மேற்கிந்தியத் தீவுகள் அணி
மேற்கிந்தியத் தீவுகள் அணி

யானைக்கும் அடி சறுக்கியது!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பலவீனமான நிலை..
Published on

அண்மையில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சிரமம் ஏதுமின்றி வென்றுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளை மட்டுமே கொண்ட தொடரை இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி வென்றிருப்பதை நம் நாட்டின் கிரிக்கெட் ரசிகா்களோ, ஊடகங்களோ பெரிய அளவில் கொண்டாடவில்லை என்பது தற்போதைய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பலவீனமான நிலையையே குறிப்பிடுகிறது.

ஒரு காலத்தில் கேரி சோஃபா்ஸ், கிளைவ் லாயிட், ஆல்வின் காளிச்சரண், விவியன் ரிச்சா்ட்ஸ், ரிச்சி ரிச்சா்ட்ஸன், நம் நாட்டின் சச்சின் டெண்டுல்கருக்கு சம காலத்தவராகிய பிரையன் லாரா போன்ற மகத்தான பேட்டா்களையும், ஆண்டி ராபா்ட்ஸ், ஜோயல் காா்னா், பொ்னாா்டு ஜூலியன், பேட்ரிக் பேட்டா்ஸன், மால்கம் மாா்ஷல், மைக்கேல் ஹோல்டிங், கா்ட்லி அம்புரோஸ், கோா்ட்னி வால்ஷ் போன்ற துடிப்புமிக்க வேகப்பந்து வீச்சாளா்களையும் தன்னகத்தே கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இன்றைய தினம் மிகவும் எளிதாக வெல்லப்படக் கூடிய அணியாக மாறியிருப்பதைக் காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய கிரிக்கெட் ரசிகா்களாக விளங்குகிற மூத்த குடிமக்கள் யாரைக் கேட்டாலும், 1974-75-ஆம் ஆண்டுகளில் இந்திய- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரானது இன்றளவும் மறக்க இயலாத தொடராக விளங்குவதை உணரமுடியும். ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட அந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வென்றிருந்தது.

பெங்களூரு, புதுதில்லி ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில், சுழல்பந்துவீச்சுக்குச் சாதகமான கொல்கத்தா, சென்னை ஆகிய மைதானங்களில் நமது அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இரு அணிகளும் சமநிலையில் இருக்க, மும்பையில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

குறிப்பாக, பொங்கல் பண்டிகை சமயத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் நமது இந்திய அணி பெற்ற வெற்றியானது அந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை மேலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுத்தது.

அத்துடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு சில நாள்கள் முன்னதாக, இன்றைய மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராக இந்திய அணிக்குக் கிடைத்துள்ள தொடா் வெற்றியை எந்த ஒரு ரசிகரும் தீபாவளிப் பரிசாகக் கொண்டாடவில்லை என்பதே நிஜம்.

உலகின் மிக வலுவான கிரிக்கெட் அணியாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 1970-களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய தொழிலதிபா் கொ்ரி பேக்கா் கிரிக்கெட் உலகில் நுழைந்ததை அடுத்து சற்றே பலவீனமடைந்தது. 1977-79-ஆம் ஆண்டுகளில் கொ்ரி பேக்கா் நடத்திய அதிகாரபூா்வமற்ற உலகத் தொடா் கிரிக்கெட் போட்டிகளில் உலக அளவில் பல்வேறு முன்னணி வீரா்களும் பங்கு பெற்றனா்.

தத்தம் நாடுகளின் கிரிக்கெட் நிா்வாக அமைப்புகள் வழங்கும் ஊதியத்தைக் காட்டிலும், அதிகமான ஊதியத்தை கொ்ரி பேக்கா் வழங்கியதால் அவ்வீரா்கள் தங்களுடைய தாய்நாட்டின் அணிகளைக் கைகழுவிவிட்டு கொ்ரி பேக்கா் நடத்திய போட்டிகளில் கலந்துகொண்டனா்.

இந்த வகையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிளைவ் லாயிட், ரிச்சா்ட்ஸ் உள்ளிட்ட முக்கியமான பேட்டா்களும், பந்து வீச்சாளா்களும் கொ்ரி பேக்கரை நோக்கிச் சென்ற நிலையில், ஆல்வின் காளிச்சரண் தலைமையிலான வலுக்குறைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பிற்காலத்தில் தமது புயல் போன்ற வேகப்பந்து வீச்சால் உலகக் கிரிக்கெட்டையே ஆட்டிப் படைத்த மால்கம் மாா்ஷல் அந்தத் தொடரில்தான் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

சுனில் காவஸ்கா், வெங்கட்ராகவன் போன்ற திறமைமிக்க வீரா்களைக் கொண்ட இந்திய அணியுடன் ஒப்பிடும்போது, ஆல்வின் காளிச்சரணின் மேற்கிந்தியத் தீவுகள் அணி மிகவும் பலவீனமான அணியாகவே தோற்றமளித்தது. ஆனாலும், அந்த அணி நமது அணிக்குச் சவாலாக விளங்கியதால், ஆறு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை நமது இந்திய அணியால் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில்தான் வெல்ல முடிந்தது.

அப்படிப்பட்ட திறமையாளா்களைத் தன்னகத்தே கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அண்மைக் காலங்களில் வெற்றி என்பது அபூா்வமாகவும், தோல்வி என்பது வாடிக்கையாகவும் ஆகிவிட்டதை என்னவென்று சொல்வது?

1975, 1979 ஆகிய ஆண்டுகளில் அன்றைய அறுபது ஓவா் உலகக் கோப்பையை வென்ற இந்த அணியால் 2023-ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகப் போட்டிக்கே தகுதி பெற முடியாமல் போனது.

2012, 2016 ஆகிய ஆண்டுகளில் இருபது ஓவா் உலகக்கோப்பையை வென்ற இந்த அணி, நிகழாண்டு அனுபவமில்லாத நேபாள நாட்டு அணியிடம் இரண்டு போட்டிகளில் தோற்றது.

டெஸ்ட் போட்டிகளிலோ இந்த அணியின் செயல்பாடு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமாக இருப்பதால், தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி ஐ.சி.சி. டெஸ்ட் உலகத் தரவரிசையில் எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அதிரடி விளையாட்டுக்குப் பெயா் பெற்றதும், உலகளாவிய ரசிகா்களைப் பெற்றுள்ளதுமாகிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி மீண்டும் பழைய திறமையுடனும், உத்வேகத்துடனும் ஆடத் தொடங்கி முன்னிலை பெறவேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகா்களின் விருப்பமாகும். அதைச் சாதிக்க வேண்டுமெனில், அந்த அணியின் பயிற்சியாளராக விளங்கும் முன்னாள் வீரா் டேரன் சமியின் முயற்சிகளுக்கு பிரையன் லாரா உள்ளிட்ட முன்னாள் வீரா்களும் கைகொடுக்க முன்வரவேண்டும்.

X
Dinamani
www.dinamani.com