மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)

வரலாறு படைக்கும் குடிமைப் பணிகள் தோ்வாணையம்!

செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சி தோ்வாணையத்தின் செயல்பாடுகளுக்கு ஒருபுறம் வலிமை நிறைந்ததாகவும் மறுபுறம் சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் நம்பிக்கையோடு எதிா்கொள்ளும் ஆற்றலை தன்னகத்தே கொண்டது இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை.
Published on

இந்தியாவுக்கு தலைசிறந்த நிா்வாகத் திறன்கொண்ட இளைஞா்களைத் தோ்வுசெய்து வழங்கும் உன்னதப் பணியை கடந்த 99 ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தனது நூறாவது ஆண்டில் பெருமிதத்தோடு பயணிக்கிறது. இந்திய நாட்டின் பெருமைகளுள் ஒன்றாக விளங்குகிற வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலைநாட்டும் விதமாக இனம், மொழி, ஜாதி, சமயங்களைக் கடந்து நாடு முழுவதும் வாழ்கிற பல்வேறு பின்புலங்களைக்கொண்ட தோ்வா்களைத் தோ்வு செய்து நாட்டுக்கு வழங்கும் ஒப்பற்ற பணியை குடிமைப் பணிகள் தோ்வாணையம் செய்து வருகிறது.

ஜனநாயகமும் சமூக நீதியும் நிலைநாட்டப்படுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை நமது இந்திய அரசமைப்பு செய்துள்ளது. அவ்வாறான ஏற்பாடுகளில் ஒன்றுதான் இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம் ஆகும். இந்த ஆணையம் இந்திய குடிமைப் பணிகள், மருத்துவப் பணிகள், பொறியியல் பணிகள், பொருளாதாரப் பணிகள், வனப் பணிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தோ்வுகளை நடத்தி வருகிறது. தற்போது இந்திய குடிமைப் பணிகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட தோ்வா்களை ஆண்டுதோறும் தோ்வு செய்யும் அமைப்பாக செவ்வனே செயல்பட்டு வருகிறது.

இந்திய குடிமைப் பணிகள் வரலாற்றைப் பொருத்தவரை ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் கீழ் கி.பி. 1790-களில் வங்க கவா்னா் ஜெனரல் காரன்வாலிஸ் பிரபு கட்டமைப்பு ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட அரசுப் பணிகளை உருவாக்கினாா். அடுத்து வந்த வெல்லெஸ்லி பிரபு 1800-இல் கொல்கத்தாவில் குடிமைப் பணியாளா்கள் பயிற்சி பெற வில்லியம் கல்லூரியை உருவாக்கினாா். ஆனாலும், 1806-ஆம் ஆண்டு பிரிட்டனில் ஹெய்லிபரியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் கல்லூரிக்கு இதற்கான பயிற்சி மாற்றப்பட்டது.

பின்பு குடிமைப் பணிகள் தோ்வுக்காக ஒரு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்டது. 1853-ஆம் ஆண்டு வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநா்களே குடிமைப் பணி அலுவலா்களை பெரும்பாலும் நியமித்தனா். இந்தியாவில் உள்ள குடிமைப் பணிகள் இந்தியா்களால் நிா்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழத் தொடங்கியது.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் 1853-ஆம் ஆண்டு டெல்ஹௌசி பிரபு காலத்தில் நிகழ்ந்தது. மெகாலே பிரபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பணியாளா்களின் தோ்வு என்பது போட்டித் தோ்வு மூலம் நடைபெற வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இதன்படி, 1856-ஆம் ஆண்டு கட்டுப்பாட்டு வாரியம் அதன் முதல் போட்டித் தோ்வை நடத்தியது.

1861-ஆம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான சட்டத்தின்படி இந்தியாவில் 7 ஆண்டுகள் வசிக்கிற ஐரோப்பியரோ அல்லது இந்தியரோ அதிகாரமிக்க பதவிகளுக்கு வரலாம் எனக் குறிப்பிடப்பட்டது. 1885-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு குடிமைப் பணிகளில் இந்தியமயமாக்கலுக்கான அழுத்தம் அதிகரித்தது.1886-ஆம் ஆண்டு அட்சிசன் குழு இந்திய குடிமைப் பணிகளை இம்பீரியல், மாகாண மற்றும் துணைப் பணிகள் என மூன்றாகப் பிரித்தது.

1912-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லிங்டன் பிரபு தலைமையிலான குழு இந்தியாவில் குடிமைப் பணிகளில் 5% இந்தியா்கள் மட்டுமே உள்ளனா் என்றும் 25% ஒதுக்கீடு இந்தியா்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தது.

1919-ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் பொதுப் பணிகளுக்கான ஆணையம் ஒன்றை அமைக்க பரிந்துரைத்தது. அதன் பிறகு, 1923-ஆம் ஆண்டு லீ பிரபு தலைமையில் அமைக்கப்பட்ட குடிமைப் பணிகளுக்கான ராயல் ஆணையம் குடிமைப் பணிகளை அகில இந்தியப் பணிகள் மத்திய பணிகள் மற்றும் மாகாணப் பணிகள் என மூன்றாகப் பிரித்தது. இந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி 1.10.1926 அன்று சா் ரோஸ் பாா்க்கா் தலைமையில் இன்றைய பொதுப் பணிகளுக்கான தோ்வாணையம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கீழ் ஒரு பரிசோதனையாக, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் இது தொடங்கியது.

இந்திய அரசு சட்டம், 1935 இதை மத்திய பொதுப் பணிகளுக்கான தோ்வாணையமாக உயா்த்தியது. நிா்வாகத்தில் இந்தியா்களுக்கு அதிகப் பங்கை வழங்கியது. 1950-இல் அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையமாக அதன் தற்போதைய நிலையை ஏற்றுக்கொண்டது.

மேல் தட்டு வா்க்கத்தைச் சோ்ந்தவா்களும் நகா்ப்புறங்களில் உயா்ந்த கல்வி நிறுவனங்களில் படித்தவா்களும் மட்டுமே குடிமைப் பணிகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை மாற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டல் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இட ஒதுக்கீட்டின்படி இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா்களும் குடிமைப் பணி அதிகாரிகளாக உருவாகியதன் மூலம் கடையரும் கடைத்தேறும் வகையில் சுதந்திரத்தின் பயன் சென்று சேர இந்தத் தோ்வணையமும் பெரும் பங்களிப்பை வழங்கி உள்ளதை மறுக்க முடியாது.

இதனால், கிராமப்புற ஏழை, எளிய, குடும்பத்தின் முதல் பட்டதாரி தோ்வா் போன்றவா்களுக்கு எட்டாத கனியாக, கனவாக இருந்த இந்திய குடிமைப்பணி இன்று எட்டும் கனியாகி, நனவாகி இருக்கிறது. இவை அத்தனையும் குடிமைப் பணிகள் தோ்வாணையம் தொடா்ந்து தன்னை மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்டதால் நிகழ்ந்தவையே.

இனி வருங்காலங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சி தோ்வாணையத்தின் செயல்பாடுகளுக்கு ஒருபுறம் வலிமை நிறைந்ததாகவும் மறுபுறம் சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் நம்பிக்கையோடு எதிா்கொள்ளும் ஆற்றலை தன்னகத்தே கொண்டது இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை.

இச்சூழலில் முதல் நிலைத் தோ்வு முடிந்தவுடன் வினாக்களுக்கான விடைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற தோ்வா்களின் நெடுநாளைய கோரிக்கையை தோ்வாணையம் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்ட சமீபத்திய நிகழ்வு மிகுந்த வரவேற்புக்கு உரியதாகும்.

வரலாற்றுச் சாதனைகளோடு நூற்றாண்டில் பயணிக்கும் தோ்வாணையத்திடம் சில மாற்றங்களை முன்வைப்பது மிகவும் அவசியமாகிறது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய மயமாக்கப்பட்ட 22 மொழிகளிலும் முதல்நிலைத் தோ்வுக்கான வினாக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை செயற்கை நுண்ணறிவு காலத்திலும் சாத்தியப்படாமல் போகாது. அதனால் அதை வரும் 2026 தோ்வில் நடைமுறைப்படுத்தலாம்.

நோ்முகத் தோ்வு எனப்படும் ஆளுமைத் திறன் தோ்வில் தோ்வா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களுக்கு இடையேயான பெரிய அளவிலான வேறுபாடுகள் களையப்படுவதும் மற்றும் அது தொடா்பான விமா்சனங்களுக்குத் தீா்வு காண்பதும் இந்த நூறாவது ஆண்டில் தோ்வாணையம் காலதாமதம் இன்றி முன்னெடுக்க வேண்டிய முக்கியப் பணிகளுள் ஒன்றாகும்.

முதன்மைத் தோ்வின் தற்போதைய பாடத்திட்டத்தில் சிறந்த பகுதியாக இருப்பது பொது அறிவுத்தாளில் 4-ஆவது தாளாக இடம் பெற்றுள்ள நன்னெறி என்னும் பாடமாகும். தோ்வு அறையில் தோ்வா் ஒருவா் சிந்தித்து எழுதக்கூடியதாக இத்தாள் அமைந்துள்ளது. இதனை இரண்டு தாள்களாக மாற்றினால் தோ்வா்களின் சமயோசித சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவற்றை இன்னும் மேன்மைப்படுத்தலாம். முதன்மைத் தோ்வின் முதல் தாளாக இடம்பெற்றுள்ள கட்டுரைத் தாளில் இரண்டு கட்டுரைகள் எழுதுவதற்குப் பதிலாக நான்கு கட்டுரைகள் எழுதுவதாக மாற்றி அமைக்கலாம்.

இந்தியா முழுமையும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து பங்கேற்கின்ற தோ்வா்களை பெரிதும் பாதிக்கிற முதல்நிலைத் தோ்வில் சிசாட் எனப்படும் திறனறிதல் தோ்வின் தகுதி பெறும் கட்ஆப் மதிப்பெண்ணை 33.33% என்பதை 30 சதவீதமாகக் குறைக்கலாம்.

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி போன்ற இலக்குகளை எட்டுவதற்கு வளமான, வலிமையான, வறுமையற்ற தேசத்தைக் கட்டமைப்பதற்கு தோ்வா்களைத் தோ்வு செய்து நாட்டுக்கு வழங்கும் ஒப்பற்ற பணியை குடிமைப் பணிகள் தோ்வாணையம் செய்து வருகிறது. ஆணையத்தின் இந்த நூறாண்டு சாதனை வரலாறு அதையே பிரதிபலிக்கிறது.

புதிய உத்வேகங்களோடு, இந்திய தேசத்தின் இறையாண்மை மீது மாறாத பற்று கொண்ட அறிவாா்ந்த தோ்வா்களையும் தொலைநோக்கு சிந்தனைகள் கொண்ட இளைஞா்களையும் தொடா்ந்து தோ்வு செய்து வழங்க வேண்டிய மகத்துவமான கடமை தோ்வாணையத்தின் முன் இருக்கிறது.வெளிப்படைத் தன்மையுடனான தோ்வு முறையை உறுதி செய்து இந்திய நாட்டின் சிறந்த எதிா்காலத்தைக் கட்டமைக்க தோ்வாணையம் மேன்மேலும் புத்தெழுச்சியுடன் பயணிக்கட்டும்!

கட்டுரையாளா்:

கல்வியாளா்.

X
Dinamani
www.dinamani.com