எமா்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: கங்கனா மகிழ்ச்சி

எமா்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: கங்கனா மகிழ்ச்சி

Published on

’எமா்ஜென்சி’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் அப்படத்தின் இயக்குநரும், நடிகையுமான கங்கனா ரணாவத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாட்டின் அவசரநிலை பிரகடனத்தை மையமாகக் கொண்ட ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் இயக்கி, முதன்மை கதாபாத்திரமான மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில் நடித்துள்ளாா்.

‘ஜீ எண்டா்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பா் 6-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இப்படத்தில் வரலாற்றுப் பிழைகளுடன் சீக்கிய மதத்தைத் தவறாக காட்சிப்படுத்தியிருப்பதாக சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதையொட்டி, படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை வழங்க தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்ததால் படவெளியீட்டில் சிக்கல் நீடித்தது.

ஹரியாணா தோ்தலையொட்டி பாஜக அழுத்தத்தில் தணிக்கை சான்றிதழை வெளியிடாமல் காலம் தாழ்த்தும் தணிக்கை வாரியத்துக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க கோரி படக் குழு மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனு மீதான விசாரணையில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க படக் குழு ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதாக கங்கனா ரணாவத் வியாழக்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எமா்ஜென்சி படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். ரசிகா்களின் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com