செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி!

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
artificial intelligence
artificial intelligenceபடம் | ஏஎன்ஐ
Published on
Updated on
3 min read

எஸ். எஸ். ஜவஹர்

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது. ஆனால், இப்போது, மனிதனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆனால், அது லாபம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.

மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல், புதிய மருந்துகள் உருவாக்கம், துல்லியமான மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு என எல்லாத் துறைகளிலும் இதன் தடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு எக்ஸ் ரே அல்லது எம்.ஆர்.ஐ. படத்தில் மனிதக் கண்களால் காண முடியாத நுண்ணிய மாற்றங்களை ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறை (அல்காரிதம்) கண்டறிய முடியும்.

இந்த முறையில் மனித தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, விரைவான தீர்வுகளுக்கும் வழிவகுக்க முடியும். இதனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே துல்லியமாக அடையாளம் காண முடியும்.

நோயாளியின் மரபணு, வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்றவற்றை சில விநாடிகளில் அலசி ஆராய்ந்து, அவருக்கென தனித்துவமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதுவே "தனிப்பட்ட மருத்துவம்' என்ற புதிய பரிமாணத்தை மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைத் துறையில் உருவாக்கியுள்ளது.

மருந்து ஆய்வகங்களிலும் இதுவரை கண்டிராத புரட்சியை இது உருவாக்கத் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்து சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் திறன் இதற்குண்டு; இதனால், மருந்துக் கண்டுபிடிப்பு ஆண்டுகள் அல்ல, மாதங்களில் முடிகிற நிலை உருவாகி வருவது கண்கூடு. எனவே, குறைந்த விலையில் சிறந்த மருந்துகள் உருவாகும் வாய்ப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

இன்றைய அளவில் மருத்துவமனைகளின் நிர்வாகச் சுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரடியாகச் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வயது முதிர்ந்தோரின் மக்கள்தொகை தொடந்து அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பெரும் உதவியாக இருக்கும்.

தொலைநிலை மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பு எளிதில் சாத்தியமாவது மனிதகுல வரப்பிரசாதம். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மூலமாக மருத்துவ சிகிச்சை மற்றும் உதவியை நகரங்களின் எல்லைகளைத் தாண்டி கிராமங்களுக்கும், ஏன் வீடுகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு மற்றும் அரசு மருத்துவ நல்வாழ்வுத் திட்டங்கள் ஆயுஷ்மான் பாரத், தமிழ்நாடு மருத்துவ நலவாழ்வு திட்டம் போன்றவை மக்களின் நல்வாழ்வு பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செயற்கை நுண்ணறிவை இவற்றில் பயன்படுத்தும்போது இந்தத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவும் செயல்திறனை அதிகரிக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

நோயாளிகளின் மருத்துவ வரலாறு, மருந்து உபயோக நடைமுறை, மற்றும் ஆபத்து மதிப்பீட்டுத் தரவுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகள் துல்லியமான தீர்மானங்களை எடுத்து விடும். இதன்மூலம் போலி காப்பீட்டு கோரிக்கைகள் குறையவும், உண்மையான பயனாளிகளுக்கு விரைவான நிதி உதவி சென்றடையவும் வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவு ஊடாக மருத்துவ வசதிகளைத் திட்டமிடும் அரசின் திறனும் மேம்படும். எந்த மாவட்டத்தில் அல்லது எந்தப் பகுதியில் எத்தகைய நோய் அதிகம் பரவுகிறது, எந்த இடங்களில் மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள் அல்லது எத்தகைய மருந்துகள் கையிருப்பு தேவைப்படுகின்றன போன்ற விவரங்களை முன்கூட்டியே கணிக்கும் திறனுடன் அரசுத் திட்டங்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட முடியும். இதனால், மருத்துவ சிகிச்சை செலவுகள் மட்டுமின்றி உயிரிழப்புகள்கூட குறையும்.

செயற்கை நுண்ணறிவின் பலம் மனிதநேய நோக்குடன் இணைந்தால்தான் அது உண்மையான மருத்துவ விடுதலைப் புரட்சியாக மாறும். ஆனால், இதன் மறுபக்கம் மிகவும் கூர்மையானது. தனி நபரின் மருத்துவத் தரவுகள் என்பது மிக ரகசியமான தனிப்பட்ட சொத்தாகும். அவரது அனுமதியின்றி அந்தத் தரவுகளை மருத்துவமனைகளோ அல்லது வேறு வணிக நிறுவனங்களோ லாப நோக்கில் பயன்படுத்தும் ஆபத்தை மறுக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவு படிமுறைகள் (அல்காரிதம்) அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளை மட்டுமே சார்ந்திருப்பதால், சமூக சார்புகள் அதில் ஊடுருவும் வாய்ப்பும் ஆபத்தும் அதிகம். இது சமத்துவமின்மையை உருவாக்கும் அல்லது இருப்பதை அதிகரிக்கும்.

விலை உயர்ந்த கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மருத்துவ சேவை பொருளாதார ரீதியில் வசதி உள்ளவர்களுக்கே கிடைக்கும் என்ற நிலை உருவாகி விடும். அதேபோல், கணினி மற்றும் மென்பொருள் பயன்பாடுகளைக் கையாளும் திறன் படைத்தோர் மட்டும் பயன் அடைய முடியும் என்ற நிலை உருவாகி சமூகத்தில் உள்ள எண்மப் பிளவை மேலும் அதிகரித்து விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் மிகப் பெரிய சிக்கல் பொறுப்புக்கூறல் குறித்ததுதான்.

ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக நோயைக் கண்டறிந்தாலோ அல்லது தவறான சிகிச்சை அளித்துவிட்டாலோ அந்த மருத்துவ சேவை குறைபாட்டுக்கும், அதன் விளைவுகளுக்கும் யார் பொறுப்பு ஏற்பது? மருத்துவரா, மருத்துவமனையா அல்லது மென்பொருள் நிறுவனமா? இந்த பிளாக் பாக்ஸ் சிக்கல் நீதியியல் உலகையே குழப்புகிறது.

மேலும், மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவின் மீது முழுமையாகச் சார்ந்தால், அவர்களின் தீர்மானிக்கும் தனித் திறனும் மருத்துவ நுண்ணறிவும் மங்கும் அபாயம் உண்டு. அதே சமயம், லாப நோக்கத்தை மட்டுமே கொண்ட சில நிறுவனங்கள் தேவையற்ற சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவின் பெயரில் பரிந்துரைத்து மக்களைச் சுரண்டும் ஆபத்தும் மறுக்க முடியாதது. இதை சமநிலைப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் மிக முக்கியமான பொறுப்பாகும்.

தனிநபர் மருத்துவத் தரவுகளைப் பாதுகாக்கும் வலுவான சட்டங்கள் அவசியம். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என வரையறுக்கும் சட்ட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு சமூகப் பிரிவினரிடமும் பரிசோதிக்கப்பட்டு, சார்பற்றவை என்ற சான்று பெற்ற மாதிரிகளே மருத்துவத் துறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இறுதி முடிவை எப்போதும் மனித மருத்துவரே எடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்களும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். லாப நோக்கத்தைக் கடந்து, பொதுநல நோக்கத்தையும் நெறிமுறையையும் இணைத்த வடிவமைப்புகள் தேவை. மேலும், மலிவு விலையில் பலருக்கும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு அவர்களின் தரவுகளைப் பயன்படுத்துகிறது என்பதை அறியும் உரிமை நோயாளிகளுக்கும் இருக்க வேண்டும். மருத்துவம் பயில்பவர்களுக்கு மருத்துவக் கல்வியோடு எண்மக் கல்வியும் சேர்த்து வழங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கு மருத்துவக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத் திட்டங்களைச் சேர்க்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக, மருத்துவக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

மக்களும் தங்கள் தரவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களின் உரிமை காக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தரமான மருத்துவ சேவையை ஜனநாயகப்படுத்தும் திறனைக் கொண்டது. ஆனால், அதன் பயன் சிலருக்கு மட்டும் சுருங்கிவிடாமல், மக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும். அதற்கு வலுவான சட்டங்கள், தெளிவான நெறிமுறைகள், சரியான மனித மேற்பார்வை, சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை இணைந்திருக்க வேண்டும்.

இறுதியில், செயற்கை நுண்ணறிவு என்பது ஓர் இருமுனைக் கத்தி; சரியான கைகளில் இருந்தால் அது உயிரைக் காப்பாற்றும் கருவி; தவறான கைகளில் விழுந்தால் அது நியாயத்தையும் நம்பிக்கையையும் காயப்படுத்தும் ஆயுதமாக மாறும்.தொழில்நுட்பத்துக்கும் மனிதநேயத்துக்கும் இடையே சமநிலையைப் பேணும் நாடுகள்தான் எதிர்கால மருத்துவத்தின் உண்மையான தலைவர்கள்!

கட்டுரையாளர்:

ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com