போதையில்லா சமுதாயமே இலக்கு...

போதைப் பொருள் பழக்கம் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி, சமூகத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளதைப் பற்றி...
போதையில்லா சமுதாயமே!
போதையில்லா சமுதாயமே!express illustrator
Published on
Updated on
2 min read

-வழக்குரைஞர் ஆர்.சங்கீதா-

ஒவ்வோர் நாளும் நிகழும் குற்றங்களின் பின்னணியில் போதைப் பொருள்களின் பங்களிப்புதான் மிகப் பெருமளவில் இருக்கிறது. குறிப்பாக, போதையின் பாதையில் இளைய சமுதாயம் எங்கோ திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது. போதைப் பொருள் பழக்கம் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது.

இந்தியாவில் பல்வேறு வகையான போதைப் பொருள்கள் எளிதாகக் கிடைப்பதால், இளைஞர்கள் அவற்றுக்கு அடிமையாவது ஒரு முக்கிய சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, போதைப் பொருள் பயன்பாடு, குற்றங்களுக்கு இடையே உள்ள தொடர்பு ஒரு முக்கியமான சமூகச் சீர்கேடாக மாறி உள்ளது.

தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பக அறிக்கையின்படி, போதைப் பொருள் மற்றும் மனநோய் மருந்து சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியாணா மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் போதைப் பொருள்கள் தொடர்பான குற்றங்கள் அதிகமாகப் பதிவாகின்றன. போதைப் பொருள்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் கணிசமான சதவீதத்தினர் இளைஞர்கள்தான் என்பதும் அதிர்ச்சித் தகவல்.

தமிழ்நாட்டிலும் போதைப்பொருள்கள் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் குற்றங்கள் ஒரு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு பல காரணங்களும், காரணிகளும் உள்ளன. வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் கல்வி சார்ந்த அழுத்தங்கள், குடும்பப் பிரச்னைகள் போன்றவை இளைஞர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றன. இதிலிருந்து தற்காலிகமாக விடுபட பலர் போதைப்பொருள்களை நாடுகின்றனர்.

இன்றைய நவீன வாழ்க்கைமுறை, மேற்கத்திய கலாசார தாக்கம் ஆகியவை இளைஞர்களிடையே போதைப் பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன. கிளப் மற்றும் விருந்துகளில் மது, கஞ்சா, மாத்திரைகள், ஊசிகள் போன்ற பல வடிவங்களில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை நவீன கலாசார வாழ்க்கையின் போலிப் பெருமையாக நினைத்து இளைஞர்கள் அதற்குள் தங்களை சுயபலி கொடுத்துக் கொள்கிறார்கள்.

தமிழ்நாடு காவல் துறை அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் இளம் வயதினர் அதிக அளவில் ஈடுபடுவதைக் காட்டுகின்றன. "ஆபரேஷன் கஞ்சா வேட்டை' போன்ற சிறப்பு நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களில் பலரும் பதின்ம வயதினர் என்பது பெரும் துயரச் செய்தியாகும். சில அரசு மற்றும்

தனியார் மருத்துவமனைகள் நடத்திய ஆய்வுகளில், போதைப்பொருள் பழக்கத்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் குறிப்பாக மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெறுபவர்களில், பதின்ம வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

போதைப் பொருள்களை வாங்க பணம் தேவைப்படுவதால், பல இளைஞர்கள் திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

போதையில் இருக்கும் நபர்கள்தான் தங்களின் கட்டுப்பாட்டை இழந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு சமூகத்தின் அச்சுறுத்தும் சக்திகளாக மாறிவிடுகின்றனர். தவறான நண்பர்கள் வட்டத்தாலும், சில சமூகவிரோத சக்திகளாலும் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டும், திரைப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தவறான சித்தரிப்புகளாலும் பல இளைஞர்கள் இந்த அபாயப் பொறிக்குள் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.

இந்த சமூகப் பிரச்னையைத் தீர்க்க, பல்வேறு நிலைகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் போதைப் பொருள்களின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும், மற்றும் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும், நல்ல வழிகாட்டலையும் வழங்க வேண்டும். மேலும் நண்பர்களின் சேர்க்கை , அவர்கள் சென்று வரக்கூடிய இடங்கள் ஆகியவற்றைக் குடும்பத்தினர் கண்காணிக்க வேண்டும்.

அத்துடன் போதைப் பொருளுக்கு எதிரான சட்டத்தின் அதிகார வரம்பையும், அதன் செயல்பாட்டையும் இன்னும் வலுப்படுத்த வேண்டும். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடுமையான சட்டங்கள், அமலாக்க நடைமுறைகள் தேவை. போதைப் பொருள்கள் விற்பனை செய்வோரைக் கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். போதைப் பொருள் கடத்தல், விற்பனை செயல்களைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

எனவே, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க அரசு, சமுதாயம், மற்றும் தனிநபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு அதற்கான சரியான தீர்வுகளைக் கண்டறிந்து செயல்பட்டால் மட்டுமே, நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். போதையில்லா சமுதாயமே குற்றமில்லா சமுதாயம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து, அதற்காக தீவிரமாக உழைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com