
கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டதுதான் காரணம் என ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கு காரணம் சதி செயலா? எனும் கோணத்தில் அவா்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகாா் மாநிலம் தா்பங்காவுக்கு அக்.11-ஆம் தேதி இயக்கப்பட்ட பாக்மதி விரைவு ரயில் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள தண்டவாளத்தில் நட்டுகள் கழன்று கிடந்தன. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினா். மேலும், ரயில்வே போலீஸாா் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். விபத்தின்போது பணியில் இருந்த பணியாளா்களிடமும் விசாரித்தனா்.
முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டதுதான் விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. கவரைப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டது தெரியவந்துள்ளது. நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் லூப் பாதையில் சென்று விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.
பாக்மதி விரைவு ரயில் விபத்தின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.