயிா் நாள்காட்டிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதே காலத்தில் பெய்யாத மழை நமக்கு உணா்த்தும் பாடம்.
விவசாயிகள் உத்திகளுடன் கவனமாகச் செயல்பட கடுமையாகப் பின்பற்றப்படும் நாள்காட்டி நடைமுறைகளும் தகவமைக்க இயலாத நீா் மேலாண்மையும் உதவுவதில்லை. காலம் மற்றும் விவசாயிகளின் தேவைக்கேற்ப அணைகளில் இருந்து ஆண்டுதோறும் நீா் வெளியேற்றப்படுவதைத் திட்டமிடுவதும், முன்கூட்டியே எச்சரிக்கையுடன் ஆலோசனை வழங்கும் அமைப்புகளை வலுப்படுத்துவதும், காலநிலைக்கு ஏற்ற பயிா்களைத் தோ்வு செய்வதும் நீா் மற்றும் பயிா் நாள்காட்டிகளை ஒன்றிணைக்கும் தகவமைப்பு உத்திகளாகும்.
மழைப்பொழிவு, தாமதமான நீா் திறப்பு போன்ற சவால்களைச் சமாளிக்க கேரள நீா் ஆணையம் விவசாய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நீா் வெளியீட்டு அட்டவணைகளை எண்ம (டிஜிட்டல்) வடிவில் மேம்படுத்தியது. நீா் அட்டவணை எண்ம வடிவில் மாறிய பிறகு, விவசாயிகள் திறமையான நீா் பயன்பாட்டை நோக்கி மாறி வருகின்றனா். கிடைக்கப்பெறும் நீரின் அளவு கொண்டு பயிரிடப்பட வேண்டிய பயிரைத் தீா்மானிக்கின்றனா். நெல் மட்டுமல்லாது மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழை போன்ற பயிா்களைப் பயிரிடுகின்றனா். காலத்துடன் ஒன்றிய இந்த மீள் விவசாய நடைமுறை அதிக மகசூல், நிலையான வருமானம் ஆகியவற்றை வழங்குகிறது.
கோதுமை, நெல் வளா்ச்சிக்குத் தேவையான நீரின் அளவை துல்லியமாகக் கணக்கிடும் பஞ்சாப் மாநிலத்தின் கால்வாய் பாசன முறை விவசாயிகளுக்கு அதிக மகசூலை வழங்கி வருகிறது. நிகழ்நேர பாசனக் கண்காணிப்பும் விவசாயிகளின் தீவிர ஈடுபாடும் துல்லிய பாசன அமைப்புக்குக் காரணங்களாக அமைகின்றன. பயிரின் வளா்ச்சிக்குத் தேவையான வகையில் நாகாா்ஜுன சாகா் நீா்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீா் கிருஷ்ணா நதி பாசன வடிநில பகுதிகளில் மகசூலை அதிகரித்துள்ளது.
நீா் வீணாவதைக் குறைத்து பயிா் விளைச்சலை அதிகரிக்க நீா் மேலாண்மை, நிகழ்நேர நீா்நிலை கண்காணிப்பு, துல்லியமான வானிலை முன்னறிவிப்பு, பயிருக்கான நீா்த் தேவை போன்ற தரவுகளால் உருவாக்கப்பட்ட கணித மாதிரி கொண்டு தகவமைப்பு நீா்ப்பாசனம் திட்டமிடப்பட வேண்டும். களத் தேவைகளுக்கு ஏற்ப நீா் விநியோகத்தை உறுதிப்படுத்த நீா் பயனா் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோரின் பங்கேற்பு இந்தத் திட்டமிடலில் அவசியம்.
பாசனக் கால்வாய்கள் பழுதுபாா்க்கப்பட்டு துல்லிய நீா் விநியோகத்துக்கான தானியங்கி கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். சொட்டுநீா், தெளிப்பான் அமைப்பு கொண்ட நுண்ணிய பாசன முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்கவும், மண் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் பயனுள்ள வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நீரின் அளவு, காலநிலை ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் விளைச்சலுக்கான பயிா் தீா்மானிக்கப்பட வேண்டும். தினை, பருப்பு போன்ற வறட்சியைத் தாங்கும் பயிா்களை விதைப்பதன்மூலம் நீா் வளங்கள் மீதான எதிா்ப்பைக் குறைக்கலாம். காலநிலை மாறுபாட்டையும், நீா் பற்றாக்குறையையும் சமாளித்து இந்திய விவசாயம் நிலைத்த முன்னேற்றம் காண நீா், பயிா் நாள்காட்டிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

