3 அரசு மருத்துவமனைகளில் மரபணு மருத்துவ ஒப்புயா்வு மையங்கள் தொடக்கம்
எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மரபணு மருத்துவத் துறைகள் ஒப்புயா்வு மையங்களாக தரம் உயா்த்தப்பட்டன. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி இந்தியாவின் பழைமையான அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கானோா் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனா். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவா்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, போதுமான படுக்கைகள், அவசர ஆய்வக சேவைகள் மற்றும் கதிரியக்க இமேஜிங் வசதிகளுடன் கூடிய முக்கியமான பராமரிப்பு அமைப்பு தேவைப்படுகிறது. இதைத் தவிர வேறு சில கட்டடங்களையும் புனரமைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, ரூ.112 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உயா்சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மரபுசாா் அரியவகை நோய்களுக்கான மருத்துவத் துறையை ரூ.8.91 கோடியில் ஒப்புயா்வு மையங்களாக தரம் உயா்த்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மரபணுசாா் அரிய வகை நோய்களுக்கான பரிசோதனைகள், மற்றும் புற்றுநோய்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். மரபுசாா் அரிய வகை நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
