இந்திய ராணுவத்துக்கு நிகரானதா பாக். ராணுவம்?

இந்திய ராணுவத்துக்கு நிகரானதா பாகிஸ்தான் ராணுவம்? என்பதைப் பற்றி...
இந்திய ராணுவத்துக்கு நிகரானதா பாக். ராணுவம்?
இந்திய ராணுவத்துக்கு நிகரானதா பாக். ராணுவம்? @tehseenp
Published on
Updated on
3 min read

இரண்டு பகைவர்களுக்கு இடையிலான அதிகார சமநிலை, போர்க்களத்தில் பகைமை தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. திறன், நோக்கம், அவை இரண்டையும் நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளின் தொடர்பு மூலம், அந்தச் சமநிலை குறித்து முடிவு செய்யப்படுகிறது. இது நமது ராணுவத்தை மேலும் சக்திவாய்ந்ததாக்குவதற்கு ஒதுக்கப்படும் பணம் போதுமானதாக இல்லை என்று ஆதாரபூர்வமாக பதில் அளிக்க வேண்டிய தேவையை எழுப்புகிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனைகளை மேற்கொண்ட பின்னர், தெற்காசிய பிராந்தியத்தில் உத்திசார்ந்த அதிகார சமநிலை உறைந்துவிட்டது. இந்த பிராந்தியத்தில் உள்ள மற்றொரு அணுசக்தி நாடான சீனா, அந்தச் சோதனைகளை 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே நடத்திவிட்டது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்புத் துறைக்கு பாகிஸ்தான் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி பல மடங்கு குறைவாகும். ஆனால், அந்தத் துறையில் இந்தியாவுக்கு நிகரானது பாகிஸ்தான் என்ற அந்நாட்டின் கூற்று, படைகள் மறுசீரமைப்பு, பாகிஸ்தானுக்கு வெளியில் இருந்து அந்நாட்டுக்குக் கிடைக்கக் கூடிய உதவி, தொழில்நுட்பப் பரிமாற்றம், நவீனமயமாக்கல் உள்ளிட்டவற்றை சார்ந்தே உள்ளது.

நிகழ் நிதியாண்டில் (2025-26) பாகிஸ்தான் பாதுகாப்புத் துறைக்கு அந்நாட்டு பட்ஜெட்டில் சுமார் 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.79,000 கோடி) ஒதுக்கப்பட்டது. அதேவேளையில், இந்திய பாதுகாப்புத் துறைக்கு 78 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6.87 லட்சம் கோடி) முதல் 81 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7.13 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டது. இதில் 2 முக்கிய கணக்கு விவரங்கள் மறைந்துள்ளன.

அவற்றில் முதலாவது, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர செலவினங்கள் உள்ளடங்கியுள்ளன. இது பட்ஜெட்டில் முக்கியத் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

ஓய்வூதியம் தவிர்த்து, இந்திய பாதுகாப்புத் துறையின் விருப்பத்துக்குட்பட்ட செலவுகளுக்கு நிகழ் நிதியாண்டில் 54 பில்லியன் (சுமார் ரூ.4.75 லட்சம் கோடி) முதல் 55 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4.84 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்தியாவைவிட 6 மடங்கு குறைவாகும்.

இரண்டாவது கணக்கு விவரமானது பாகிஸ்தான் அரசின் வரவு-செலவு, பட்ஜெட்டில் இடம்பெறாத அரசின் செலவினங்கள்-கடன்கள் ஆகியவை அந்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அளிக்கும் பங்களிப்பு சம்பந்தப்பட்டதாக உள்ளது. பாகிஸ்தானுக்கு வெளியில் இருந்து (உலக வங்கி, வெளிநாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவது போன்ற வழி

முறைகள்) நிதி திரட்டுவது மூலம், பட்ஜெட் பற்றாக்குறையை பாகிஸ்தான் அரசு குறைக்கிறது. இதன்மூலம் முக்கியமான கட்டங்களில் ராணுவத் தயார்நிலையை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஏற்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கொண்டிருக்கும் உறவு, தற்போது அந்நாடு சீனாவுடன் கொண்டிருக்கும் நட்புறவு ஆகியவை பாகிஸ்தானுக்கு ராணுவத் தளவாடங்கள், பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவை கிடைக்க வழிவகுத்துள்ளன.

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு கூட்டு ஆதரவு நிதியை அமெரிக்கா வழங்கியது. இந்த நிதி முக்கியமான காலகட்டங்களில் பாகிஸ்தானின் விரிவான நிதி திட்டத்துக்கு உதவியது. இது பாகிஸ்தானின் கடன் மறுசீரமைப்புக்கு அந்நாட்டுச் செலாவணியைக் கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள வழிவகுத்தது. இந்தக் கணக்கு விவரங்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான செயல்திறன் இடைவெளியை இறுக்கமாக்குகிறது.

தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க சில ராணுவ உத்திகளைத் தேர்ந்தெடுத்து மிரட்டல் விடுத்தல், ஆயுதக் கட்டுப்பாடு, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியல், ராணுவ நோக்கங்கள் போன்ற பன்னடுக்கு வியூகங்களையும் பாகிஸ்தானின் கூற்று சார்ந்துள்ளது. இதில் பல கூறுகள் உள்ளன.

அந்தக் கூறுகளில் முதலாவது, அணுசக்தி கொள்கை மற்றும் பாதுகாப்புப் படையின் கட்டமைப்பாகும். அவற்றின் விரிவாக்கம் பதற்றத்தின் தீவிர நிலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நிலவியல் பகுதிக்காகவே வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட ராணுவ திறன், சக்தி அல்லது வளங்கள் ஆகியவை இரண்டாவது கூறாகும். ராணுவத்தின் போர்த் திறனை மேம்படுத்த வெளிநாட்டு வளங்கள், திறன்கள் அல்லது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மூன்றாவது கூறாகும்.

உத்திசார்ந்த இலக்குகளை எட்ட ராணுவப் படைகளைச் சமச்சீரற்ற முறையில் பணியில் ஈடுபடுத்துதல் அல்லது குறுகிய காலத்துக்கு எதிரியின் ராணுவப் படைகள், ஆயுதங்கள், நிலைகள் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்துதல், ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்ட வான் போர் பயிற்சி, துல்லியமாக துப்பாக்கிச்சூடு நடத்துதல், பாதுகாப்பான தொலைவில் இருந்து இலக்கைத் தாக்குதல் அல்லது அச்சுறுத்தலைக் கண்டறிதல், கடற்பரப்பை பயன்படுத்தவிடாமல் தடுத்தல் ஆகியவை நான்காவது கூறாகும். அரசியல் மற்றும் உளவு நடவடிக்கைகள் ஐந்தாவது கூறாகும்.

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருப்பதைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமாகும். பாகிஸ்தானிடம் சுமார் 160 முதல் 170 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது எதிரி நாடு தாக்காமல் இருக்க வெளிப்படையான தடுப்பு நடவடிக்கையாகவும், தாக்குதல் நடத்தினால் பதிலடி அளிப்பதற்கு ஆயத்தமாக இருப்பதற்கான மறைமுக மறுமொழியாகவும் உள்ளது.

தனது அணு ஆயுத கையிருப்பு வேகமாக அதிகரிக்கப்படும் என்று பாகிஸ்தான் தலைமை அச்சுறுத்தினால், செயல்பாடு சார்ந்த திட்டமிடலில் உத்திசார்ந்து ஏற்படக் கூடிய சேதத்தை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கை, ஒரே மாதிரியில்லாமல் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் ராணுவத் தளவாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சீனா மட்டுமின்றி அமெரிக்காவிடம் இருந்தும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை சார்ந்து உதவி கிடைப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த 2002 முதல் 2017-ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவிடம் இருந்து 4.07 பில்லியன் டாலரை (சுமார் ரூ.35,850 கோடி) ராணுவ நிதியுதவியாக பாகிஸ்தான் பெற்றது. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறைக்கு நிதியுதவி அளிப்பதை அமெரிக்கா குறைத்தது; எனினும், 2022-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களின் தேவை மற்றும் பராமரிப்புக்கு 450 மில்லியன் டாலரை (சுமார் ரூ.3,964 கோடி) வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

சீனா-பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டுப் பயிற்சி வன்பொருள் பரிமாற்றங்களின் தொழில்நுட்ப விளைவை பலமடங்கு பெருக்குகிறது. இருநாட்டு விமானப் படைகளுக்கு இடையே நடைபெறும் "ஷாஹீன்' கூட்டுப் பயிற்சியில் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்ட விமானப் போர் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் "சீ கார்டியன்' கூட்டுப் பயிற்சியில் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராகப் போரிடும் முறைகள், வான் பாதுகாப்பு, போர்க் களத்துக்குச் செல்லும் எதிரி நாட்டு கப்பல்களைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ அல்லது அழிக்கவோ செய்யும் பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை, பாதுகாப்புப் படைகளில் எந்தெந்த வகையில் நவீனமயமாக்கலை மேற்கொள்வது என்று தேர்வு செய்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக நவீனமயமாக்க வேண்டும் என்பது எதிர்வாதமாக உள்ளது. ஆனால், ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் தாமதம், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பில் முரண்பாடுகள், சீனாவுடனான இரு எல்லைப் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஆகியவை இந்திய பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கலுக்கு இடர்ப்பாடுகளாக உள்ளன.

அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டிய அவசியம் பாகிஸ்தானுக்கு இல்லை. வேகமான, அரசியல் ரீதியாக தீர்க்கமான பலன்களைப் பெறுவதில் இருந்து இந்தியாவைத் தடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இந்திய ராணுவத்துக்கு நிகரானது பாகிஸ்தான் என்று அந்நாடு கூறுவதை நேரம், களம், இலக்குகளை அடைவதற்கான திட்டத்தின் விஸ்தீரணம் ஆகியவற்றின் மூலம் விரிவாக மதிப்பிட்டால், பாகிஸ்தானின் கூற்று தோற்றுவிடும்.

இந்த விவகாரத்தில் இந்தியாவும் தனது நிலையை மேம்படுத்தியாக வேண்டும். கடந்த 1960 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், தனது பொருளாதாரத்தில் சராசரியாக 2.43 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்கு இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 4 சதவீதமாக இந்தியா அதிகரிக்க வேண்டும் அல்லது நாட்டின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் எதிர்கொண்டுவரும் ராணுவச் சவால்களை இந்தியா குறைக்க வேண்டும்.

கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com