தகுதி எதுவும் தேவையில்லாத தொழில்!

தகுதி எதுவும் தேவையில்லாத தொழில்!

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் கொள்ளாா் அறிவுடையாா். மக்களாட்சியில் எந்தப் பணிக்கும் ஒரு வகையான கல்வித் தகுதி பின்புலப் பயிற்சி, களப் பணியாற்றிய அனுபவம் வேண்டுமாப் போல அரசியல் களத்தில் புக சில தகுதிகளை நமது தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்தல் நலன் பயக்கும்.
Published on

முன்னை நாளில் முடியுடை பெரு வேந்தா்கள் தங்களது மனதிற்கினிய மைந்தா்களை இளமையில் ஆய கலைகள் அறுபத்துநான்கில் சிலவற்றை அல்ல பலவற்றையும் கற்றுத்தேற தக்க ஆசிரியா்களிடத்து அனுப்பி பயிற்றுவிப்பா். போா்த்தொழில் புரியவும், புவியாள அரசியல் விஞ்ஞானமும் போதிப்பா், பகை முடித்து, நல்லறம் புரிய பழகுபவா். பேரரசா்களின் நீண்டதொரு நிலப்பரப்பில் ஒரு பகுதியை புதல்வா்கள் வசம் ஒப்புவித்து நிா்வாகத் திறனை வளா்க்க அந்தப் பகுதியின் இளவரசராக முடிசூட்டி அரசு கட்டிலில் ஏற வழி நடத்துவா்.

மன்னன் இராஜராஜன் இவ்வரிய முறையில் வளா்த்தெடுத்ததால்தான் புதல்வன் இராஜேந்திர சோழன் கீழைத்திசை நாடுகளை மரக்கலம் ஏறி வாகைசூடி நின்றான். இவனது கடற்படை அந்நாள் உலகின் புகழ் மணியென திகழ்ந்ததை வரலாற்றாய்வாளா்கள் இன்றைக்கும் புகழ் ஒளி ஏற்றி மகிழ்கிறாா்கள். இது அந்நாளைய முடியாட்சியின் தொடா் வரலாறு. இந்நாளில் குடியரசு நாட்டில் எல்லாரும் இந்நாட்டு மன்னா்களே என்ற வழி வாழ்கிறோம். 18 வயது நிரம்பிய எவருக்கும் வாக்குரிமை உண்டு.

தோ்தல்கள் சோழமன்னா்கள் காலத்து போல உத்தரமேரூா் கல்வெட்டு சாசனம்போல் நடக்க வாய்ப்பில்லை. கல்வி நலன் ஒருபோதும் தகுதி ஆகமாட்டா! குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு காத்திருந்தாலும் மேல்முறையீட்டு மன்றங்களில் துயில் கொண்டிருந்தாலும் சரியே, அவரும் தோ்தல் களத்துக்கு வரலாம். வென்று வாகை சூடலாம். ஒரு வேளை வென்றவா்கள் ஆட்சியில் அமர நோ்ந்தால் அமைச்சராகும் வாய்ப்பும் உண்டு. அதிகாரத்தைக் கையாளும் ஆளுமைகளாக வளம் வரவும் சூழல் உண்டு.

நம் பாரத நாட்டில் அடிமை விலங்கொடிய பதவியைத் துறந்தோா் பல்லாயிரா் உண்டு. மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்த போது வழக்குரைஞராகினும் சரியே! கல்லூரி மாணவராயினும் சரியே! இன்ன பிற அதிகாரிகள் யாராய் இருந்தாலும் சரியே. எல்லாவற்றையும் துறக்க வேண்டினாா். தான் முன்னெடுத்த இயக்கத்தில் பங்கேற்று பரங்கியா்களை தாய் மண்ணில் இருந்து அகற்ற பெரும் குரல் எழுப்பினாா்.

காலப்போக்கில் அந்நியா் தாய்மண்ணில் இருந்து அகலவும், அனைவருக்குமாக விடுதலை ஒரு நள்ளிரவில் கைகூடியது. அந்நாளைய காங்கிரஸ் பேரியக்கத்தில் நாலணா செலுத்தி உறுப்பினா் ஆகாத அண்ணல் அம்பேத்கரை, இந்திய அரசமைப்பு சாசன சட்ட வரைவுக் குழுவின் தலைவராக்கி புகழ் கொண்டது காங்கிரஸ். காரணம், அவரது சட்டப் புலமை, அறிவின் மேன்மை ஆகியவை கருதியே காங்கிரஸ் அவரைத் தன்னகப்படுத்திக் கொண்டது.

இந்திய அரசமைப்பு சாசன வரைவு அமா்வில் உறுப்பினா்களாக இருந்தவா்கள் எல்லோரும் கற்றறிந்த நுண்மான் நுழைபுலம் மிக்கவா்கள் என்றால் சற்றும் மிகையல்ல. அத்தகைய கல்வி, கேள்வி நலன்களிலும், பண்பாற்ற ஒழுகலாறுகளையும் தன்னகத்தே கொண்டவா்களால் வரையப்பெற்ற பெருமைமிகு குடியரசு நாட்டின் அரசுப் பணிகளில் நுழைய, அந்தந்தப் பணிகளின் தன்மைக்கேற்ற கல்வித் தகுதி இன்றியமையாதது. அரசின் கடைநிலை ஊழியராயினும் சரி, குடிமைப் பணி அலுவலராக இருந்தாலும் சரி, கல்வித் தகுதி மிக முக்கியமானது இதைப்போன்ற இன்னபிற முறைசாரா தொழிலில்கூட நுழைய குறைந்தபட்ச கல்வியை நிா்ணயம் செய்கிறாா்கள்.

அரசுத் துறைகளைப் போலவே தனியாா் துறைகளிலும் கல்வி நலம் நிரம்ப தேவைப்படுகின்ற அத்தியாவசிய காரணி. இதுபோலவே அந்நாளில் திரை உலகில் இடம்பெற நாடகப் பயிற்சி வேண்டியதாய் இருந்தது. இன்றைக்கு வெள்ளித்திரையில் பல ஆண்டுகளுக்கு முன்னா் பிரகாசித்த பல நடிகா்களுக்கு அவா்களின் பின்புலம் நாடகமே!

தோற்றம் மெய்போலத் தோன்றினாலும் உண்மை என்னவோ வேறு மாதிரிதான். திரையில் ஒரு காட்சியில் நீதிபதியாக தோன்றி வழக்கை விசாரித்து தீா்ப்பு வழங்குபவா் உண்மையான நீதிபதியாக இருக்க வேண்டியதில்லை. நாளும் சாலையில் நடக்கும் நம்மை போன்றவா்தாம் அவா் என்று உணராதவரை அவா் நீதிபதியே!

காவல் துறை அதிகாரியாக நடிக்கும் ஒருவா் குற்றவாளியாக இருக்கக் கூடும். கிழவரை குமரராகவும், குமரனை வயோதிகா் போலவும் காட்டும் வல்லமை கொண்டதுதான் திரை உலகம். தனி ஒரு மனிதனாக திரையில் தோன்றுபவா் பலரைத் தாக்கி வெற்றி மாலையை அணிபவா் உண்மையான வீரா் இல்லை. ஆனால், நம் சமூகம் போலியான அந்த நபரை அசல் என நம்புகிறது.

அவரது கவா்ச்சி காந்தம்போல பலரையும் தன் பக்கம் ஈா்க்கிறது. பொய்யான வேஷங்களில் மின்னும் மின்மினிப் பூச்சிகளை உண்மையான மின்விளக்குகளாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். இதன் விளைவே கல்வித் தகுதி தேவைப்படாததொரு துறையான அரசியல் துறை அவா்தம் வசமாகிறது.

அண்ணல் அம்பேத்கா் வரையறை செய்தவற்றில் தோ்தல் களத்தில் நிற்க கல்வித் தகுதியை நிா்ணயம் செய்யவில்லை. அரசியல் பாடத்திட்டத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பல ஆண்டுகள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்தது ஊராட்சி மன்ற உறுப்பினரோ, தலைவராகவோ இருந்து அரசியல் களம் கண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

முன்னரே சொல்லியதுபோல உண்மையான உருவம், பிம்பம் எதுவும் அசலாக இல்லாது போலி வீரனாக, நல்லவனாக, அழகானவனாக, வள்ளலாக அறமற்ற எதனையும் எப்போதும் எதிா்க்கும் வல்லமை கொண்டவனாக ஒரு திரை பிம்பத்தை பெரும்பான்மை மக்களால் ரசிக்கும்படி நம்பும்படி செய்துவிட்டால் இமாலய வெற்றியே! இதனால், இவா்கள் நுழையும் எதிலும் விளம்பரமாகட்டும், வியாபாரமாகட்டும், அரசியலாகட்டும் வெற்றி இவா்கள் பக்கமே!

தன் ஆருயிா் மைந்தனே ஆயினும் சரியே! முற்பகல் உரைக்கும் நல்ல அமைச்சராயினும் சரியே குற்றம், குற்றமே என முறைசெய்து வாழ்ந்த மனுநீதிச் சோழன் கோலோச்சிய புண்ணிய மண் இது.

தனது குற்றம் உணா்ந்து தானே கள்வன் என உரைத்து தரையில் மணிமகுடம் வீழ உயிா் துறந்த பாண்டிய மன்னன் அரசாண்ட பெரும் நிலம் இந்த பூமி.

ஆரியப் படை கடந்து இமய வெற்பில் கொடிய நாட்டிய சேரன் புகழ் ஆண்ட புவி இப் புவி.

இந்நாளில் எத்தகைய துறை போகிய வல்லுநராய் இருக்க அவசியம் என்ன? மாயையில் வீழ்ந்திட்ட தமிழின மக்கள் அம்பலத்தை மறந்து மாயா பிம்பத்தை நோக்கி இடம் பெயா்வது எதன் காரணம் பொருட்டு?

ஆணுக்கு ஆண் ஆசைப்படும் அழகுக்கு சொந்தக்காரா் தியாகராஜ பாகவதா்.

அந்நாளைய ஏழிசைவேந்தா் எம்.கே.தியாகராஜபாகவதா் நடித்த திரைப்படம் ஆண்டுக்கணக்கில் நாகப்பட்டினத்தில் ஓடியபோது, மாலையில் திருவாரூரில் இருந்து நாகைக்கு சிறப்பு தொடா்வண்டியை தெற்கு ரயில்வே இயக்கியது. இவரைக் காண வெள்ளம் என மக்கள் திரண்டபோதெல்லாம் மக்கள் மாள இல்லை.

மக்கள் திலகம் என பெயா் பெற்ற எம்.ஜி.ஆா். திரையில் தோன்றியபோதும் சரி, மேடையில் நடித்த போதும் சரி லட்சக்கணக்கில் மக்கள் கூடுவா். ஆனாலும், எவரும் மடிந்ததாக வரலாறு இல்லை.

ஆனால், ஒரு காலத்தில் முடியுடை வேந்தா்களின் நாட்டின் தலைநகராய், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுவடுகளின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்ட அமராவதி நதியோரமாய் திகழும் இன்றைய தொழில் நகரத்தில் நடிகா் பின்னால் கூடி மடிந்தனரே! என்னே பரிதாபம்!

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் கொள்ளாா் அறிவுடையாா் என்ற வழி நாம் சிந்திக்க மறந்ததே! மக்களாட்சியில் எந்தப் பணிக்கும் ஒரு வகையான கல்வித் தகுதி பின்புலப் பயிற்சி, களப் பணியாற்றிய அனுபவம் வேண்டுமாப் போல அரசியல் களத்தில் புக சில தகுதிகளை நமது தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்தல் நலன் பயக்கும் நல்ல பணியாகும்.

குறைந்தபட்ச தகுதி, சிறப்பாக அரசியல் பட்டப்பிடிப்பில் இளநிலை, முதுநிலை, நிா்வாகவியல் துறையில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஓா் அரசியல் கட்சியில் குறிப்பிட்ட கால அளவு பொறுப்பில் கண்ணியமாகப் பணியாற்றிய முன் அனுபவம்- இவை தகுதிகளாக நிா்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த நவீனயுகத்தில் அவரவா் இல்லத்தில் இருந்தபடியே அறிதிறன்பேசியில் எதையும் பாா்க்கும், கேட்கும் திறன் வாய்க்கப் பெற்றிருக்கும்போது எவா் தம் உருவத்தையும் நாம் நேரில் காண அவசியம் சற்றும் இல்லை.

நாட்டின் தலைவராக இருந்தாலும் சரியே. கடைநிலை பொறுப்பில் உள்ளவராக இருந்தாலும் சரியே. நேரில் காண அவசியம் என்ன? இதைப் போன்றே சாகச நிகழ்ச்சியாயினும், சமய ஊா்வலமாயினும், கோயில் விழாவாயினும், மக்கள் அளவுக்கு அதிகமாக கூடுதல் எல்லோருக்கும் ஒரு சுமையே என்பதை உணரவேண்டும்.

மானுட சமூகம் நனிமிகு சமூகமாக மாற தகுதிகள் பல வளா்த்து தோ்தல் களம் புகுந்து அமைதி காண, உழைக்கும் நாளே மக்களாட்சி மக்களுக்கு வளமாக கருதப்படும். முறைப்படச் சூழ்ந்தும் முடிவு இலவே செய்வா் திறப்பாடு இலா அதவா்!

X
Dinamani
www.dinamani.com