ஈரோட்டின் குட்டி தாஜ்மகால் எனப்படும் தேவாலயம் 

இங்கிலாந்தில் பிறந்து இறைப்பணிக்காக ஈரோடு வந்த பிரப் கட்டிய தேவாலயம் ஈரோட்டின்
ஈரோட்டின் குட்டி தாஜ்மகால் எனப்படும் தேவாலயம் 

இங்கிலாந்தில் பிறந்து இறைப்பணிக்காக ஈரோடு வந்த பிரப் கட்டிய தேவாலயம் ஈரோட்டின் அடையாளமாகத் திகழ்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனிகளின் பல்வேறு நிர்வாகப் பணிகளுக்காகவும் நாடு காணும் ஆவலினாலும் தமிழகம் வந்த மேல் நாட்டவர் பலர். தான் சார்ந்த பணிகளுக்கு அப்பால் மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, நாணயவியல், ஓலைச்சுவடி, வரலாறு, நாட்டுப்புறவியல் முதலிய பல்வேறு துறைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆய்வுகளைத் தொடங்கியதுடன் அத்துறையில் தமிழ் மக்கள் பலரையும் ஈடுபடச் செய்தனர். பலர் கல்வி, மருத்துவம், சமுக மற்றும் சமய பணிகளில் ஈடுபட்டார்கள். அவர்களில் ஒருவர் தான் அந்தோணி வாட்சன் பிரப். 

1861-இல் இங்கிலாந்தில் பிறந்து, பிராட்டஸ்ட்டென்ட் மதபோதகராகப் பயிற்சி பெற்று 1885இல் அருட்பொழிவு பெற்ற அந்தோணி வாட்சன் பிரப் லண்டன் மிஷன் பிராட்டஸ்ட்டென்ட் சங்கத்தாரால் 1894-இல் (13.12.1894) இந்தியா அனுப்பபட்டார் குறிப்பாக தமிழ்நாட்டில் அதுவும் கோவையில் பணிசெய்ய நியமனம் செய்யப்பட்டார். இதன் பிறகு நான்கு ஆண்டுகள் பணிக்குப் பிறகு பிரப் 1897-இல் ஈரோட்டிற்குப் பணி மாறுதல் பெற்று வந்தார். ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் போல அல்லாமல் பிராட்டஸ்ட்டென்ட் பாதிரியார்கள் குடும்பத்துடன் பணியாற்ற வந்ததால், பிரப் தன் மனைவி  ரோஸ்ட்டா ஜேன் பிரப், மகன் ஹெர்பர்ட் பிரப் ஆகியோருடன் ஈரோடு வந்தார்.

ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடும்பத்துடன் பயணம் செய்த பிரப், மக்களின் தேவைகளை அறிந்து ஏற்ற நேரத்தில் மக்களுக்கு தன்னால் இயன்ற  உதவிகளைச் செய்தார். இதனால் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார். பல்நோக்கு சிந்தனைகொண்ட பிரப், பெரியார் போன்று, மக்களின் வாழ்வில் மாற்றத்தத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஈரோடு நகரில் பிராட்டஸ்ட்டென்ட் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தப் பழைய ரயில் நிலையம் அருகில் 1892-ஆம் ஆண்டு சிறு தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது.  மக்கள்தொகை பெருகியதாலும், நகரம் மேற்கு நோக்கி விரிவடைந்ததாலும் புதிய தேவாலயம் கட்ட பிரப் எண்ணினார். நகர் நடுவில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் இடம் வாங்கி, 1927-இல் தேவாலயம் கட்டும் பணி தொடங்கியது.  தான் முன்னின்று கட்டிய தேவாலயத்தைக் கலை நயத்துடன் பிரப் கட்டினார்.

ஈரோட்டில் இத்தேவாலயம் குட்டித் தாஜ்மகால் எனப் பலராலும் அழைக்கப்படுகிறது. தரையிலிருந்து சுவரின் நீளம் எவ்வளவோ, அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதே அளவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.  சுவர்கள் முட்டை, சுண்ணாம்பு சாந்து பூச்சுடன் கட்டப்பட்டுள்ளது. கற்கள், ஜன்னல்கள் கரூரிலுந்து இருந்து கொண்டு வரப்பட்டன. ஈரோடு பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். அதனால் இத்தேவாலயம் முஸ்லிம் மக்களை ஈர்க்கும் பொருட்டு இந்திய சரசெனிக் பாணியில் இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டது. கலை ஆர்வம் கொண்ட பிரப் இஸ்லாமிய மினார் அல்லது மினாரட் அமைப்பு கொண்ட இந்தோ-சினாரிக் என்னும் கட்டடக் கலை வடிவத்தில் தேவாலயம் அழகிய முறையில் கட்டப்பட்டுள்ளது. செங்கல், கல்தூண்கள், ஆகியவற்றால் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.  தேவாலயத்தின் அளவு சுமார் 30-க்கு 20 மீட்டர். உயரம் சுமார் 8 மீட்டர். இரண்டு பலி பீடங்களோடு மூன்று நுழைவாயில்கள் உள்ளன.

கட்டடப்பணி தொடங்கும்போது அஸ்திவாரக் கல்லில் இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல் என்று தமிழில் பதித்துள்ளார். 1930-ஆம் ஆண்டு தேவாலயத்தை  தமிழ்க் கிறித்துவப் பாதிரியார் அசரியா என்பவர் திறந்துவைத்தார். அவர் தான் பிரப் நினைவு தேவாலயம் என்ற பெயரை வைத்தார். கட்டட முகப்பில் ஒருவரே கடவுள் என்று தமிழ் எழுத்திலும் யாகுதா (ஒருவரே கடவுள்) என்று அரபு மொழியிலும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. தேவாலயப்பணி நடைபெற்றபோது 18.6.1928இல் பிரப் மனைவி ரோஸ்ட்டா ஜேன் பிரப் காலமானார். அவர் கல்லறை தேவாலய வளாகத்தில் உள்ளது. 

1934 ஆம் ஆண்டு ஈரோட்டில் இருந்து விடைபெற்றுக்கொண்டு ஆஸ்திரேலியா சென்ற பிரப், தன்னுடைய 76 ஆவது வயதில் 16.11.1936 இல் இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டல் என்ற இடத்தில் காலமானார்.  ஆஸ்திரேலியாவில் பிறந்து இறைப்பணிக்காக இந்தியா வந்த பிரப் கட்டியுள்ள தேவாலயம்,  இன்னும் பல நூறு ஆண்டுகளை கடந்தாலும் ஈரோட்டின் அடையாளமாகவே இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com