அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!

அண்ணாவின் அரசியல் நாகரிகமும் காங்கிரஸ் எதிர்ப்பையும் தாண்டிய பெருந்தன்மையும் பற்றி...
அறிஞர் அண்ணாவும் பெரியாரும்..!
அறிஞர் அண்ணாவும் பெரியாரும்..!
Published on
Updated on
3 min read

மக்களுக்காக அரசியல், அரசியலுக்காக மக்கள் அல்ல என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா. "அடைந்தால் திராவிட நாடு இல்லையெனில் சுடுகாடு'எனச் சொல்லித்தான் திமுகவை அவர் வளர்த்தார்.

திமுகவின் வளர்ச்சியில் மிரண்டு போன காங்கிரஸ் அரசு, பிரிவினை பேசும் கட்சிகளைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. பிரிவினைவாதிகளைக் கைது செய்யவும் திட்டமிட்டது. இந்தச் சட்டம் திமுகவை தடை செய்ய என்பதை உணர்ந்த அண்ணா, மக்களுக்காகத்தான் அரசியல் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பாளரான அவர், "திராவிட நாடு உருவாவதற்கான காலம் கனியும் வரை எமது தரத்தை பலமுள்ளதாக உருவாக்குவேன்' என்று சொன்னார். அதனால்தான், சீனப் படையெடுப்பின்போது திராவிட நாடு கொள்கையை தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் போதும் எதிர்க்கும் போதும்கூட அவரது அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது. "காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரும் செய்த நல்லவை எதையும் நான் மறுக்கவும் இல்லை; எதிர்க்கவுமில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரûஸயும் அதன் செயல்பாடுகளையும்தான் எதிர்க்கிறேன்' என்று சொன்னார் அண்ணா.

ஆகஸ்ட் 15-ஆம் தேதியை துக்க நாளாக பெரியார் அறிவித்தபோது அண்ணா அந்தக் கருத்தை ஏற்கவில்லை. "இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக்கண்டத்தின் மீது இருந்து வந்த பழிச்சொல்லை, இழிவை நீக்கும் அந்த நாள் திராவிடருக்கும் திருநாள், துக்க நாள் ஆகாது' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

திமுகவின் வளர்ச்சி அன்றைய பாரதப் பிரதமராக இருந்த பண்டித நேருவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் திமுகவைப் பிரிவினை சக்தியாக நினைத்தார். திமுகவின் குரல் நாடாளுமன்றத்தில் உரிமைக் குரலாக இருந்தது. திமுகவை நாடு கடத்தப்பட வேண்டியவர்கள், "நான்சென்ஸ்' என்று சாடினார் நேரு. இதைக் கண்டித்து, தமிழ்நாட்டுக்கு வந்தபோது விமான நிலையத்தில் பெருந்திரளாக திமுகவினர் கூடி நேருவுக்கு கருப்புக் கொடி காட்டினார்கள்.

நேருவின் மீது இவ்வளவு கோபம் காட்டிய அண்ணா, சீனா இந்தியாவின் மீது படையெடுத்தபோது அவரது நடவடிக்கையைப் பாராட்டவும், அவரை ஆதரிக்கவும் தயங்கவில்லை. "எந்த ராஜதந்திரியும் பண்டித ஜவாஹர்லால் நேருபோல் உண்மையான யோக்கியமான முயற்சியில் இவ்வளவு முழுமையாக ஈடுபடவில்லை' என்று பாராட்டினார் அண்ணா. ஒரே நாளில் போர் நிதியாக ரூ.35,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் திரட்டி அன்றைய முதல்வரிடம் தரப்பட்டது.

"முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.

அண்ணா முதல்வராகப் பதவியேற்ற சில நாள்களில் செய்யாறு தொகுதியில் இருந்து திமுகவினர் வந்தனர். அவர்கள் எங்கள் ஊர் பள்ளியின் தலைமை ஆசிரியர் காங்கிரஸ்காரர், அவர் காங்கிரஸ் தலைவர் பா.ராமச்சந்திரனுக்கு நெருங்கிய உறவினர். எனவே, அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

""தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர்கள் இல்லாத ஊர் எது என்று தேடிப் பிடித்து எனக்குக் கூறுங்கள்; அந்த ஊருக்கு அவரை மாற்றி விடலாம்'' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் என்றார் முதல்வர் அண்ணா. ஆட்சியதிகாரம் மக்களுக்காகத்தானே தவிர, பழிவாங்குவதற்கு அல்ல என்பதைத் தெளிவாக கட்சிக்காரர்களுக்கும் புரிய வைத்தார் அண்ணா.

"அண்ணா ஒரு சரித்திரம்; அவர் ஒரு சகாப்தம்' என்பதெல்லாம் வெறும் புகழ்ச்சி வார்த்தை அல்ல. அவை உண்மைதான் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியவன் என்பதால் என்னால் சொல்ல முடியும். வேலூர் நகர சபை சார்பில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை திறக்க வேலூர் வந்தபோதுதான் நான் முதல் முதலில் அண்ணாவைப் பார்த்தேன்.

மகாத்மா காந்தி சிலையை அண்ணா திறப்பதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. கடை அடைப்பும் நடத்தியது. மகாத்மா காந்தி எங்களுக்கே சொந்தம் என்று காங்கிரஸ் உரிமை கொண்டாடிய காலம் அது.

காந்தி சிலையைத் திறப்பதை காங்கிரஸ் எதிர்த்ததற்குக் காரணம், காங்கிரஸ் கட்சியை அண்ணா கடுமையாக எதிர்த்தார், விமர்சனம் செய்தார் என்பதுதான். ஆனால், வேலூர் நகர சபையின் தலைவராக இருந்த சீதாபதி சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மகாத்மா காந்தி சிலையை அண்ணாதான் திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக பிடிவாதமாக இருந்தார். எனவே, காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு எடுபடவில்லை.

சிலையை திறந்துவைத்த அண்ணா, மகாத்மா காந்தியின் கொள்கை குறித்து வெகுவாகப் புகழ்ந்தார். மகாத்மா காந்தி சிலையை அண்ணா திறந்துவைத்தது நியாயம்தான் என்று காங்கிரஸ் கட்சியினருக்குப் புரிய வைத்தார். மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் அண்ணா பயன்படுத்திய, "மாற்றான் தோட்டத்து

மல்லிகைக்கும் மணம் உண்டு' என்ற வார்த்தை இன்று எல்லா அரசியல் தலைவர்களாலும் மேடைப் பேச்சாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், அரசியல் நாகரிகம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதும் பேரறிஞர் அண்ணாதான்.இது நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சிப் பிரதிநிதி எல்லோருக்கும் பொருந்தும்.

மக்கள் பிரதிநிதி என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் தொடர்புடைய ஒரு நிகழ்வை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1957-இல் முதல்வராக இருந்தவர் காமராஜர். காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு அன்றைய முதல்வர் காமராஜரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்அண்ணா. அவரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.

இது கட்சி நிகழ்ச்சி அல்ல; இது பொது நிகழ்ச்சி; முதல்வர் வருகிறார் என்பதால் கட்சிக் கொடி ஏதும் கட்டக்கூடாது என்று கண்டிப்பாக தனது தொண்டர்களுக்கு அண்ணா உத்தரவு போட்டார்.

"நமது தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறைகளை சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் தெரிவித்தாலோ அல்லது நீங்கள் மனுவாக தந்தாலோ எனது தொகுதியில் உள்ள இந்தக் குறைகளை பிரச்னைகளை தீர்த்து வையுங்கள் என்று நான் முதல்வரிடம்தான் போய் முறையிடுவேன்'."இப்போது அந்த முதல்வரே மேடையில் அமர்ந்திருக்கிறார். உங்கள் கோரிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அவரிடமே சொல்லலாம்' என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அண்ணா.

முதல்வர் காமராஜரும் காஞ்சிபுரம் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டார். அதை செய்தும் தந்தார். நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, காமராஜர் குறித்து பெருமையாக பேசி வருகிறார்கள்.

இப்போது நான் இங்கு குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுதான் மக்களாட்சிக்கான அடிப்படை. இதை உணர்ந்து செயல்பட்டாலே நமக்கு முழுமையான மக்களாட்சி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதுதான் உண்மையான அரசியல் நாகரிகம். முழு மக்களாட்சி என்பதற்கு விளக்கம், அந்த நாடுகளில் மக்களுக்கு முழு கருத்துச் சுதந்திரம் இருக்கும்.

அடிப்படை உரிமைகள் முழுவதுமாக மதிக்கப்படும். நம் நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதே முறையைத்தான் பின்பற்றுகின்றன. முழு ஜனநாயக ஆட்சியில் ஊழலுக்கு வாய்ப்பில்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் மேம்பட்டால் மக்களாட்சி நிச்சயம் மேம்படும். குறிப்பாக, பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள்படி சட்டம் இயற்றும்போது மத்திய, மாநில அரசுகள் திறந்த மனத்துடன் பேசி முடிவு செய்ய வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் மக்களாட்சி வெற்றி பெற மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம். எது சரி, எது தவறு என்று அவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாட்டில் ஜனநாயகம் மேம்படும். இது அரசு, பொதுமக்கள் இருவருக்குமான கூட்டுப் பொறுப்பு.

எனவே, இதற்கான ஒரு விழிப்புணர்வு அவசியம். இதற்கான தீர்வு எல்லோருக்கும் கல்வி என்பதுதான். இதை நாம் முழுமையாகச் செயல்படுத்தினாலே ஜனநாயகம் நிச்சயம் மேம்படும். இதைத் தான் அண்ணாவும் அன்றே சொன்னார்.

(இன்று முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள்)

கட்டுரையாளர்: வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com