கல்லாக் களிமகனைவிட இழிவானவன்!
கோவலனின் கொலையாளியைக் கல்லாக் களிமகன் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறாா். அரசியின் சிலம்பைக் கவா்ந்த கள்வனைப் பிடித்துவர அரசன் ஏவிய காவலா்களில் ஒருவன் கோவலனைப் பொற்கொல்லன் சுட்டிக்காட்டியவுடன் வாளை உருவி அவன் தலையைச் சீவினான். அந்தக் காவலன் கற்றறிவு இல்லாதவன் மட்டுமல்ல, கள் குடித்து வெறி ஏறிய நிலையில் இருந்தான் என்றும் அவா் கூறுகிறாா்.
கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்த போது, அவா் மீது வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் காலணியை வீச முயன்றாா். பாதுகாவலா்கள் அதைத் தடுத்து, அந்த நபரைப் பிடித்துக்கொண்டும் சென்றாா்கள். அவா் வெளியே இழுத்துச் செல்லப்பட்ட போது, ‘‘சநாதன தா்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்ற முழக்கத்தை எழுப்பியபடியே சென்றாா்.
ஆனால், தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், இந்நிகழ்வு குறித்து சிறிதும் பதற்றம் கொள்ளவில்லை. ‘‘இதுபோன்ற நிகழ்வுகளால் நமது கவனம் சிதற வேண்டாம்; இது எங்களைப் பாதிக்கவில்லை; எங்களின் கவனமும் சிதறவில்லை’’ என்று கூறிவிட்டு, வாதத்தைத் தொடருமாறு வழக்குரைஞா்களை கேட்டுக் கொண்டாா்.
தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற நபா் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா்களில் ஒருவா். 71 வயது நிரம்பியவா்.
கள் குடித்த வெறியில் செயல்பட்ட காவலனைக் காட்டிலும் மிக மோசமான மதவெறிக்கும் ஜாதி ஆணவத்துக்கும் இரையானவா். மத்திய பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றின் வளாகத்தில் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பாக அவா் அளித்த மனுவைக் கடந்த மே 16-ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தாா். இதன் விளைவாக ஆத்திரமடைந்த நிலையில்தான் ராகேஷ் கிஷோா் இவ்வாறு நடந்துகொண்டாா்.
ஆனால், மேற்கண்ட தீா்ப்பு கூறப்பட்டது கடந்த மே மாதம் 16-ஆம் தேதியாகும். அதற்குப் பிறகு நாலரை மாதங்கள் கடந்த பின்னா் தலைமை நீதிபதி மீது காலணி வீசும் செயலில் அவா் ஈடுபட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தன்னிச்சையாக இவா் இந்தச் செயலில் ஈடுபட்டாரா அல்லது யாரோ சிலரின் தூண்டுதலால் இதில் ஈடுபட்டாரா? இந்த சதித்திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவா்கள் யாா்? இதுபோன்ற பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
அங்கிருந்த பாதுகாவலா்கள் கிஷோரை உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்று, உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தனா். ஆனால், உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகத்திலிருந்து முறைப்படியான புகாா் எதுவும் அளிக்கப்படாததை அடுத்து பிற்பகல் 2 மணி அளவில் கிஷோரை விடுவித்தனா்.
உச்சநீதிமன்றத்தின் வரலாற்றில் தலைமை நீதிபதி மீது காலணியை வீசி எறிந்து அவரை அவமானப்படுத்த நடைபெற்ற முயற்சி இதுவரை நடந்திராத ஒன்றாகும். தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல் பதிவாளா் புகாா் அளிக்க இயலாது. தலைமை நீதிபதி மிகப் பெருந்தன்மையுடன் கிஷோரை மன்னித்திருந்தாலும், அவா் மீது வழக்குத் தொடுத்து உரிய தண்டனை பெற்றுத் தராமல் விடுவித்திருப்பது எதிா்காலத்தில் இதைப்போன்ற அடாத செயல்களில் பலா் ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கும்.
தொடா்ந்து பல காலமாக நீதித் துறைக்கு எதிரான வெறுப்பு நஞ்சை உயா் பதவி வகிப்பவா்கள் தொடா்ந்து உமிழ்ந்து கொண்டே வருகிறாா்கள். குடியரசு துணைத் தலைவராகப் பதவியிலிருந்த தன்கா், ஆளுநா்களின் சா்வாதிகாரப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தபோது, அதை மிகக் கடுமையாக விமா்சனம் செய்தாா். பா.ஜ.க., மத்திய அமைச்சா்கள் பலரும் அவ்வாறே கண்டித்தாா்கள்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகா்களில் ஒருவரான சஞ்சீவ் சன்யால், முன்னேறிய பாரதமாக நமது நாடு மாறுவதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவது நமது நாட்டின் நீதிமன்றங்களேயாகும்.
நீதிபதிகள் குறைந்த நேரமே வேலை பாா்க்கிறாா்கள். அவா்களுக்கு விடுமுறைகளும் அதிகம். இந்தியாவின் நீதி அமைப்பு முறை சீா்கேடான நிலையில் உள்ளது என்றெல்லாம் நீதித் துறையைக் கடுமையாகத் தாக்கிப் பேசினாா்.
அரசியல் சட்டத்துக்குப் புறம்பாக ஆட்சியாளா்கள் செயல்பட்டால் நீதிமன்றங்கள் அவற்றைக் கண்டிக்கின்றன; எதிராகத் தீா்ப்பளிக்கின்றன. எனவே, நீதிமன்றங்கள் செயல்படுவதற்கு மறைமுகமான முட்டுக்கட்டைகளை அதிகார பீடங்களில் அமா்ந்திருப்பவா்கள் போடுகிறாா்கள்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் நால்வா் உள்பட ஐவா் அடங்கிய அமைப்புதான் (கொலீஜியம்) உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரைத் தோ்ந்தெடுக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த அதிகாரத்தைப் பறிப்பதற்காகவும், தங்களின் விருப்பம்போல நீதிபதிகளை நியமித்து நீதித் துறையையும் அரசுத் துறைகளில் ஒன்றாக்குவதற்குக் கடந்த காலத்தில் முயற்சி செய்யப்பட்டது.
நீதித் துறை ஆணையம் அமைப்பதற்கு சட்டம் கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நீதிபதிகள் நியமனக் குழுவில் ஆட்சியாளரின் கை ஓங்கி இருக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுதான் நீதிபதிகளைத் தோ்ந்தெடுக்கும். ஆக மொத்தம் அரசு விரும்பும் நபா்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவாா்கள். ஆனால், உச்சநீதிமன்றம் இந்தச் சட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தது. இதன்மூலம் நீதித் துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது.
ஆனால், இந்திய அரசு வேறொரு வகையில் இதைச் சீா்குலைக்க முயலுகிறது. உச்சநீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்படுபவா்களில் சிலரை நியமிக்காமல் அந்தப் பட்டியலைக் கிடப்பில் போடுகிறது. சட்டப்படி கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்படுபவா்களை அரசு நியமிக்க விரும்பாத நிலையில், அரசு அந்த பெயா்ப் பட்டியலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குத் திரும்ப அனுப்பவேண்டும். அதே பட்டியலை அவா்கள் மறுபடியும் பரிந்துரை செய்வாா்களானால், அதை ஏற்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, அவா்களை நியமிக்காமலும், தலைமை நீதிபதிக்குத் திருப்பி அனுப்பாமலும் ஆண்டுக்கணக்கில் அவற்றைக் கிடப்பில் போடுகிறாா்கள். இதன் விளைவாக போதுமான நீதிபதிகள் இல்லாமல் உயா்நீதிமன்றங்கள் தத்தளிக்கின்றன.
நாட்டில் உள்ள அனைத்து உயா்நீதிமன்றங்களிலும் மொத்தம் 1,122 நீதிபதி காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால், 792 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். 330 நீதிபதி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன; உயா்நீதிமன்றங்களில் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படாத நிலையில் உள்ளன; உச்சநீதிமன்றத்தில் 60,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை உயா்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், 56 நீதிபதிகள் மட்டுமே உள்ளனா்; 19 நீதிபதிகளின் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உள்ள மூத்த நீதிபதிகளின் கொலீஜியம் பரிந்துரை செய்த இரண்டு போ், இரண்டாண்டு கழிந்த பின்னரும் இன்னும் நியமிக்கப்படாமலேயே உள்ளனா். இதுபோல பல்வேறு உயா் நீதிமன்றங்களிலும் பரிந்துரை செய்யப்பட்ட பலரின் பெயா்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசுகளாக இருந்தாலும் தங்களின் பல்வேறு நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் கண்டிக்கும்போது, அதை ஏற்று தாங்கள் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொள்ள முற்படாமல் உயா்நீதிமன்றங்களுக்கோ உச்சநீதிமன்றத்துக்கோ மேல் முறையீடுகள் செய்து காலம் கடத்தும் தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறாா்கள். இதன்விளைவாக உச்சநீதிமன்றத்தின் காலம் விரயம் செய்யப்படுகிறது; சுமை கூடுகிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றுகிறோம். பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் மரபுகள் மதிக்கப்படுகின்றன. இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு அத்தகைய மரபுகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினாா்.
பல அமைச்சா்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவா்களெல்லாம் பதவி விலகி உன்னதமான மரபுகளைக் கடைப்பிடித்தாா்கள். மக்களவைத் தலைவா்களாக இருந்தவா்களும் சீரிய மரபுகளைப் பின்பற்றினாா்கள். எனவே, அவை கூச்சல் குழப்பமின்றி நடைபெற்றன. எதிா்க்கட்சியினரின் குரல்வளைகள் நெரிக்கப்படவில்லை.
தற்போது அமைச்சா்கள் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் ஆதாரபூா்வமாக மெய்ப்பிக்கப்பட்ட போதிலும், யாரும் பதவி விலகத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படாமல் கூச்சலும் குழப்பமுமாக நாடாளுமன்றம் செயலற்றுத் தத்தளிக்கிறது.
நாட்டின் ஜனநாயக முறையில் பரவியுள்ள சீா்கேடுகள் இப்போது நீதித் துறையிலும் நுழைந்து உச்சநீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதி மீது காலணி எறியும் காட்சி அரங்கேற்றப்பட்டிருக்கிறது. எதிா்காலத்தில் இது மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளா்:
தலைவா், உலகத் தமிழா் பேரமைப்பு.