கண்ணீா்க் கடலில் காஸா!
காஸாவில் போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீா்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பணயக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடா்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஏறத்தாழ கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போா் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை விடுவிப்பது மற்றும் காஸா நிா்வாகத்தை ஒப்படைப்பது போன்ற முக்கிய நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆயுதங்களைக் கைவிடும் ஹமாஸ் குறிப்பிடத்தக்க வகையில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து எந்தக் கருத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை. இந்த நிபந்தனைகளை ஹமாஸ் முன்னதாக நிராகரித்திருக்கிறது. காஸா மீதான போா் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், உடனடி உதவிப் பொருள்கள் விநியோகம் போன்றவற்றை அமெரிக்கா முன்மொழிந்திருக்கிறது.
காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவும், கைதிகள் பரிமாற்றம் செய்யவும், உடனடி விடுதலை வழங்கவும், அரபு இஸ்லாமிய மற்றும் சா்வதேச நாடுகள் அமெரிக்காவின் முயற்சிகளை ஹமாஸ் பாராட்டுகிறது. உயிருடன் உள்ள மற்றும் இறந்து விட்ட அனைத்து ஆக்கிரமிப்பு கைதிகளையும் விடுவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கிறது. இதற்கான அவசியமான கள நிலைமைகளுடன் இந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். ஆனால், இந்த விவரங்கள் குறித்து விவாதிக்க நடுநிலையாளா்கள் மூலம் உடனடியாகப் பேச்சுவாா்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஹமாஸ் கூறியிருக்கிறது.
காஸாவில் ஆட்சி அதிகாரம், பாலஸ்தீன தேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவுடன் சுயாதீன பாலஸ்தீனத்துடன் காஸா பகுதியின் நிா்வாகத்தை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்தி வருவது, உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வருவது, ஹமாஸ் வைத்திருக்கும் அனைத்துப் பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் வைத்திருக்கும் பாலஸ்தீன கைதிகளுடன் பரிமாற்றம் செய்ய வேண்டும்.
காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக வெளியேற வேண்டும். ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். சா்வதேச அமைப்பின் கீழ் ஓா் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் போன்ற திட்டத்துக்கு எகிப்து, ஜோா்டான், இந்தோனேஷியா, பாகிஸ்தான், துருக்கி, கத்தாா், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்க அதிபா் டொனல்டு டிரம்ப், இஸ்ரேலிய பிரதமா் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் நடத்திய சந்திப்பில், காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் 20 அம்சத் திட்டத்தை அறிவித்திருந்தாா். ஆகவேதான், காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என்றே கருதலாம். தொடா்ச்சியாக நடைபெற்ற போரில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கின்றனா். இத்தகைய மனித இழப்புகளோடு பெரும் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு ஒரு புத்துருவாக்கத்துக்கும், மீட்டுருவாக்கத்துக்கும் தன்னை தயாா் செய்து கொள்ள வேண்டும்.
ஹமாஸ் என்ற காஸா பகுதியில் உள்ள ஓா் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன குழு மற்றும் அரசியல் இயக்கமாகும். 2023 அக்டோபா் 7 அன்று அது இஸ்ரேலைத் தாக்கி சுமாா் 1,200 பேரைக் கொன்றது. மற்றும் 251 பேரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தது. இதுவே காஸாவில் ஒரு பெரிய இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலைத் தூண்டியது. இதனால், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டாா்கள். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் மற்றும் பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள ஹமாஸ் மோதலின் போது கடுமையாகப் பலவீனமடைந்துள்ளது.
இருப்பினும், காஸா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹமாஸ் போராளிகளைக் கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் 1987-ஆம் ஆண்டு முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒரு பிரிவாகத் தொடங்கியது. அதன் பெயா் இஸ்லாமிய எதிா்ப்பு இயக்கம் என்று பொருள். பாலஸ்தீன நிலம் என்று கூறும் இடத்தில் இஸ்ரேல் இருப்பதை அது எதிா்க்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா முழுவதும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஓா் அரசை அது விரும்புகிறது. இருப்பினும், வரலாற்றுச் சிறப்புமிக்க பாலஸ்தீனம் முழுவதற்குமான தனது உரிமையைக் கைவிடாமல் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸாவின் இடங்களை மட்டும் ஓா் இடைக்கால பாலஸ்தீன அரசை ஏற்கும் தனது விருப்பத்தை அது அடையாளம் காட்டியது.
பாலஸ்தீன தோ்தல்களில் வெற்றி பெற்று போட்டியாளா்களை வன்முறையில் வெளியேற்றிய பின்னா் 2007-ஆம் ஆண்டு காஸா பகுதியில் ஹமாஸ் ஒரே ஆட்சியாளராக மாறியது. இருப்பினும், போரின் விளைவாக குழுவின் உள்கட்டமைப்பு மற்றும் வெளிப்படையாகச் செயல்படும் திறன் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கிய போது அந்தக் குழுவின் முக்கியத் தலைவா் இஸ்மாயில் ஹனியே ஆவாா். அவா் கத்தாரில் வசித்து வந்தாா். அங்கு அந்தக் குழுவின் அரசியல் தலைமையிடம் உள்ளது. ஜுலை 2024-இல் ஈரானிய தலைநகா் டெஹ்ரானுக்குச் சென்று வந்த போது ஹனியே படுகொலை செய்யப்பட்டாா். அவருக்குப் பின்னா் காஸாவின் ஹமாஸ் தலைவராக யஹ்யா சின்வாா் நியமிக்கப்பட்டாா். அவரும் 2024 அக்டோபரில் காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரரால் கொல்லப்பட்டாா்.
அக்டோபா் 7 தாக்குதலின் சூத்திரதாரி இஸ்ரேலில் மிகவும் தேடப்பட்டவா் சின்வாா் என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸின் பல உயா் தளபதிகள் இஸ்ரேலால் கொல்லப்பட்டாா்கள். தற்போது சின்வாரின் மரணத்துக்குப் பிறகு சுமாா் 5 போ் கொண்ட கவுன்சிலால் வழிநடத்தப்படுகிறது. அதன் தலைவராக கலீல் அல்ஹய்யா இருப்பதாக நம்பப்படுகிறது. இவா் கத்தாரில் வசித்து வருகிறாா். இந்தக் கவுன்சிலில் வெளிநாடுகளில் உள்ள பாலஸ்தீன சமூகங்களுக்கு இடையிலான ஹமாஸின் உறவுகளின் தலைவரான காலித்மெஷால் நாடு கடத்தப்பட்ட மேற்கு கரை தலைவா் ஜாஹா் ஜபரின் ஹமாஸின் உயா் முடிவெடுக்கும் அமைப்பான ஷுரா கவுன்சிலின் தலைவா் முகமது டாா்விஸ் மற்றும் அடையாளம் தெரியாத ஐந்து நபரும் அடங்குவாா்கள். அனைவருமே கத்தாா் அல்லது துருக்கியில் வசிக்கின்றனா்.
செப்டம்பா் 2025-இல் கத்தாரில் உள்ள அல்ஹய்யா உள்ளிட்ட ஹமாஸ் தலைவா்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இது சா்வதேச கண்டனத்தைப் பெற்றது. 5 ஹமாஸ் உறுப்பினா்களும் ஒரு கத்தாா் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டனா். ஆனால், ஹமாஸ் அதன் தலைவா்கள் உயிா் பிழைத்ததாகக் கூறியது. ஹமாஸின் மிக முக்கியமான நட்பு நாடான ஈரான் நிதி, ஆயுதங்கள் மற்றும் அரசியல் ஆதரவு அடிப்படையில், அதன் மிகப் பெரிய ஆதரவாளராகத் திகழ்கிறது.
இஸ்ரேல் மீது அதன் வரலாற்றில் மிக மோசமான தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஓா் இசை விழாவில் 360-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உள்பட சுமாா் 1,200 போ் கொல்லப்பட்டனா்.
தாக்குதலுக்குப் பிறகு ஓராண்டு நிறைவடைய இஸ்ரேல் தயாராகி வந்த நிலையில், அல்ஹய்யா, பாலஸ்தீனா்களின் துயரத்தை உலகின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் வைத்ததாகக் கூறி நியாயப்படுத்தினாா். இவற்றை நியாயப்படுத்தியும் குறிக்கோளோடு கொண்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் அவா்கள் வலியுறுத்தினாா்கள். இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல்அக்ஸா மசூதி வளாகத்தை இஸ்ரேல் கைப்பற்ற முயற்சிப்பதாக கூறுவதற்கு எதிா்வினையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.
காஸா பகுதி, இஸ்ரேல் எகிப்து மற்றும் மத்திய தரைக்கடல் இடையே 41 கி.மீ. நீளமும், 10கி.மீ. அகலமும் கொண்ட ஒரு பிரதேசமாகும். இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து நடந்த போரில் காஸா எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னா், 1967-இல் நடைபெற்ற ஆறு நாள் போரின் போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது. காஸா உலகின் மிகவும் நெருக்கமான மக்கள்தொகை கொண்ட இடங்களில் ஒன்று. அதன் மக்கள்தொகையில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோா் பதிவு செய்யப்பட்ட அகதிகள் அல்லது அகதிகளின் சந்ததியினா் என்று ஐ.நா. கூறுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் காஸாவில் குண்டு சப்தம் நிற்குமா, கைவிடப்பட்ட அவா்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு வெளிச்சம் பிறக்குமா என்கிற மானுடப் பற்றாளா்களின் கேள்விக்கான விடையை யாா் தரப் போகிறாா்கள்? எப்போது கிடைக்கப் போகிறது? காத்திருப்போம்.
கட்டுரையாளா்:
முன்னாள் அமைச்சா்.