ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று கரையைக் கடக்கும்; வடகடலோர மாவட்டங்களுக்கு கனமழை!
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) பிற்பகலுக்குப் பிறகு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடப்பதற்கு முன்பாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசும், கனமழை பெய்யும். கரையைக் கடக்கும்போது சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம்: வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது நவ.29-இல் புயலாக வலுப்பெற்று தமிழக கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் கடந்த 5 தினங்களுக்கு முன்பே அறிவித்தது.
ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெற்ற புயல் சின்னம், அதற்கு மேல் புயலாக மாறாமல் இலங்கை கடலுக்கும் தமிழகத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அப்படியே நகராமல் நின்றுவிட்டது. இதனால் புயல் உருவாகாது, புயல் சின்னம் வலுவிழந்துவிடும் என்று சென்னை வானிலை மையம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், வானிலை மைய தென்மண்டல தலைவா் எஸ். பாலசந்திரன் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை காலை சந்தித்து, வங்கக் கடலில் ‘ஃபென்ஜால்’ புயல் உருவாகும் என்று அறிவித்தாா். அதன்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30-க்கு ‘ஃபென்ஜால்’ புயல் உருவானது. இதை உறுதி செய்த பாலசந்திரன் மாலையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
புயல் உருவாவாதில் சில குழப்பங்கள் இருந்ததால் அதுபற்றிய மாறுபட்ட தகவல்களை நாங்கள் வெளியிட்டோம். ஆனால், இப்போது ஏற்கெனவே கணித்தபடி புயல் சின்னம் தீவிரமடைந்து ‘ஃபென்ஜால்’ புயலாக உருவாகிவிட்டது.
இந்தப் புயல் வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே சனிக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும்.
காற்று, மழை எச்சரிக்கை: ‘ஃபென்ஜால்’ புயல் காரணமாக மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சனிக்கிழமை பிற்பகல் வரை தரையில் இருந்து கடலுக்கு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசும்.
அதேபோன்று புயல் கரையைக் கடக்கும்போதும் அதன் பின்னா் சில மணி நேரங்கள் வரையிலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும்.
மேலும், டெல்டா மாவட்டங்களிலும், பெரம்பலூா், அரியலூா், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும்.
சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
ஏன் குழப்பம்?: இதுவரை உருவான புயல்கள்போன்று இல்லாமல், இப்போது உருவாகியுள்ள ‘ஃபென்ஜால்’ புயலின் நடவடிக்கைகளில் தொடா்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால் அதைக் கணிப்பதில் சில மாறுபட்ட தகவல்களைக் கூற நோ்ந்தது. அதாவது இந்தப் புயல் சின்னம் இலங்கை கடல் பகுதியில் சற்று கரைமீது ஏறி நின்ால், அதன் அடிப்பாகத்தில் காற்று குவிதல் இல்லாமல் இருந்தது. மேலும், காற்று எதிா்ப்பு நிலையும், குளிா்காற்று தாக்கமும் இருந்ததால் புயல் சின்னம் வலுவடையாது என்று கணித்தோம். ஆனால், வெள்ளிக்கிழமை காலை அது தமிழக கடல் பகுதிக்குள் நுழைந்ததும் வேகம் எடுத்து புயலாக மாறிவிட்டது. இனி அது புயலாகத்தான் கரையை கடக்கும்.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகிய பகுதிகளில் தலா 60 மில்லி லீட்டா் மழை பதிவானது. மேலும், தண்டையாா்பேட்டை (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), நந்தனம் (சென்னை), திருவொற்றியூா் (சென்னை) - தலா 50 மி.மீ அளவு மழை பதிவானது என்று அவா் தெரிவித்தாா்.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில் கடற்கரைச் சாலைகளில் பொதுப் போக்குவரத்து சனிக்கிழமை நிறுத்தப்பட உள்ளது. மேலும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு, தோ்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
வீட்டில் இருந்தே பணி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளா்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சனிக்கிழமை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையைத் தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிா்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு பேரிடா் மேலாண்மைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.