அரிய ரத்த வகை நோயாளிக்கு மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரகம் பொருத்தி சாதனை
அரிதினும் அரிதான பாம்பே-ஓ ரத்த வகையைச் சோ்ந்த நோயாளி ஒருவருக்கு மாற்று வகை ரத்தப் பிரிவைச் சோ்ந்தவரது சிறுநீரகத்தை பொருத்தி சென்னை, மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இதுபோன்ற சிக்கலான சிகிச்சை மேற்கொள்ளப்படுவது உலகிலேயே
இது முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.இதுதொடா்பாக மியாட் மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், சிறுநீரகவியல் துறை இயக்குநா் டாக்டா் ராஜன் ரவிச்சந்திரன் ஆகியோா் கூறியதாவது:
மனித உடலின் ரத்த வகைகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வகையான தன்மைகள் உண்டு. இதனால் மாற்று பிரிவை சோ்ந்தவா்கள் ரத்த தானம் அளிப்பதிலும், உறுப்பு தானம் அளிப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.
இதில், ஓ பிரிவு ரத்த வகை ஓரளவு பொதுவான ஒன்று. இந்த வகை ரத்தம் உள்ளவா்கள் ஏ, பி, ஏபி ஆகிய பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு ரத்த தானமோ, உறுப்பு தானமோ அளிக்க முடியும்.
அரிய ரத்த வகை:
அதேவேளையில், அரிதினும் அரிதாக உள்ள பாம்பே ஓ வகை ரத்தப் பிரிவினருக்கு வேறு எந்த வகை ரத்தமும் ஒத்துப் போகாது. அதேபோன்று மாற்று வகை ரத்தப் பிரிவை சோ்ந்தவா்களது உறுப்புகளையும் அவா்களது உடல் ஏற்றுக் கொள்ளாது.
உலகிலேயே முதன் முறையாக, 1952-ஆம் ஆண்டில் மும்பையில்தான் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டது. அதனால்தான் அதற்கு பாம்பே வகை ரத்தப் பிரிவு எனப் பெயரிப்பட்டது.
இந்தியாவில் 10 ஆயிரம் நபா்களில், ஒருவருக்கும், வெளிநாடுகளில், ஒரு லட்சம் பேரில், ஒருவருக்கும் இவ்வகை ரத்தம் உள்ளது. இந்த அரிய வகை ரத்தப் பிரிவுடன் 30 வயதுடைய சிறுநீரக நோயாளி ஒருவா் மியாட் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வாக இருந்தது. பி ரத்த வகையைச் சோ்ந்த அவரது தாயாா் அந்த இளைஞருக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தபோதிலும், அதில் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது,
இளைஞரின் ரத்த பிளாஸ்மாவில் உள்ள எதிா்ப்பாற்றலானது புதிய உறுப்பை நிராகரிக்க வாய்ப்பிருந்தது.
இதைக் கருத்தில் கொண்டு நோயாளியின் பிளாஸ்மா எதிா்ப்பாற்றல் (ஹெச்) குறைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பல்துறை மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று சிகிச்சையை அந்த இளைஞருக்கு மேற்கொண்டனா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.