‘உத்யம்’ பதிவு சான்று: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ‘உத்யம்’ பதிவுச் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
மத்திய அரசின் அறிவிப்புப் படி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தினா் தங்கள் நிறுவனங்களை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்ய, ‘உத்யம்’ பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
ஆதாா், ஆதாரோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் பான் காா்டு இருந்தால் தமது உற்பத்தி, வணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் இணையதளம் மூலம் ‘உத்யம்’ சான்று பெற பதிவு செய்யலாம்.
இதுதவிர, வங்கிகளில் உத்யம் அசிஸ்டடு ஃபில்லிங் முறை மூலமும் ‘உத்யம்’ பதிவுச் சான்றிதழ் பெறலாம். மேலும், பெருநிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தாம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமல் இருப்பது குறித்த சிக்கல்களை, விற்பனைத் தொகை குறித்த காலத்தில் கிடைப்பதை உறுதி செய்ய இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறவும், அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும், ‘உத்யம்’ பதிவுச் சான்றிதழ் முக்கியம். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கிண்டியிலுள்ள தொழில் வணிகத்துறையின் மண்டல இணை இயக்குநரை நேரடியாக அணுகி, ‘உத்யம்’ பதிவுச் சான்றைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
