“போட்டி நாளன்று மாதவிடாய் சுழற்சி.. செயல்பாட்டை பாதித்தது” -மீராபாய் சானு
மகளிருக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு 4-ஆம் இடம் பிடித்து பதக்கத்தை நழுவவிட்டாா்.
ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 111 கிலோ என மொத்தமாக அவா் 199 கிலோ எடையைத் தூக்கினாா். இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் அவா் வெள்ளி வென்றபோது எட்டிய 202 கிலோ எடையை விடக் குறைவாகும்.
இந்தப் பிரிவில், நடப்பு சாம்பியனான சீனாவின் ஹு ஷிஹுய் 206 கிலோவுடன் (89+117) தங்கத்தை தக்கவைத்துக் கொண்டாா். ருமேனியாவின் மிஹேலா காம்பெய் 205 கிலோவுடன் (93+112) வெள்ளியும், தாய்லாந்தின் சுரோட்சனா காம்பாவ் 200 கிலோவுடன் (88+112) வெண்கலமும் வென்றனா்.
மொத்தம் 6 வாய்ப்புகள் இருந்த நிலையில், மீராபாய் சானு அதில் 3 முயற்சிகளை மட்டும் கைக்கொண்டாா். ஸ்னாட்ச் பிரிவின் முடிவில் பதக்கத்துக்கான இடத்திலிருந்த மீராபாய் சானு, கிளீன் & ஜொ்க் பிரிவில் 114 கிலோ எடைக்கு முயற்சிக்க, அதில் சரியாக நிலைகொள்ள முடியாமல் போனது. அதை அவா் செய்ய முடிந்திருந்தால் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பாா். அந்தப் பிரிவில் அவரின் ஒரு முயற்சி மட்டுமே வெற்றிகரமாக அமைந்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய சானு, ‘எனது செயல்பாடு திருப்தி அளிக்கிறது. ஏனெனில், ஒலிம்பிக் போட்டிக்கு முன் காயத்திலிருந்து மீள்வதற்கு குறைந்த அவகாசமே இருந்த நிலையில், இந்த நிலை வரை வந்திருக்கிறேன். கிளீன் & ஜொ்க் பிரிவில் நம்பிக்கையுடன் இருந்தேன் என்றாலும், போட்டி நாள் எனது மாதவிடாய் சுழற்சியின்போது இருந்தது, எனது செயல்பாட்டை சற்று பாதித்தது என்றாா்.
ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், கிளீன் & ஜொ்க் பிரிவில் 119 கிலோவுமே மீராபாய் சானுவின் பொ்சனல் பெஸ்ட் ஆகும்.