வேண்டும் வரம் தரும் பூண்டி மாதா

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது பூண்டி
பூண்டி மாதா பேராலயம்
பூண்டி மாதா பேராலயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது பூண்டி மாதா பேராலயம். அலமேலுபுரம் பூண்டி என அழைக்கப்பட்ட இந்த ஊர் இப்போது பூண்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பசுமை நிறைந்த நெல் பயிரும், செங்கரும்பும், உயர்ந்த தென்னை மரங்களுடன் சோலைவனமாகக் காட்சி தரும் இந்த ஊரில் இப்பேராலயம் அமைந்துள்ளது. 

கி.பி. 1710 ஆம் ஆண்டில் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு இயேசுவின் நற்செய்தி போதிக்க வந்த இயேசு சபை போதகர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. இவருடைய புனைபெயர் வீரமாமுனிவர். இவர் இந்தியாவில் கிறிஸ்துவ சமயத் தொண்டு ஆற்றப் பல இடையூறுகளைச் சந்தித்தாலும் அனைத்தையும் இயேசுவின் வழிநடத்தலால் எதிர்கொண்டார். இவர் சமயத் தொண்டுடன் தமிழ் மொழி மீது இருந்த தாகத்தால் தமிழைத் திறம்படக் கற்றார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்க் கிறிஸ்தவக் காவியமான தேம்பாவணி உள்பட தமிழ் இலக்கிய நூல்கள் பல படைத்தார். மேலும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் மாதாவின் பெயரால் ஆலயங்களை எழுப்பி, மக்களை வணங்கச் செய்தார். அந்த வரிசையில் 1714-18 ஆம் ஆண்டுகளில் எழுப்பப்பட்டதுதான் பூண்டி மாதா பேராலயம். இதை வீரமாமுனிவர் பூண்டியிலேயே தங்கிக் கட்டினார்.

இந்த ஆலயத்தில் வீரமாமுனிவரால் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் நூற்றாண்டுகளைக் கடந்தது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாததால் மாதா சொரூபம் பொலிவிழந்து காணப்பட்டது. இப்பகுதியில் பணியாற்றிய இயேசு சபை குருக்கள் மூலம் பிரான்ஸ் நாட்டிலிருந்து புதிய சொரூபம் வரவழைக்க முயற்சி மேற்கொண்டனர். பிரான்ஸ் நாட்டு லூர்து நகரில் 1858 ஆம் ஆண்டு பெர்நதேத் என்ற சிறுமிக்கு மரியன்னைக் காட்சி தந்து நாமே அமலோற்பம் எனக் கூறிவிட்டு, செபமாலை செபிக்கும்படி சொல்லி மறைந்தாராம்.

மாதாவின் நினைவாக அதே தோற்றத்துடன் பாரிசிலிருந்து 3 சொரூபங்கள் வரவழைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் பூண்டி மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டு, அமலோற்பவ மாதா என அழைக்கப்பட்டது. ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தச் சொரூபம் தமிழ்ப் பண்பாட்டுப்படி இரு கரம் கூப்பி புன்னகையுடன் வரவேற்பது போன்று காட்சியளிக்கிறது.

கி.பி.1924 ஆம் ஆண்டில் கடுமையான புயல் வீசி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, சொரூபம் சேதம் அடையாமல் இருக்க மிக்கேல்பட்டி கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், 1925ஆம் ஆண்டில் மீண்டும் பூண்டிக்குக் கொண்டு வரப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டது.

வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயம் தொடர்ந்து மதுரை மிஷனெரி ஆளுகைக்கு உள்பட்டிருந்தது. கும்பகோணம் புதிய மறை மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, அதன் ஆளுகைக்குக் கொண்டு வரப்பட்டது. மேலும், 1909 ஆம் ஆண்டில் மிக்கேல்பட்டி கிளைப் பங்காக இணைக்கப்பட்டது. தொடர்ந்து 1944 ஆம் ஆண்டு வரை மிக்கேல்பட்டி கிளைப் பங்காக இருந்தது. 1945 ஆம் ஆண்டில் ஜன. 4ம் தேதி தனிப் பங்கு ஆலயமாக ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னர், இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 1964 ஆம் ஆண்டு புனிதப்படுத்தப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து, சிலுவை சுமந்து, ஆணிகளால் அறையப்பட்டு, உயிர் துறந்தார். அவர் சுமந்த சிலுவையின் சிறு பகுதி மேதகு கர்தினால் லூர்துசாமியின் பேருதவியால் தந்தை ராயப்பர் ரோமிலிருந்து கொண்டு வந்து, மக்கள் வணக்கம் செலுத்துவதற்காகப் பூண்டி மாதா திருப்பீடத்தின் கீழ் வைத்துள்ளார்.

பங்கு ஆலயமாக இருந்த இந்த ஆலயம் 1995 ஆம் ஆண்டு ஜன. 25}ம் தேதி திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்த ஆலயத்தைத் திருத்தலப் பேராலயமாக உயர்த்தினார்.

வேண்டும் தரும் பூண்டி மாதாவை வழிபடுவதற்காக நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். இந்தப் பேராலயத்துக்குத் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஜெர்மனி, அரபு நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வந்து வழிபடுகின்றனர்.

இந்த ஆலய வளாகத்தில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியதால் அவர்கள் சாட்சியாக ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்களும் தங்க ஆபரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  

திருப்பலி நேரங்கள்: வார நாட்களில்... காலை 6 மணி, முற்பகல்  11.15 மணி, மாலை  5.15 மணி  

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில்: காலை  6 மணி, காலை 8.30 மணி, முற்பகல் 11.15 மணி, பிற்பகல் 12.30 மணி, மாலை 5.15 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com