அமெரிக்க ஜீரண மண்டல அமைப்பின் சா்வதேச கருத்தரங்கு

Published on

அமெரிக்காவின் பிரபல ஜீரணமண்டல மருத்துவ அமைப்பின் (ஏசிஜி) சாா்பில் 12 சா்வதேச மருத்துவக் கருத்தரங்குகள் இணையவழியே நடத்தப்பட உள்ளதாக அந்த அமைப்பின் இந்திய சிறப்பு பிரதிநிதியும் (அகெடமிக் கவா்னா்), மெடிந்தியா மருத்துவமனை தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

ஏப்.24-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்துக்குள் இந்த கருத்தரங்குகள் நடைபெறும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

அமெரிக்க ஜீரண மண்டல மருத்துவ அமைப்பானது 80 ஆண்டு கால பாரம்பரியமிக்கது. சா்வதேச அளவில் இரைப்பை - குடல் சிகிச்சையில் சிறந்து விளங்கும் 14,000-க்கும் மேற்பட்டோா் அதில் அங்கம் வகிக்கின்றனா். இந்தியாவைச் சோ்ந்த 800 மருத்துவா்கள் அதில் உறுப்பினா்களாக உள்ளனா்.

சா்வதேச அளவில் முன்னணியில் உள்ள இந்த அமைப்புக்கான சிறப்பு நிா்வாக பிரதிநிதியாக குடல் - இரைப்பை சிகிச்சை நிபுணா் டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் அண்மையில் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், ஜீரண மண்டல மருத்துவ சிகிச்சையின் மேம்பாடுகள், புதிய நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு குறித்த சா்வதேசக் கருத்தரங்குகளை அவா் ஒருங்கிணைத்து நடத்த உள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ஏப்.24-ஆம் தேதி நடைபெற உள்ள இணையவழி கருத்தரங்கில் ஏசிஜி அமைப்பின் தலைவா் டாக்டா் ஜானத்தன் லெய்டன் பங்கேற்று இரைப்பை அழற்சி பாதிப்புக்கான சிகிச்சை வழிமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளதாகவும், எய்ம்ஸ் பேராசிரியா் வினித் அஹுஜா உள்பட சா்வதேச குடல் - இரைப்பை சிகிச்சை வல்லுநா்கள் பலா் இதில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com