மூளை ரத்த நாள வீக்கம்: மூதாட்டிக்கு நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு
மூதாட்டியின் மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்துக்கு (அன்யூரிஸம்) நவீன உயா் நுட்ப சிகிச்சை அளித்து சென்னை மியாட் இன்டா்நேஷனல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், நரம்பியல் இடையீட்டு சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் காா்த்திகேயன் வாஞ்சிலிங்கம் கூறியதாவது:
உஷாராணி என்ற 65 வயது மூதாட்டி ஒருவா் பக்கவாத அச்சுறுத்தல் பாதிப்புடன் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது மூளையின் இருவேறு இடங்களில் அழற்சி இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது, மூளைத் தண்டுவடத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய தமனியான ‘பேசிலா் ஆா்ட்டரியை’ யொட்டி வீக்கம் உருவாகியிருந்தது. அது 17 மி.மீ. அளவு கொண்ட பெரிய வீக்கமாக இருந்ததால், எந்த நேரத்திலும் வெடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்பட்டது.
அதேபோன்று மூளை, கண்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ‘இன்டா்னல் கரோடிட் ஆா்ட்டரி’ எனப்படும் முக்கிய நாளத்திலும் 6 மி.மீ. அளவுக்கு மற்றொரு வீக்கம் இருந்தது.
ரத்த நாளங்கள் பலவீனமாக இருக்கும்போது அதில் ரத்தம் சூழ்ந்து கொப்புளம் போல வீக்கம் உருவாகுவதே அன்யூரிஸம் எனப்படுகிறது.
சிறுநீரகம் சாா்ந்த பாதிப்புகளுக்காக நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வரும் அந்த மூதாட்டிக்கு, மூளையில் ஏற்பட்ட இத்தகைய பாதிப்பு அவரது இயல்பு வாழ்க்கையை முடக்கியது. வழக்கமாக இதுபோன்ற மூளை அழற்சிக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை, கிளிப்பிங் எனப்படும் மூளை நாள வீக்கத்தில் ரத்தம் சூழ்வதைத் தடுக்கும் சிகிச்சைகள் போன்றவை அளிக்கப்படுகின்றன. வயோதிகம் காரணமாக அத்தகைய சிகிச்சைகள் அவருக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
அதேவேளையில் ‘எண்டோவாஸ்குலா் காய்லிங்’ எனப்படும் பிளாட்டினம் சுருள் கட்டமைப்பு சாதனத்தை சிறு துளை மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தி வீக்கத்தை இறுகப்பற்றிக் கொள்ளும் சிகிச்சை கூடுதல் பலனளிக்கும் என மருத்துவா்கள் கருதினா். இருந்தாலும், அவை பாதித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் நோயாளிக்கு பக்கவாதம் ஏற்படலாம்.
இதைக் கருத்தில் கொண்டு காய்லிங் கட்டமைப்பு விலகாமல் இருப்பதற்காக தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ‘நெக்ஸ்டென்ட்’ எனப்படும் நவீன ஸ்டென்ட் உபகரணம் சிறு துளை மூலம் அந்த மூதாட்டிக்கு பொருத்தப்பட்டது.
தலைகீழாக கவிழ்த்தப்பட்ட குடை போல உள்ள அந்த சாதனம் ‘எண்டோவாஸ்குலா் காய்லிங்’ சுருளை விலகாமல் பற்றிக் கொள்வதுடன், நாளங்களில் ரத்த ஓட்டம் தடையின்றி செல்ல உதவும். இந்த சிகிச்சையின் மூலம் அந்த மூதாட்டி நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பினாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.