

மாணவர்களிடையே 'மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது 'தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
கூடுதலாக, 'தமிழை பிற சொற்கள் கலப்பின்றி பேசுங்கள் என்பதையும், தமிழில் எழுதிப் பழகுங்கள், படியுங்கள்' என்பதையும் சொன்னேன். அந்த வேண்டுகோளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போதைய இராக், சிரியா, துருக்கி தேசங்களின் சில பகுதிகளுக்கு முந்தைய பெயர், மெசபடோமியா. மிகத் தொன்மையான நாகரிகம் பிறந்த இடம். அந்த மக்கள் அப்போது பேசிய மொழி, சுமேரியா. இப்போது அந்த மொழி வழக்கில் இல்லை. ரோமாபுரி பெரும் பேரரசு; அதுவும் மிகத் தொன்மையான நாகரிகம் கொண்டது. அந்த மக்கள் பேசியது, லத்தீன் மொழி. தற்காலத்தில் சில லத்தீன் சொற்கள் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களாக இருக்கிறது. சில மத நிகழ்ச்சிகளில் உச்சரிக்கப்படுகிறது. மற்றபடி லத்தீன் மொழியும் பேச ஆளில்லாமல் தற்போது பேச்சு வழக்கில் இல்லை.
அதேபோல தொன்மையான பல கிரேக்க மொழிகள் வழக்கொழிந்து விட்டன. சீனாவில் ஒரு காலத்தில் பலராலும் பேசப்பட்ட மன்சு மொழி பேசுபவர்கள் இப்போது மிகக் குறைவு. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனிய தீவில் புழக்கத்தில் இருந்த அனைத்து மொழிகளும் ஆங்கிலேயர் காலனி ஆட்சி செய்த போது அழிந்துவிட்டன.
யுனெஸ்கோவின் கணக்குப்படி தற்போது உலகின் பல பகுதிகளில் மொத்தம் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. அதே யுனெஸ்கோவின் கணிப்புப்படி இவற்றில் 40% அதாவது, 2,800 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. பேசுபவர்கள் இல்லாமல் போக, அந்த மொழிகள் காணாமல் போய்விட்டன.
அந்த 40 சதவீதத்தில் தமிழ் வராமல் இருக்க வேண்டும். இது என்ன அதிசயம்! நாம் தமிழில் பேசிக் கொண்டு தானே இருக்கிறோம்? என்று சிலர் யோசிக்கலாம். 'நான் சொல்வது ரைட்டு தானே? நீங்க அக்ரி பண்ணலையா? சம் பீப்பிள் வில் நாட் அக்ரி. தட் இஸ் ஓகே' என்பது போலத்தான் தற்போது தமிழில் பலரும் பேசுகிறார்கள்.
அவர்கள் பேசுவது தமிழ் இல்லை; ஆனால், 'கஞ்சி குடிப்பதற்கு இலார். அதன் காரணங்களும் இன்னதென்று அறியார்' என்று பாரதியார் பாடியதைப் போல, தாங்கள் பேசுவது தமிழ் இல்லை என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மற்ற மொழிச் சொற்கள் கலவாமல் அவர்களால் தமிழ் பேசவே முடியாது. மற்ற மொழிகளில் முதன்மையானது மட்டும்தான் ஆங்கிலம். எனவே, ஆங்கிலம் தவிர சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டுமல்ல; இன்னும் சில பிற மொழிச் சொற்களும் தாராளமாக தமிழ் பேசுபவர்களிடம் கலந்திருக்கின்றன.
தூய தமிழ்ச் சொற்கள் இருக்க ஏன், பூஜை, ராஜா, ஜீவன், ஜவாப், வக்காலத்து, தபால், சாவடி, நாயக், அலமாரி, செக், சாவி, மேசை, ஜன்னல், உதாரணம் போன்ற இன்னும் பல சொற்களையும் (கவனிக்கவும் சாதாரணமாக அல்ல) எளிதாகப் பயன்படுத்துகிறோம்? ஆங்கிலம் குறித்து கேட்கவே வேண்டாம். தமிழில் பேசுகிறவர்களில் பலர் வாக்கியத்தின் தொடக்கத்தில் அல்லது முடிவில் ஓரிரு தமிழ் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு, மற்றபடி அதிகமான ஆங்கில சொற்களாலேயே வாக்கியங்களை அமைக்கிறார்கள்; பேசும்போது மட்டுமல்ல, எழுதும் போதும் அப்படியேதான்.
'இங்கே இம்மீடியட்டா வாங்க', 'ஓகே சார். குட் மார்னிங் சார்', 'ப்ளீஸ் டேக் யுவர் சேர்', 'தேங்க்யூ சார்', 'நான் சொல்றத லிசன் பண்ணுங்க. அண்டர்ஸ்டாண்ட் ஆகலைன்னா கொஸ்டின் பண்ணுங்க', 'ஓகே சார்'.
இப்படி உரையாடுபவர்கள் தவிர, இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இவர்களைவிட இன்னும் சில படிகள் மேலே போய், முழுவதும் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவர்களிடம் தமிழில் பேசுங்கள் என்று கூறினால், வெட்கமே இல்லாமல் 'சாரி' என்றுகூட சொல்ல மாட்டார்கள். நேரடியாக, 'ஐ டோன்ட் நோ' தமிழ் என்பார்கள்.
அப்படிச் சொல்பவர்களில் சிலருக்கு தமிழ் தெரிந்திருக்கலாம். ஆனாலும்கூட அவர்கள் சபையில் கிடைக்கும் பெருமைக்காக அல்லது அவர்களை விவரம் தெரிந்தவர்களாக மற்றவர்கள் நினைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, தமிழ் தெரியாது என்பார்கள். ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். இடையில் ஹிந்தி சொற்களைக்கூட பெருமையோடு கலப்பார்கள். ஆனால் மறந்தும், தவறியும் தமிழில் பேசி விட மாட்டார்கள்.
எட்டு கோடி தமிழர்கள் வாழ்கிறோம். ஒரு மொழியை தொடர்ந்து பேசவும் எழுதவும் படிக்கவும் வளர்க்கவும் இதைவிட ஒரு பெரிய எண்ணிக்கை தேவையா? பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டின் மொழிகள்தான் பேசப்படுகின்றன. அந்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நம் தமிழ் மக்களின் எண்ணிக்கை அளவுதான்.
எப்படிப்பட்ட மொழி! செம்மொழி! எத்தனை இலக்கியங்கள் எப்படிப்பட்ட இலக்கணங்கள்!! எவ்வளவு அறிவுசார் விடயங்கள் இருக்கிற மொழி, தமிழ்!!! அந்த மொழியில் பேசுவது எவ்வளவு பெருமை! அதை பேசுவதில் என்ன தயக்கம்? ஏன் செய்வதில்லை?
விழுப்புரம் அருகில் ஒரு கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்க என்னை அழைத்திருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே தமிழில் இருந்தது. மற்றபடி, வரவேற்புரை முதல் கல்லூரி நிர்வாகத்தில் இருந்தவர்களுடைய உரைகள், மாணவர்களுடைய உரை, நன்றி உரை என அனைத்தும் ஆங்கிலத்தில்; மேடையில் அமர்ந்தபடி பேசுபவர்களையும் பார்வையாளர்களையும் கவனித்தேன்.
ஆங்கிலத்தில் பேச கட்டாயப்படுத்தப்பட்டிருந்த சில மாணவர்களுக்கு அது அந்நிய மொழி. எவரோ எழுதிக் கொடுத்ததை வாசிக்க வேண்டும். அல்லது மனனம் செய்து பேச வேண்டும் என்ற நிலை. தட்டுத் தடுமாறி பேசி முடித்தார்கள். அதை பெரிய வெற்றி என்று நினைத்தார்கள். பார்வையாளர்கள் அந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தவில்லை. காரணம், அது அவர்களுக்கு முழுவதும் புரிந்திருக்காது.
ஆனால், அப்படி ஒரு நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் நடத்தி முடித்ததில் நிர்வாகத்தினருக்கும் பெருமைதான். மேடையில் இருந்தவர்களும் பார்வையாளர்களும் தமிழர்களாக இருக்க, ஏன் ஆங்கிலத்தில் பேச வேண்டும்? இது என்ன ஒரு கட்டாயமா? (சடங்கா? என்ற வார்த்தை தோன்றுகிறது. ஆனால், அது தமிழ் இல்லை என்று தவிர்க்க நினைக்கிறது மனது).
ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை. பல்வேறு நிறுவனங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்கிறது என்பதாலும், அயல்நாடுகளில் இருப்பவர், பிற மாநிலங்களில் இருந்து வந்து பணி செய்வதோடு உரையாட ஆங்கிலம் தேவை என்பதெல்லாம் சரி. மேற்படிப்புகளுக்கும் ஆங்கிலம் தேவை என்பது சரி.
எனவே, தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலமும் தேவை. அதையும் தவறின்றி, சரியாகப் பேச, எழுத வேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல்தான். அதற்காக தமிழை ஏன் விட்டுவிட வேண்டும்? இது தனி; அது தனி. இரண்டும் செம்மையாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில், தமிழில் தொடர்ந்து நாம் பேசாமல் விட்டால், ரயில் நிலையங்களில், வங்கிகளில் மற்றும் ஏனைய பொது இடங்களில் தமிழில் பேசாமல் விட்டால், சமரசம் செய்துகொண்டு ஆங்கிலத்திலோ அல்லது புதிதாக வேலைக்கு வந்து இருப்பவர்கள் பேசுகிற ஹிந்தியில் பேசத் தொடங்கினால், தமிழ் என்னவாகும்? அது குறித்த விழிப்புணர்வு இல்லை. அப்படி செய்கிறோம் என்கிற உணர்வும் இல்லை.
தொடர்ந்து பல்வேறு தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்; தமிழ் தெரிந்தவரிடம் தமிழில் மட்டுமே பேச வேண்டும்; தமிழ் தெரியாதவர்களிடமும்
தமிழைக் கற்றுக் கொடுக்கும் விதம் அவர்கள் நம் மாநிலத்தில் இருந்தால் செய்ய வேண்டும். சமரசம் செய்து கொள்கிறோம், நல்லவர்களாக நடந்து கொள்கிறோம் என்று நம் மொழியை விட்டுக் கொடுத்து, பிற மொழியைப் பயன்படுத்துகிற போது நம் மொழி அழிவதைத் தடுக்க இயலாது.
தமிழில் பேசுதல் படித்தல், எழுதுதல் அவசியம். அது கட்செவியோ (வாட்ஸ் ஆப்), மின்னஞ்சலோ (இ 'மெயில்), குறுஞ்செய்தியோ (மெசேஜ் ' எஸ்எம்எஸ்) எதிலும் தமிழில் எழுதலாம். அதற்கான வசதிகள் இருக்கின்றன. பேசினால் தமிழில் தட்டச்சு செய்கிற வசதிகள் கூட உண்டு; பயன்படுத்த கொஞ்சம் முயற்சியும் மனதும் வேண்டும். இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்!
அந்த விதி தமிழர்களிடம் மட்டுமல்ல. தமிழ் தெரிந்தவர்கள் அனைவரிடமும் தமிழில் மட்டுமே பேசுவோம், எழுதுவோம். பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு இருந்து வரும், செழுமையாக வளர்ந்து வரும், செம்மொழியாம், தமிழ் மொழி வேறு எவருக்கும் கிடைக்காத சொத்து. நம்மால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இல்லாமல் போய்விடக் கூடாது.
கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.