மாலுமி இல்லாத கப்பல்கள்!
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால், ஓராண்டாக துணைவேந்தர் பதவி 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நிலவும் மோதல் போக்குதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் முதன்மையானது. இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழைமையான பல்கலைக்கழ கங்களுள் ஒன்றாகும். லண்டன் பல்கலைக் கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
எனினும், இந்தப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கும் வழிமுறைக்கு உட்பட்டது. மருத்துவம்,பொறியியல் சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்டகாலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. அது இப்போது முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முக்கியமாக மூன்று பெரிய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மிகப் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை தற்போது துணைவேந்தர் இன்றி செயல்பட்டு வருகின்றன.
மிகப் பழைமையான சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த கௌரி கடந்த 2023-இல் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை அரசு இதுவரை நியமிக்கவில்லை. அதேபோல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக இருந்த ஜெ.குமார், கடந்த 2024-இல் பதவி விலகினார்; அங்கும் நிரப்பப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை நெறிப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த வேல்ராஜ், கடந்த ஜூலை மாதம் ஓய்வுபெற்றுவிட்டார். அந்த இடமும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு தேர்வுக் குழு அமைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. துணைவேந்தர் இல்லாத நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை ஒருங்கிணைப்பாளர் குழுவின் மூலம் தற்போது செயல்பட்டு வருகின்றன.
510 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்போது 210 பேராசியர்கள் மட்டுமே உள்ளனர். 1,140 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருந்த இடத்தில் இப்போது 420 பேர்தான் இருக்கின்றனர்; இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் எப்படியிருக்கும்? பெரும்பாலான அரசு கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு தான் இயங்குகின்றன. நிரந்தரப் பேராசிரியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
தமிழ்நாட்டின் இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது நமது உயர்கல்விதான். கல்வியில் நாளுக்கு நாள் எண்ணற்ற மாறுதல்கள் நடக்கின்றன. குறிப்பாக, 2020-இல் கரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வியின் கட்டமைப்பு பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
கல்வியில் தமிழகம் இதுவரை சந்தித்தி ராதஒரு இக்கட்டான நிலையை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் இருக்கும் 21 பல்கலைக்கழகங்களில், 12 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக் டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை கடந்த பல மாதங்களாக துணை வேந்தர்களே இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அளவில் உயர் கல்விக்கான வளர்ச்சி என்பது, தமிழ்நாட்டில்தான் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. அதை ஆளுநர், மாநில அரசுகளின் மோதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு சுல்விக்கும், முன்னேற்றத்துக்கும் நல்லதல்ல என்பதை முன்னாள் முதல்வர்களும், கல்வியாளர்களும் எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
உலக அளவில் கல்வியின் தன்னெழுச்சியான பயணம் புதிய பாதையை வகுத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான பன்னாட்டுப் பல்கலைக் கழகங்கள் பாடத் திட்டங்களை இன்றைய இயல்புக்கு ஏற்ற வகையில் மாற்றத் தொடங்கிவிட்டன. அடுத்த நூறு ஆண்டுகளைக் கணித்து அதற்கேற்ப படிப்புகளைக் கட்டமைக்கத் தொடங்கி விட்டன.
ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழகங்கள் முடங்கிக் கிடப்பதற்குக் காரணம் ஆளுநரும், மத்திய அரசும், தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கின்றன. இதற்கான தீர்வு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், மாணவர்களின் உயர் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் கவலையடைந்து உள்ளனர்.
ஒரு மாநில பல்கலைக்கழகத்தின் மொத்த அதிகாரமும் துணைவேந்தரிடம் குவிந்து கிடக்கின்றன. பாடத் திட்டங்களை உருவாக்குவது முதல் ஆராய்ச்சித் திட்டங்களை உருவாக்குவது வரை எல்லாமும் அவரால் தான் செய்யப்பட வேண்டும். துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியாது; இந்தத் தேருக்கு அவரே அச்சாணியாகும்.
ஆளுநருக்கும், மாநில அரசுக்குமான இந்த அரசியல் விளையாட்டில் வெற்றி பெறப் போவது யார் என்பது நீதிமன்றத்தில் இருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால், அப்பாவி பெற்றோரும், மாணவர்களும் மட்டுமே பாதிக்கப்படப் போகின்றனர். இதுவரை உச்சத்தில் இருந்த தமிழ்நாட்டுக் கல்வி பின்னடைவை நோக்கிப் போவதைத் தடுக்க முடியாது; இந்தியப் பல்கலைக்கழகங்கள் பத்தோடு பதினொன்றாக மாறப் போகின்றனவா?
நோக்கம் பல்கலைக்கழகங்களின் வெறும் பட்டம் வழங்குவது மட்டுமல்ல கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு நகர்த்திச் செல்வதும், இந்தியா இன்று பெற்றிருக்கிற வளர்ச்சிக்கு இந்தப் பல்கலைக்கழகங்களின் பங்கு மகத்தானது. இன்று பல்கலைக்கழகங்களின் தலைமைப் பொறுப்பே காலியாக இருப்பது எவ்வளவு வேதனையானது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், இவர்களை வழிநடத்த வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரே இல்லை என்பது எத்தனை பெரும் சோகம். இதற்குப் பதில் என்ன?
கோடி கோடியாகக் கொட்டிக்கொடுத்து துணைவேந்தர் பதவியைப் பிடிக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாகக் கூறுகின்றனர். கொட்டிக் கொடுத்தவர்களுக்குக் கல்வியையும், ஆராய்ச்சியையும் முன்னேற்றுவதே நோக்கமாக இருக்கமுடியும்?
சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த கௌரி நிதி முறைகேடு புகாரில் விசாரணைக்கு, ஊழல் தடுப்புத் துறை அனுமதி கேட்டபோது ஆளுநர் அதை ஏற்கவில்லை. ஆளுநரே பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் நடைமுறை அப்போது இருந்து வந்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதிலாக தமிழக அரசே நியமனம் செய்வது குறித்த சட்டம் 2022-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் இந்தப் பிரச்னை இருப்பதால் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தவிக்கின்றன.
பல்கலைக்கழகங்களுக்குப் போதிய நிதியை ஒதுக்க முடியாமல் அரசுகள் தடுமாறுகின்றன. இதனால், தேர்வு நடத்துவது, மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் தயாரிப்பது, பட்டமளிப்பு விழா நடத்துவது தாமதமாகின்றன. இதனால், புதிய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை.
நிகழாண்டுக்கான ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் முன்னணிக் கல்வி நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. முதல் 10 இந்திய நிறுவனங்களில் உள்ள 7 ஐஐடி-க்கள் உள்பட பெரும்பான்மையானவை தரவரிசையில் பின்தங்கியுள்ளன. சீனா, மலேசியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் கல்வி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஓர் அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சுல்வி உயர்வுக்குப் பாடுபட வேண்டும். கல்வி உயர்வே நாட்டின் உயர்வாகும்; கல்வி உயராமல் தேசமும், மக்களும் எழுந்து நிற்க முடியாது. அதுவே ஓர் அரசின் சோதனையும், சாதனையும் ஆகும்.
பலகல்வி அளிக்கும் பல்கலைக்கழகத்தைத் துணைவேந்தர் மூலம் நிர்வகிக்கலாம்: பெற்றோரும், மாணவர்களும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

