முதியோர் நலன் நாடுவோம் !

பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை, குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருவதைப் பற்றி...
முதியோர் நலன் நாடுவோம் !
முதியோர் நலன் நாடுவோம் !
Published on
Updated on
2 min read

நம் நாட்டில் தற்போது 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி ஆகும். 2050-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35 கோடியாக உயரக்கூடும். உலக அளவில் 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் தற்போதைய சராசரி ஆயுள் 83 ஆண்டுகளாக உள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

ரஷியாவின் வால்கோகிரேட் மாநில மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர், எதிர்காலத்தில் மனிதர்கள் 150 ஆண்டுகள்வரைகூட வாழும் நிலை ஏற்படும் என்றும், அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 20 முதல் 40 வயது வரை வயது உள்ள இன்றைய இளைய தலைமுறையினர் 150 ஆண்டுகள்வரை வாழும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

நம் நாட்டில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால், முதியோர் தனியே வசிக்கும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதுடன் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, நம் நாட்டில் 2023-ஆம் ஆண்டு முதியோர்களுக்கு எதிராக 62,41,569 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன. நம் நாட்டில் முதியோருக்கு எதிரான குற்றச் செயல்கள் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நம் நாட்டில், குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருகிறது. வாரிசுகளில் சிலர் தங்கள் பெற்றோரின் சொத்துகளை தந்திரமாக தங்களுக்கு சட்டப்படி உரியதாகச் செய்து கொண்டு பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோரை ஆதரவற்ற நிலையில் விட்டுவிடுவது நீதிமன்றங்களின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.

இது தொடர்பாக வஞ்சிக்கப்பட்ட பெற்றோருக்கு அவர்களின் சொத்துகளை பிள்ளைகளிடமிருந்து பறிமுதல் செய்து மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்கும் வகையில் நீதிமன்றங்கள் அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து வருகின்றன.

நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதங்கள்வரை சிறைத் தண்டனை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், பெரும் எண்ணிக்கையிலான முதியவர்கள் தங்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

புத்தர் வலியுறுத்திய மனித குலத்துக்கான ஏழு கடமைகளில், "வாழ்நாள் முழுவதும் நான் என் பெற்றோரைப் பேணுவேனாக' என்பதுதான் முதல் கடமை. இதை இந்தக் கால இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ வசதி, நிதியுதவி போன்றவை அவர்களின் இல்லத்திலேயே கிடைப்பதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சேகரிப்பதுடன், ஒவ்வொரு உள்ளாட்சியின் வருவாயில் குறைந்தபட்சம் 10% மூத்த குடிமக்களுக்காக செலவிட வேண்டும் என்றும் தீர்மானிக்கவுள்ளது.

மூத்த குடிமக்களின் நலனுக்காக மூத்த குடிமக்கள் ஆணையம் ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. மகாராஷ்டிர அரசு முதியோர் தாங்கள் வசிப்பதற்காக வீடுகள் வாங்கும் நிலையில் அதற்கான முத்திரைத்தாள் வாங்கும் செலவைக் குறைத்துள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கு கடந்த காலத்தில் இக்கால மூத்த குடிமக்கள் ஆற்றிய பணிகளும் காரணம் என்றால் அது மிகையல்ல. மூத்தகுடிமக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் இளைய தலைமுறையினர் பாராட்டுக்குரியவர்கள்.

ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நடத்துவோர், தொண்டு நிறுவனங்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. பதிவு செய்யப்பட்ட பல முதியோர் இல்லங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவித்தொகை ஏதும் கிடைக்காமல் உள்ளது.

அரசு நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு அரசின் நிதி உதவி, முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை, 75 வயதைக் கடந்த முதியோர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு, தமிழகத்தில் 70 வயதைக் கடந்த நிலையில் தனியாக வசிக்கும் முதியோரின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் "தாயுமானவர் திட்டம்' என முதியோர் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

ரயில்களில் பயணிக்கும் 60 வயதைக் கடந்த முதியோருக்கு பயணக் கட்டணத்தில் சலுகை, மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதியோர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை தாமதமின்றித் தருவது போன்ற முதியோர் நலன் நாடும் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையினர் நாளைய முதியவர்களாவர். இதை உணர்ந்து முதியோர் நலன் பேண அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்து முதியோர்களுக்கான சமூக அங்கீகாரத்தைத் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com