
பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை. ஒரு காலத்தில் பேருந்து, ரயில் பயணங்களில் புத்தகங்களுடன் பயணித்த காட்சியைக் காண முடிந்தது.
புத்தகத்தின் பக்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் கதை மாந்தர்களின் சிரிப்பும், அழுகையும் நம்முடன் பயணம் செய்யும். ஆனால், இன்று அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக கண்களை ஒளி வெள்ளமும், செவிகளை ஏதோ குரல்களும் இரைச்சல்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. பயணங்களில் வாசிப்பு மறந்து, மக்கள் தங்கள் அறிதிறன்பேசிகளில் மூழ்கியிருக்கும் காட்சி, ஒரு நவீன துயரத்தை நமக்கு உணர்த்துகிறது.
முன்பு வாசிப்பு என்பது பொழுதுபோக்கின், அறிவூட்டலின் முக்கிய வழியாக இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் புத்தகங்களுடன் அமர்ந்து, ஒரு மெüன உலகத்தைப் படைப்பார்கள். புத்தகங்களுக்குள் நுழையும்போது, சுற்றியுள்ள ஓசைகள், மனிதர்கள், அசைவுகள் அனைத்தும் மறந்துபோகும். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
ஒரே நேரத்தில் சமூக ஊடகங்கள், செய்தித் தளங்கள், யூடியூப் விடியோக்கள், இணையப் பக்கங்கள் என பல தளங்களில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கிய மனம், ஒரே ஒரு புத்தகத்துக்குள் அடைபட விரும்புவதில்லை.
அறிதிறன்பேசிகள் அளிக்கும் உடனடித் திருப்திக்கு ஈடாக எதுவும் இல்லை. ஒரு பக்கத்தைப் படித்து முடிப்பதற்குள், அறிதிறன்பேசி ஒரு புதிய விடியோவை காட்டி, நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த ஈர்ப்பு, ஒரு புத்தகத்தில் மூழ்கிப் படிக்கும் நிதானத்தையும், பொறுமையையும் நம்மிடம் இருந்து பறித்துவிடுகிறது.
வாசிப்பு என்பது ஆழமான சிந்தனையைத் தூண்டும் ஒரு செயல். ஆனால், அறிதிறன்பேசியில் மூழ்குவது என்பது விரிவற்ற, விரைவான, தொடர்பில்லாத் தகவல்களை உள்வாங்குவதும் மட்டுமே. இதன் விளைவாக, நம் மனதின் ஆழ்ந்த சிந்தனைத் திறன் குறைந்துவிட்டது.
பயணத்தின்போது வாசிப்பது, நம்மை நாமே கண்டுகொள்ளும் ஒரு முயற்சி. புத்தகத்தின் பக்கங்கள், நம் மனம் இதுவரை கண்டிராத உலகங்களைக் காட்டும். புதிய சிந்தனைகளை உருவாக்கும். ஆனால், அறிதிறன்பேசியில் மூழ்கியிருக்கும்போது, நாம் உண்மையில் பயணமே செய்வதில்லை. நம் உடல் மட்டுமே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்கிறது. மனம், அதே சமூக ஊடகப் பெருவெளியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
அருகில் அமர்ந்திருக்கும் சக பயணிகளுடன் பேசும் வாய்ப்பு, புதிய மனிதர்களைச் சந்திக்கும் அனுபவம், கண்ணுக்குப் புலப்படும் இயற்கையின் அழகை ரசிக்கும் தருணம் என எல்லாவற்றையும் இந்தச் சிறிய பெட்டி நம்மிடம் இருந்து பறித்துவிட்டது.
பயணத்தில் கிடைக்கும் ஓய்வு, மனதை அமைதிப்படுத்தும். வாசிப்பு, அந்த அமைதிக்கு ஒரு துணை. ஆனால், அறிதிறன்பேசியில் மூழ்கியிருப்பதால், நம் மூளை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கிறது. கண்கள், மூளை, விரல்கள் என அனைத்தும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன.
தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததுதான். ஆனால், அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். பயணங்களில் வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் கொண்டுவருவது எளிதான காரியம் அல்ல. ஆனால், அது அவசியமானது. பயணத்தின் தொடக்கத்தில், அறிதிறன்பேசியை அணைத்துவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம்.
அரசுகள், பொது நூலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளலாம். பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவசமாகப் படிக்க புத்தகங்களை வைக்கலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை முன்னேற்ற வேண்டும். ஆனால், அது நம் ஆன்மாவை அழித்துவிடக் கூடாது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு வாசிப்பின் அருமையை நாம் உணர்த்த வேண்டும். வாசிப்பு, நம்மை முழுமையான மனிதனாக்கும்.
பயணத்தின்போது சுமந்து செல்வதற்கு எளிதான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பெரிய மற்றும் கனமான புத்தகங்களுக்குப் பதிலாக, சிறிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய புத்தகங்கள் சிறந்தவை.
பயணத்தின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க நகைச்சுவை, வீரதீர சாகசம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றிய வரலாற்றுப் புத்தகங்கள் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். அதேபோல், அதிக புத்தகங்களைச் சுமந்து செல்ல விரும்பவில்லையென்றால், இன்று நடைமுறையில் உள்ள வாசிப்பு உபகரணங்களைப் பயன்படுத்தலாம். இதில் நூற்றுக்கணக்கான புத்தகங்களைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். விமானப் பயணம், ரயில் பயணம் போன்ற நீண்ட காத்திருப்பு நேரங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும்.
பயணத்தின்போது கிடைக்கும் ஒவ்வொரு நிமிஷத்தையும் வாசிப்புக்கு ஒதுக்கலாம். சில பயண விடுதிகளில் புத்தகப் பரிமாற்ற வசதிகள் இருக்கும். அங்கு உங்கள் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் வேறு ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம். இது புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.
பயணங்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம், நாம் தனிப்பட்ட முறையில் யார் என்பதுதான். வாசிப்பு, அந்தத் தேடலுக்கு ஒரு வழிகாட்டி. அறிதிறன்பேசிகள் நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து நம்மைத் துண்டிக்கின்றன. ஆனால், புத்தகங்கள், நம் அக உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. பயணங்களில் அறிதிறன்பேசிகளை ஒதுக்கிவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து வாசியுங்கள். அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காண்பிக்கும்; நீங்களே ஒரு புத்தகமாக மாறுவீர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.