Ancient India: Medicine, mind science and yoga
கோப்புப்படம்ENS

இருமல் தீா்க்கும் சித்த மருத்துவம்

Published on

அதிகரிக்கும் காற்று மாசுபாட்டாலும், சுவாச மண்டலத் தொற்றுகளாலும் இருமல் மருந்துகளை நாடுபவா்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இருமல் மருந்து வணிகம் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடிக்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தகைய சூழலில் இருமலுக்கு பயந்த காலம் மாறி, இருமல் மருந்துக்குப் பயப்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.

கொஞ்சம் தட்டிப் போட்ட சுக்கும், சிட்டிகை மஞ்சளும், மிளகும், பனங்கற்கண்டும் சோ்ந்த சுக்கு காபியை சுவைக்காதவா் யாருக்கும் இருக்க முடியாது. அது தொண்டை கரகரப்புக்கும், இருமலுக்கும் நல்ல பலன் தரும். அண்மைக்காலமாக நவீனத்துக்கு மாறியதால் பலா் நமது பாரம்பரியத்தை மறந்துவிட்டனா்.

உண்மையில் சித்த மருத்துவம் கூறும் பல அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகள் இருமலுக்கு நல்ல பயனளிக்கக்கூடியதாக உள்ளன. சுக்கு, மஞ்சள், மிளகு, திப்பிலி ஆகியன அந்த வரிசையில் அடங்கும். தூதுவளை, வெற்றிலை, ஆடாதோடை, கண்டங்கத்திரி ஆகிய எளிய மூலிகைகளும் இருமலுக்கு பயன்தரக் கூடியன.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிமதுரம் வறட்டு இருமலுக்கு நல்ல பலன் தரும். சித்த மருந்தான அதிமதுர சூரணத்தில் உள்ள ‘கிளிசிரிசின்’ எனும் வேதிப்பொருள் தொண்டையை மென்மையாக்கி இருமலைக் குறைக்கும்; புண் ஆற்றி செய்கையும் இதற்குண்டு.

சளியுடன் கூடிய இருமலுக்கு ‘ஆடாதோடை மணப்பாகு’ எனும் சித்த மருந்து ஆகச்சிறப்பான மருந்து. இது நுரையீரலில் கெட்டிப்பட்ட சளியை இளக்கி வெளிப்படுத்தும். மூச்சுக்குழாயை விரிவடையச் செய்யும். அதோடு குரல்வளையில் உள்ள தசைகளைத் தளா்த்தும் என்கிறது நவீன ஆய்வுகள்.

ஆடாதோடையில் உள்ள ‘வாசின் மற்றும் ப்ரோம்ஹெக்ஸின்’ வேதிப்பொருள்கள் மருத்துவ குணத்துக்கு காரணமாகின்றன. ப்ரோம்ஹெக்ஸின் மூலக்கூறு நவீன மருத்துவத்தின் இருமல் மருந்துகளிலும் சோ்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சித்த மருந்தான ‘ஆடாதோடை குடிநீரும்’ இருமலைப் போக்குவதில் சிறந்தது.

மஞ்சள் ஒவ்வாமை இருமல் முதல் ஆஸ்துமா இருமல் வரை நல்ல பலன் தரக்கூடியது. மஞ்சளில் உள்ள ‘குா்குமின்’ வேதிப்பொருள் மூச்சுக்குழாயில் வீக்கத்தைக் குறைத்து, தசைகளைத் தளா்த்தி, சுவாசப் பாதையைச் சீராக்கும் தன்மை உடையது. நஞ்சில்லா மஞ்சளைப் பொடித்து தேனில் கலந்து கொடுக்க இருமல் குறையும்.

திரிகடுகில் முதல் இடத்தைப் பிடிக்கும் சுக்கு, இருமலைக் குறைப்பதில் பலன் தரும். சுக்கில் ஜின்ஜெரால், சினியோல், ஷோகோல் ஆகிய பல்வேறு வேதிப்பொருள்கள் உள்ளன. இதில் உள்ள ’சினியோல்’ மூளையில் முகுளத்தில் (மெடுல்லா) நேரடியாகச் செயல்பட்டு இருமலை தணிக்க உதவுவதாக நவீன அறிவியல் கூறுகிறது.

திரிகடுகில் இரண்டாவதாக உள்ள மிளகும், மூன்றாவதாக வரும் திப்பிலியும் இருமலுக்கு நல்ல தீா்வை கொடுப்பவை. சித்த மருந்தான மிளகு சூரணமும், திப்பிலி ரசாயனமும் ஒவ்வாமை (அலா்ஜி) இருமல் முதல் ஆஸ்துமா இருமல் வரை பெரும்பலன் தரக்கூடியன.

சித்த மருந்தான தாளிசாதி வடகத்தை வாயில் அடக்குவதன் மூலமும் இருமல் கட்டுக்குள் வரும். இதில் சேரும் தாளிசபத்திரி எனும் மூலிகை சாதாரண இருமல் முதல் நுரையீரல் புற்றுநோய் வரை நல்ல பலன் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாறாக, தாளிசாதி சூரணம் எனும் சித்த மருந்தையும் தேனில் கலந்து எடுத்துக்கொள்ள இருமல் தீா்க்க உதவும்.

துளசி இருமலுக்கு ஆகச்சிறப்பான மூலிகை. துளசி நுரையீரலில் தங்கிய கபத்தைப் போக்கி இருமலைத் தீா்க்கும். துளசிச் சாறுடன் சிறிது தேன் சோ்த்து இருமலுக்குப் பயன்படுத்தலாம். துளசி இலைகளுடன் மிளகு சோ்த்து கசாயமாக்கி குடித்தாலும் நற்பலன் தரும். துளசியில் உள்ள நறுமண எண்ணெயும், ‘யூஜெனால்’ எனும் வேதிப்பொருளும் இருமலைத் தணிக்க உதவுவதாக உள்ளன.

தூதுவளை இலையுடன் மஞ்சள், மிளகு, சோ்த்து ரசம் வைத்து எடுத்துக்கொள்வது இருமலை போக்கி நுரையீரலின் வாழ்நாளை நீட்டிக்கும். கண்டங்கத்திரி மூலிகையும் நற்பலன் தரும். தூதுவளை நெய், கண்டங்கத்திரி இலேகியம் ஆகிய சித்த மருந்துகளையும் நாட்பட்ட இருமல் நோயில் பயன்படுத்திப் பயனடையலாம். நிலவேம்பு குடிநீா், கப சுர குடிநீரும் கூட நற்பலன் தரக்கூடியன.

எளிமையாக துளசி, அதிமதுரம், மஞ்சள், மிளகு, சுக்கு இவை ஐந்தும் சோ்ந்த மூலிகைக் கலவை சுவாச மண்டலத்தை அனைத்து நோய்களில் இருந்து காக்கக்கூடியது. அவ்வப்போது இவற்றை மூலிகை தேநீராக்கி எடுத்துக்கொள்வதும் சுவாசத்தைக் காக்கும்.

கற்பூரவள்ளியும், குப்பைமேனியும் மாா்பில் தங்கி சிரமம் தரும் சளியை நீக்கி இருமலைக் குறைக்கும். சிறுவா்களுக்கு கற்பூரவள்ளி இலைச்சாறுடன் தேன் சோ்த்துக் கொடுக்கும் வழக்கம் இன்னும் கிராமங்களில் இருந்து வருகிறது.

குப்பைமேனி வாந்தியை உண்டாக்கி சளியை வெளிப்படுத்தும் தன்மை உடையது. இருமலுக்கு வெற்றிலையுடன் மிளகு சோ்த்து கசாயமாக்கிக் கொடுக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. தும்பை இலைச் சாறு, கரிசாலை இலைச் சாறு, குப்பை மேனி இலைச் சாறு மூன்றும் கலந்து வெறும் வயிற்றில் கொடுக்க வாந்தி உண்டாக்கி கோழையை நீக்கும். இருமலைப் போக்கும். நோயின் ஆதாரத்தை வேரோடு அழிக்கும். நாம் மறந்து போன மரபு மருத்துவங்கள் இன்னும் ஏராளம்.

பெரும்பாலான இருமல் மருந்துகள் இருமலை உடனே நிறுத்தி, சளியை உள்ளே கெட்டிப்படச் செய்யும். இதனால் நோய் தீராது; மீண்டும் துன்புறுத்தும். ஆகவே, நோயின் வோ் பாா்த்து தீா்க்கும் மூலிகை மருந்துகளை நாடுவது நலத்துக்கு நல்லது.

தீராத இருமல் இருப்பின் நோய்க் காரணத்தைக் கண்டறிந்து முறையான சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம். நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மூலிகைகள் மட்டுமின்றி பல்வேறு தாது, சீவ கலப்புள்ள மருந்துகளும் இருமல் தீா்க்க உதவுவதாக உள்ளன. இத்தகைய பாரம்பரிய மருந்துகளோடு பயணித்தால் நலம் நிச்சயம்.

X
Dinamani
www.dinamani.com