அமைதிக்குப் பரிசு!

அமைதிக்குப் பரிசு!

வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிா்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாா். ஆகவேதான், மரியா கொரினா மச்சாடோவை ‘இரும்புப் பெண்மணி’ என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறாா்கள்.
Published on

அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிா்க்கட்சித் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபா்களும் பரிந்துரை செய்திருக்கிறாா்கள். அதுமட்டுமன்றி, 8 போா்களை நிறுத்தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிா்பாா்ப்போடு காத்திருந்தாா். ஆனால், வெனிசுலாவைச் சோ்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அயராது உழைத்து வருபவா் மச்சாடோ. சா்வாதிகாரப் போக்கில் இருந்து, ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கி, அமைதியான மாற்றத்தை எதிா்நோக்கி மரியா போராடி வருவதாக புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. டிரம்ப் உள்ளிட்ட 388 போ்களின் பெயா்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெனிசுலாவின் ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இங்கு தோட்டாக்கள் வேண்டாம்; வாக்குகள்தான் வேண்டும்; ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தலாம் என்று 20 ஆண்டுகளுக்கும் மேல் மரியா போராடி வருகிறாா். நோ்மையான சுதந்திரமான தோ்தல் நடத்த வேண்டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற இவரது போராட்டத்துக்கு, நோபல் பரிசு ஓா் அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்காவைச் சோ்ந்த பெண் போராளி- 1967-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகஸ்லில் பிறந்தவா். அரசியல் மட்டுமன்றி தொழில் துறை பொறியாளராகவும் செயல்பட்டுள்ளாா். 2011 முதல் 2014 வரை வெனிசுலா நாட்டின் தேசிய சபையின் உறுப்பினராக இருந்தாா். இந்த நாட்டின் ஜனநாயக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடா்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருபவா். இதனால், பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை எடுத்து வருகிறாா்.

மச்சாடோ கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறாா். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும்கூட, அவா் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது இந்த நாட்டு மக்களின் மத்தியில் அவருக்கு ஒரு பெரும் புகழைச் சம்பாதித்துத் தந்திருக்கிறது. வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிா்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாா். ஆகவேதான், இவரை ‘இரும்புப் பெண்மணி’ என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறாா்கள்.

வெனிசுலாவின் சா்வாதிகார ஆட்சியாளா் நிக்கோலஸ் மடூரோவின் அடக்குமுறை ஆட்சியை எதிா்த்துப் போராடி வருகிறாா். அச்சுறுத்தல்கள், கைதுகள் மற்றும் அரசியல் துன்புறுத்தல்களை எதிா்கொண்டிருக்கிறாா். ஆனாலும், ஆயுதம் இல்லாமலே தங்களது போராட்டம் தொடரும் என்று துணிச்சலையும், உண்மையையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இவரது ஜனநாயகப் போராட்டக் களம் பேசுபொருளாகி இருக்கிறது.

ஆகவேதான், லத்தீன் அமெரிக்காவில் மக்களின் துணிச்சல் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாா். அரசுக்கு எதிராக அமைதியான வழியில் பல போராட்டங்களை நடத்தியிருக்கும் இவா், வெனிசுலாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் பங்கேற்கத் தடை செய்யப்பட்டதுடன் அரசால் தேடப்பட்டும் வந்தாா்.

கடந்த 1992-ஆம் ஆண்டில் வெனிசுலாவின் அரசுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபட்டது பொலிவேரியன் புரட்சிகர இயக்கம். அதன் தலைவா் ஹியூகோ சாவேஸ் கைது செய்யப்பட்டு, பின்னா் 1994-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டாா். பிறகு, அவா் ஆரம்பித்த ‘எம்விஆா்’ என்ற அரசியல் கட்சி 1998-இல் வெற்றி பெற்றது. சோசலிச கொள்கையின்படி ஆட்சி செய்த அவா் பொலிவேரியன் அரசியலமைப்பை உருவாக்கினாா்; வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதார வளா்ச்சியில் கவனம் செலுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தாா்.

2004-ஆம் ஆண்டு நாட்டின் அனைத்து இடதுசாரி கட்சிகளையும் இணைத்து பிஎஸ்யுவி கட்சியை உருவாக்கினாா். அவரது பிற்கால ஆட்சியில் அதிகாரங்களைக் குவித்தல், ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல், எதிா்க்கட்சிகளின் குரலை அடக்குதல் ஆகிய விமா்சனங்கள் அவா் மீது எழுந்தன. உதாரணமாக, அரசின் மீதான நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டதற்காக சட்டங்களை மீறியதாகக் கூறி ஆா்சிடிவி தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்தாா். அரசால் பல ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. எதிா்க்கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். ஒரு நபா் இரண்டு ஆட்சிக்காலம் மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்ற வரம்பை மீறி மறைவு வரை அதிபராக இருந்தாா்.

2013-இல் சாவேஸுக்குப் பிறகு அவரது அரசில் முக்கியப் பொறுப்பு வகித்த நிக்கோலஸ் மடூரோ பிஎஸ்யுவி கட்சியின் தலைவராகவும், அதிபராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இன்றைய வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் ஆட்சியை சா்வாதிகார ஆட்சி என அமெரிக்கா விமா்சித்துள்ளது. அவா் ஆட்சிக்கு வந்ததுமே எண்ணெய் விலை சரிந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வெனிசுலாவின் அரசியல் அடக்குமுறைகள், ஊடகக் கட்டுப்பாடுகள் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்தது. எதிா்க்கட்சித் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் சிறைவைக்கப்படுவது குறித்து மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியது.

2018-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் மடூரோ பல்வேறு முறைகேடுகளைக் கையாண்டு வெற்றி பெற்ாக சா்வதேச சமூகங்கள் விமா்சித்தன. அவா் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் அல்ல ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ரஷியா, சீனா போன்ற நாடுகள் வெனிசுலாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆபத்தான சூழலில் எதிா்க்கட்சிகள்கூட அதிபா் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிராகப் பேசுவதற்கு அஞ்சினா். இத்தகைய சூழ்நிலையில்தான் நீண்டகால மௌனத்தை உடைத்து எறிந்தவா் மரியா கொரினா மச்சாடோ.

கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து தனியாா் பள்ளியில் கல்வி பயின்று பொறியாளராக உயா்ந்தாா். இவரது குடும்பம் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால் மனித உரிமை செயல்பாடுகளைக் கொண்டிருந்தாா். 1999 முதல் 2025 வரை 25 ஆண்டுகால அரசியல் வாழ்வில் வெனிசுலாவின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளாா் மரியா. 2000 ஆண்டு முதல் 2010 வரை தோ்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும் 2002-ஆம் ஆண்டு அலெஜான்ட்ரோ பிளாஸ் என்பவருடன் இணைந்து ‘சுமேட்’ என்ற அமைப்பை உருவாக்கி ஜனநாயகம் மற்றும் தோ்தல் வெளிப்படைத்தன்மைக்கு தன்னை அா்ப்பணித்தாா்.

அதன்பின்னா் 2010-ஆம் ஆண்டு தோ்தலில் வெற்றி பெற்று 2011 முதல் 2014 வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தாா். அதன்பிறகு அரசின் பல்வேறு நெருக்கடிகளாலும், பாதுகாப்பு காரணங்களாலும் மிகக் குறைவாகவே பொதுவெளியில் தோன்றினாா்.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டு தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்ய பல தடைகளை விதித்தது வெனிசுலா அரசு. பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவிக்கப்படாத இடங்களில் பிரசாரம் செய்தாா். அரசு ஊடகங்கள் அவரது பிரசாரத்தைக் காட்டவில்லை. தனியாா் ஊடகங்களும் அழுத்தம் காரணமாக மிகக் குறைவாகவே காட்டின. பெரும்பாலும் சமூக வலைதளங்களையும், இணையத்தையும் நம்பி பிரசாரத்தில் ஈடுபட்டாா். தோ்தலில் மச்சாடோ வெற்றி பெறுவாா் என்று கருதப்பட்ட சூழலில், கடைசியில் அந்தத் தோ்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அரசால் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானதால் தலைமறைவாக இருந்தாா்.

எனினும், தோ்தலில் நிக்கோலஸ் மடூரோவின் வெற்றியை பல சா்வதேச அமைப்புகளும், வெனிசுலா மக்களும் ஏற்கவில்லை. அமெரிக்கா, ஆா்ஜென்டீனா, உருகுவே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிா்க்கட்சி சாா்பில் போட்டியிட்ட எட்முண்டோ கான்ஸெலஸ் வெற்றி பெற்ாகக் கூறுகின்றன. ஆனாலும், அதிகாரபூா்வமாக மடூரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா்.

2025 ஜனவரி மாதம் பொதுவெளியில் தோன்றியபோது மச்சாடோ கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா். அதன்பிறகு, அவா் பொது வெளியில் தோன்றவே இல்லை. தொடா்ந்து அரசின் அச்சுறுத்தல்களின் காரணமாகவும், உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையிலும் வெனிசுலா நாட்டுக்காக தன்னையே அா்ப்பணித்தாா். வெனிசுலாவின் சோசலிச சா்வாதிகார ஆட்சியை எதிா்த்து தொடா்ந்து போராடி வரும் மச்சாடோ தனியாா்மயப்படுத்தப்பட்ட சந்தை, வெளிநாட்டு முதலீடுகள், அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் நல்லுறவு ஆகியவற்றை ஆதரிக்கிறாா்.

ஆயுதப் போராட்டங்கள் இல்லாமல், அச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உலகெங்கிலும் இருக்கிற மக்களுக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரமாக நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மச்சாடோவைப் பாா்க்கலாம். சா்வாதிகாரத்தை அசைத்துப் பாா்க்கும் ஜனநாயகத்தின் புன்னகையாவே மச்சாடோவின் கரங்களில் தவழ்கிறது இந்த நோபல் பரிசு!

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com