
ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? "இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது'என்றார் ஒரு மாணவர்.
விலை மதிப்பற்றது, விலை மதிக்க முடியாதது என்றெல்லாம் சொல்லுகிறோமே? அப்படியானால் என்ற பதில் கேள்வி கேட்டதும், பயன்படுத்துவதைப் பொருத்தது என்று ஒரு மாணவி கூறினார். அது எப்படி? தங்கத்தின் விலை மதிப்பு அதிகம். அதனோடு ஒப்பிட, தக்காளியின் விலை குறைவு. தக்காளி சாப்பாட்டுக்கு உதவும். தங்கத்தைச் சாப்பிட முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் மாணவர். தங்கத்தை விற்றால், தக்காளிக் கடையையே வைக்கலாம் என்று பதிலளித்தார் மற்றொருவர். சின்னத் தக்காளியின் மிகச் சிறிய விதைகூட மண்ணில் விழுந்தால் மறுபடி பல நூறு தக்காளிகளைத் தரும்; முளைக்கும். அதுபோல், தங்கம் முளைக்குமா? இத்தனைக்கும் அதுவும் மண்ணில் இருந்துதான் கிடைக்கிறது என்று மறுத்தார் மாணவி.
தலைப்பு திசைமாறுகிறது, பட்டிமன்றத்தைப்போல். தங்கமா?, தக்காளியா என்று பட்டிமன்றமா இங்கே நடத்துகிறோம்? கேள்வி என்ன? எது விலை உயர்ந்தது என்பது இல்லை. ஒரு பொருளின் முழுமதிப்பு வெளிப்படுத்துவது எப்போது என்று மற்றொருவர் தெளிவுபடுத்தினார்.
"அது பயன்படுத்துபவரின் தகுதியை, தேவையைப் பொருத்தது என்ற பதிலும் வந்தது. பயன்படுத்தவே இல்லை என்றால், ஒரு பொருள் தன் தகுதியில் மதிப்பில் குறைந்துவிடுமா என்ன என்ற வினாவும் எழுந்தது. பயிற்சி பெறுபவர்களைக் குழுக்களாகப் பிரித்து நடத்திய வகுப்பு என்பதால், பதில் தருபவர் எவரோ, அவர்தம் குழுவில் இருந்து பலத்த கரவொலி எழும்பிவிடும். சுவையான செய்தியாக அமைந்துவிட்டால், அது குழு எல்லை கடந்து பலரது கரவொலிகளையும் பெற்றுவிடும்.
இந்தப் பதிலுக்கு அப்படி ஒரு பொதுக்கரவொலி எழுந்தது. இது பொது நிகழ்வு இல்லை; குழு உரையாடல். பொதுநிகழ்வில்போல், இதுபோன்ற குழு உரையாடலிலும் கரவொலி எழுப்பி அங்கீகரிப்பதும், பாராட்டுவதும்கூட மதிப்பைத் தருவதுதான். எவ்வளவு பேர் எவ்வளவு சப்தமாகக் கரவொலி எழுப்பினார்கள் என்பதைப் பொருத்து ஒரு கருத்தின் மதிப்பை அளவிட்டுவிட முடியாது. பலத்த கரவொலி பெறுகிற உரையைவிட, கைதட்ட மறந்து சிந்திக்க வைக்கிற உரைதான் உயர்ந்தது; பயனுள்ளது.
கை தட்டல் அரங்கத்தில் எழுப்பப்பட்ட மறுகணமே, அவ்வொலி காற்றில் கரைந்துபோகும். ஆனால், கவனத்துக்குக் கொண்டுவரப்பெற்ற செய்தி எழுப்புகிற சிந்தனை காலம் கடந்து இருக்கும். செயல் விளைவுகளை உண்டாக்கும் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஒரு பொருளின் முழு மதிப்பு, காலத்தைப் பொருத்து அமையும் என்று சொல்லலாமா என்று ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார். கரவொலி எழுப்பப் போன ஒரு சிலரும் செவி மடுத்த சிந்தனையால் நிறுத்திக் கொண்டனர்.
"எங்கே, ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க' என்று இரண்டு நிமிஷங்களுக்கு ஒருமுறை கரவொலியை இரவலாய்ப் பெற்றுப் பேசுகிற பேச்சாளரின் கவனமெல்லாம் கரவொலியின்மீது இருக்குமே ஒழியப் பேசுகிற கருத்தில் இருக்காது என்று அதற்கும் விளக்கம் சொன்னேன்.
"ஒரு பொருளின் மதிப்பு, அதற்குச் சமமானதாகவோ மாற்றாகவோ இருக்கும் மற்றொரு பொருளின் மதிப்போடு ஒப்பிடுகிறபோது முழு மதிப்புத் தெரியும் என்று சொல்லலாமா? ஏற்கெனவே சொன்ன தக்காளியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
தராசில் எடை போடும்போது ஒரு கிலோ இரும்புப் படிக்கல்லுக்கு இணையாகத் தக்காளி இருந்தாலும் இரும்பின் விலை அதிகம். அதுவே, அதற்குச் சமமாகத் தங்கம் வைக்கப்பட்டிருந்தால், அது இரும்பைவிட விலை அதிகம். சந்தை மதிப்பிலும், சமூக மதிப்பிலும் உயர்ந்ததை வைத்து முடிவு செய்யலாமா' என்ற வினாவும் முன் வைக்கப்பட்டது.
இந்த நேரத்தில் ஒரு குழுவிடம் இருந்து பரபரப்பும் சலசலப்பும் எழுந்தது. அது அடுத்த குழுவுக்கும் பரவியது. ஒருசில நிமிஷங்களிலேயே அது அனைத்துக்குக் குழுவுக்கும் பரவியது.
"என்னாச்சு?' "என்னோட கைப்பேசியைக் காணோம்'. ஒவ்வொருவரும் தன் கைப்பேசி காணாததுபோல்துணுக் குற்றனர். சிலர் தமது கைப்பேசி இருப்பை உறுதி செய்துகொண்டனர். "ஃபோன் பண்ணிப் பார்த்தால் தெரியும்'. "சைலண்ட்ல போட்டிருக்கேன்'; "ரொம்ப காஸ்ட்லியா?' விலை மதிப்பு இருக்கட்டும். அதில்தான் எல்லாம் இருக்கிறது.
மற்றவர்களின் கைப்பேசி எண்கள், வங்கிக் கணக்கு. வரவு} செலவு, படங்கள், ஆவணங்கள் என்று தொலைத்தவர் அதில் உள்ளவற்றைப் பட்டியலிடத் தொடங்கினார். அதைவிட, அழுகை முந்திக் கொண்டுவந்தது. "அழ வேண்டாம். நாங்க எல்லாரும் சேர்ந்து, புதுசாவே வாங்கித் தந்துவிடுகிறோம்' என்று அந்தக் குழுவினர் ஆறுதல் சொல்ல, "ஃபோன் புதுசு வாங்கினாலும், காணாமல் போன ஃபோனில்தான் எல்லாம் இருக்கு' என்று தொலைத்தவர் கவலையோடு சொன்னார். விளக்கம் தேடுவதைவிட, காணாமல் போன கைப்பேசியைத் தேடுவதில் கவனம் கூடியது.
"போன இடங்களை நினைவுபடுத்திப் பார்' என்று தொலைத்தவரின் தோழி கூற, அரைமணிநேரம் தேடும் படலம் தொடர்ந்தது. கடைசியில் அது சாப்பிடும் கூடத்தில் இருந்து கண்டறியப்பட்டது. அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.
"ஆக, ஒரு பொருளின் மதிப்பு, அதன் விலையில் இல்லை; பயன்பாட்டில் இல்லை; அது தொலைகிறபோதுதான் முழு மதிப்பும் நமக்குத் தெரிய வருகிறது' என்று சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆரவாரமாய்க் கரவொலி எழுப்பினார்கள்.
கருத்தை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் விரித்துச் சொல்லவும் நேர்ந்தது. இருப்பதன் மதிப்பு, இல்லாமையில்தான் முழுமையாக வெளிப்படுகிறது. நிழலின் அருமை வெயிலில் தெரிவதுபோல்.
ஆரோக்கியத்தின் மதிப்பு, நோய் வயப்படுகிறபோது தெரிகிறது. உறுப்புகளின் சிறப்பு, இழப்புகளின்போது தெரிய வருகிறது. "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்ற பழமொழி, கவனத்தில் பதிந்தாலும், அனுபவத்தில் வருகிறபோதுதான் அதற்கும் மதிப்பு கூடுகிறது.
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி, யானைக்குப் பொருந்திய அளவுக்கு மனிதர்களுக்குப் பொருந்துமா என்ற கேள்வி முன்னெல்லாம் எழுந்தது. கண் தானம் முதலான உறுப்பு தானங்கள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, மனித உடலின் மதிப்பும் கூடியிருக்கிறது.
உணவுப் பொருளின் மதிப்பைவிட, உணர்வுப் பொருளின் மதிப்புக் கூடுவதுபோல் தெரிந்தாலும், பசி வந்தால் என்ன ஆகும்? "பணம் பத்தும் செய்யும்' என்ற பழமொழியும், "பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' என்கிற ஒüவையார் பாடலடியும் ஒன்றுபோல் தெரியும். ஆனால், அவை ஒன்றாகாது. பணத்தை வைத்துக்கொண்டு அந்தப் பத்து எவையென ஆராய்ச்சி செய்யலாம்; நிரல்படுத்தலாம். ஆனால், பசியை வைத்துக்கொண்டு, பத்து எவையென்று பட்டியலிட முடியாது. கண்ணில்பட்ட பொருள்களில் பசி தீர்க்கும் பொருள் எதுவென்றுதான் தேடச் சொல்லும்.
இளம் குழந்தைக்கு, ஐநூறு ரூபாய்த் தாளைவிட, ஐஸ்க்ரீம்தான் மதிப்பில் உயர்ந்தது. பசித்தவனின் உணர்வுக்கு பண மதிப்பீட்டைவிடவும் உணவுத் தேவைதான் உயர்வுடையதாய்த் தெரியும். எத்தனை ஆயிரம் கொடுத்தாலும், இப்போது உண்ண எது கிடைக்கும் என்றே தேடச் சொல்லும். அந்த அனுபவத்தில், ஒரு புதிய உண்மை பிறக்கும். "பசி உயிர் போகுது.' பசி உடலின் தேவையா?, உயிரின் தேவையா?
உடலோடு உயிரைப் பிணைத்துவைக்கும் உணர்வு அது. அந்த நேரத்தில் கிடைக்கும் உணவுக்கு ஒரு விலை இருக்கும். அது பண மதிப்பீட்டில் எப்படி இருந்தாலும், மன மதிப்பீட்டில் எவ்வளவு உயர்ந்தது?
சரி, பசிக்கிறபோது புசிக்கக் கிடைக்காத உணவைக் கிடைக்கிறபோதெல்லாம் எடுத்து முழுதாக உண்டுவிட முடிகிறதா? ஒப்பீட்டு நிலையிலும்கூட நம் மதிப்பீடு சரியாக இருப்பதில்லை.
உயிரின் மதிப்பு உயர்ந்தது என்று எண்ணுவது இயற்கை. அதைவிட உடலின் மதிப்பு உயர்ந்தது என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கும். ஓர் உடலின் உறுப்புகளை, ஏனைய உடல்களுக்கு மாற்றிவைத்துப் பயன் கொள்வதுபோல், உயிரை வேறு உடலுக்குள் புகுத்துகிற மருத்துவச் செழுமை இன்னும் கைகூடி வரவில்லை. தங்கத்தினும் தாய் உயர்ந்தவர் என்பது தெரியும். ஆனால், நடைமுறையில்? பணத்திலும் உயர்ந்த மதிப்புடையது குணம் என்று தெரிகிறது. ஆனால், தேடலில் எது முதலிடம் வகிக்கிறது?
மதிப்பு என்பது, அந்தந்த நேரத்துக்கு ஏற்பக் கூடலாம்; குறையலாம். முழு மதிப்பு என்பது அதன் தன்மை முழுமையாக உணரப்படுகிறபோதுதான் தெரிய வரும். இப்போதும்கூட, அறியப்படுகிற மதிப்பீடுகள்தான் நம்மை ஆக்கிரமிக்கின்றன. உண்மையில், மதிப்பெனப்படுவது மதிப்பிடப்படுவதில் இல்லை. மதிப்புக்கு உரிய மதிப்பு வழங்கப்படாதபோதுதான் அபூர்வமாய் வெளிப்படுகிறது.
உடலும் உயிரும் இணைந்து பயன் கொள்ளும் காலத்தின் தேவைக்குப் பயன்படும் ஒரு பொருளின் முழு மதிப்பு என்பது, அந்தக் காலத்தோடு மட்டும் முடிந்துவிடாமல், கால காலத்துக்கும் பயன்படும்போதுதான் அதன் முழு மதிப்பும் தெரியவரும்; அத்தகைய மதிப்புக்கு உரிய மனிதராய் நம்மையும் மதிப்புக்கு உரிய நிலையில் நம் வாழ்வையும் அமைத்துக் கொள்வதில்தான் நம் மதிப்பு அடங்கியிருக்கிறது' என்று அப்போதைக்குச் சொல்லி நிறைவுபடுத்திக் கொண்டோம். இது குறித்த உங்களின் மதிப்பீடுதான் என்ன?
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.