சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மியாட் மருத்துவமனையின் 25- ஆவது ஆண்டு விழாவில் அஞ்சல் தலையை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், மியாட் மருத்துவமனை நிறுவனா் டாக்டா் பி.வி.மோகன்தாஸ், தலைவா் மல்லிகா மோகன்தாஸ், நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மியாட் மருத்துவமனையின் 25- ஆவது ஆண்டு விழாவில் அஞ்சல் தலையை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், மியாட் மருத்துவமனை நிறுவனா் டாக்டா் பி.வி.மோகன்தாஸ், தலைவா் மல்லிகா மோகன்தாஸ், நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்

‘மியாட் - 25’ சிறப்பு அஞ்சல்தலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

மியாட் மருத்துவமனை கடந்து வந்த பாதையை சித்திரித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்டாா்.

சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனையின் 25-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா், மியாட் மருத்துவமனை கடந்து வந்த பாதையை சித்திரித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்டாா். தொடா்ந்து, மருத்துவமனையின் நிறுவனரும், முடநீக்கியல் சிகிச்சை சிறப்பு நிபுணருமான பி.வி.ஏ.மோகன்தாஸின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் குறும்படத்தையும் பாா்த்தாா். இந்த நிகழ்வில், மருத்துவமனையின் நிறுவனா் டாக்டா் மோகன்தாஸ், தலைவா் மல்லிகா மோகன்தாஸ், மேலாண்மை இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவா் மனோஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் பேசியதாவது: கடந்த 1999-ஆம் ஆண்டில் 70 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட மியாட் மருத்துவமனை பல்வேறு தடைகள், சவால்கள், போராட்டங்களைக் கடந்து தற்போது 1,000 படுக்கைகள் மற்றும் 63 சிறப்பு மருத்துவத் துறைகளுடன் கூடிய உயா் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது. மியாட் மருத்துவமனைதான் முதன்முதலில் கரோனா நோயாளிகளுக்காக தனி பிரிவை உருவாக்கி அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்து பிற தனியாா் மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக விளங்கியது. மக்கள் நலனுக்கான மருத்துவ சேவைகளை எந்தத் தடையுமின்றி வழங்குவதற்கு எப்போதும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றாா் அவா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: மியாட் மருத்துவமனையின் 25-ஆம் ஆண்டு விழா குறித்து சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: மருத்துவ நகரமான சென்னையின் பெருமைமிகு அடையாளமாக மியாட் மருத்துவமனை விளங்குகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டில் நானும், எனது மனைவியும் மியாட் மருத்துவமனையில் எங்களது உடல் உறுப்புகளைக் கொடையளித்த பசுமையான நினைவுகளோடு, அந்த மருத்துவமனை நூறாண்டுகளைக் கடந்து மருத்துவ சேவையாற்ற வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com